Thursday 5 July 2012

காணமல் போன அன்று அவன்..



நேற்றுமுதல் காணவில்லை

சிறு சண்டையினால் தொலைந்துவிட்டான்



தொலைந்த அவனால்

உறக்கம் தொலைக்கிறேன்

உணவு மறக்கிறேன்

கனவுகளும் வரவில்லை

கவிதைகளும் எழுதவில்லை

தொடுத்த பூக்களாய்

தொடருது அவன் நினைவுகளே



கண்டுபிடிப்போருக்கு பரிசு உண்டு

ஆனால்..

கேட்டுவிடாதீர்கள் பரிசாய் அவனையே



அங்க அடையாளங்கள் சொல்கிறேன்

அழகானவன் அவன்

காணமல் போனது

நீல நிற சட்டையிலே



குழந்தை தலைமுடி

கொஞ்சம் மட்டுமே தலையில்

அப்பளபூ நெற்றியை

அடிக்கடி சுருக்குவான்

சிறுபருப்பு கண்கள்

குறுகுறுவென பார்க்கும்



மிளகாய்பழ மூக்கு

மேலும் சிவக்கும் கோவத்திலே

அரிந்த மாங்காய் போல் மீசையோ

குத்தும் முத்தம் குடுக்கையிலே

கால் படி கழுத்து

திரும்பும் பெண்களை பார்த்ததுமே



புல் முளைத்த மார்பு

கரடிபொம்மை போலிருக்கும்

கைகால் முளைத்த

நீண்ட மரம் போல

நெடுநெடுவென இருப்பான்

வாத்து மிதப்பது நீரில்

இவன் நடப்பது நிலத்தில்



இன்னும் சொல்லலாம்தான்

ம்ம்..

நீங்களுமே அவனை விரும்பிவிட்டால்?!



அவன்..

கணக்கிலே புலி

கவிதையிலே வாலி

எங்கேனும் மறைந்திருந்து

எழுதக்கூடும் ஒரு கவிதை

என்னை திட்டியாவது



தொலைவது போல் நடித்து

தூரத்தில் ரசித்திருப்பான்

ன்னுடைய தவிப்புகளை..

பொல்லாத காதல்

'போடா' என்று சொல்லிவிடலாம்

ஆனால்..

விளையாட்டு இன்னும் முடியவில்லையே

No comments:

Post a Comment