Monday 30 July 2012

சனிபகவான் அருள்பாலிக்கும் திருத்தலங்கள்!


திருநள்ளாற்றுத் திருத்தலம்: செந்நெல்லும், செங்கரும்பும் செழித்து வளரும் சோழவள நாட்டிலே - காவிரி ஆற்றின் தென்கரையிலே திருநள்ளாறு என்னும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இறைவளமும், இயற்கை வளமும் செழித்தோங்கும் இத்தெய்வீகப் பதியில், நோக்குமிடமெல்லாம் பச்சைப் பட்டு விரித்தாற் போல் வயல்களைக் காணலாம். இத்திருத்தலம் பேரளம் காரைக்கால் ரயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது. மாயவரம் அல்லது காரைக்கால் சென்றால் திருநள்ளாறு திருத்தலத்தை சுலபமாக அடையலாம்.ஆதிகாலத்தில் இத்திருத்தலத்தைப் பிரம்மதேவன் பூஜித்ததால் ஆதிபுரி எனவும், தல விருட்சம் தருப்பையாதலால், தருப்பாரண்யம் எனவும், முசுகுந்த சக்கரவர்த்தி நகவிடங்கப் பெருமானைப் பிரதிஷ்டை செய்தமையால் நக விடங்கபுரம் எனவும், இங்கு கோயில் கொண்டுள்ள சனிபகவானைப் பூஜித்து, மேன்மையைப் பெற்ற நளமன்னனால் நளேச்சரம் என்றும் பல திருநாமங்களை, இத்திருத்தலம் பெற்றுள்ளது. இத்திருத்தலம் சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. விடங்கர் என்பதற்கு தானே தோன்றியவர், சுயம்பு மூர்த்தி என்பது பொருளாகும். அதனால்தான் இத்திருத்தலத்து, விடங்கத்தியாகரின் திருநாமம் நகவிடங்கர் என்று சொல்லப்படுகிறது. இத்திருத்தலத்தில் எம்பெருமான் ஆடிய திருநடனத்துக்கு உன்மத்த நடனம் என்று பெயர். முற்காலத்தில் பதிமூன்று தீர்த்தங்கள் இருந்தன. இன்று நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், ஸரஸ்வதி தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம், அம்ஸ தீர்த்தம் என்று ஒரு சில தீர்த்தங்கள் மட்டுமே உள்ளன.
நளதீர்த்தத்தில் தீர்த்தமாடுவோர்க்கு அனைத்து கிரஹ தோஷங்களும் விலகும். இங்கு கோயில் கொண்டுள்ள ஈசுவரனையும், ஈசுவரியையும், சனிபகவானையும், திருமால், பிரமன், இந்திரன், முசுகுந்தன், அஷ்டதிக்கு பாலகர், அகத்தியர், சப்தரிஷிகள், அர்ச்சுனன், நளன், கலிங்காதிபதி, வாணி, முதலியோர் பூஜித்து அரும்பெரும் வரங்களைப் பெற்றுள்ளனர். இங்குள்ள திருக்கோயிலில், கோவில் கொண்டுள்ள ஆதிமூர்த்திக்குத் தர்ப்பாணேஸ்வரர் என்பது திருநாமம். அம்பிகையின் திருநாமம் போகமார்த்த பூண்முலையாள். இக்கோயிலில் எழுந்தருளியுள்ள நவக்கிரஹதேவன் சனிபகவான்! மற்ற நவக்கிரஹதேவர்களுக்கு இத்திருக் கோயிலில் சன்னதி கிடையாது. கோயிலுக்குள் நுழைந்ததும் அம்மன் சன்னதிக்கு முன்னால் சனிபகவான் சன்னதி அமைந்துள்ளது. தர்ப்பாணேஸ்வரரை, சனிபகவான் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணம் கூறுகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள சனிபகவான் தமது விக்ரஹத்தின் தாழே தமது சாந்நித்யம் கொண்ட மகாயந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சனி பகவானாலேயே அருளப்பட்டுள்ளதால் அந்த யந்திரத்தின் சக்தி அளவிட முடியாதது. சனிபகவானின் திருச்சன்னதி மிக்கச் சிறப்பும், சக்தியும், மூர்த்திகரமும் பெற்று விளங்குகிறது. சனிபகவானுக்கு உகந்ததும், பெருமை வாய்ந்தததுமான இத்திருத்தலத்தில், எழுந்தருளியுள்ள சனிபகவானின் பெருமைகளையும், மகிமைகளையும் அளவிட முடியாததொன்றாகும்.
நளதீர்த்தம் - நளன் தீர்த்தமாடியது.
பிரம்ம தீர்த்தம் - பிரம்மா தமது தண்டாயுதத்தால் இத்தீர்த்தத்தை நிர்மாணித்து சிவபிரானுக்கு அபிஷேகம் செய்து பூஜித்தது.
ஸரஸ்வதீ தீர்த்தம் - ஸரஸ்வதி சிவனை வழிபட்ட தீர்த்தம்.
அகத்தியர் தீர்த்தம் - அகஸ்தியரால் சிவபிரானுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம்.
அம்ஸ தீர்த்தம் - தேவர்களும் முனிவர்களும் ஒன்று கூடி உருவாக்கிய தீர்த்தம்.
சனிபகவானைத் தரிசிக்க செல்வோர் வடமேற்கு திசையிலுள்ள நளதீர்த்தத்தில் கண்டிப்பாக நீராடி செல்ல வேண்டும். நளதீர்த்தக் கரையிலுள்ள விநாயகருக்கும் நளமன்னன் குடும்பத்தினருக்கும் வணக்கத்தைச் செலுத்த வேண்டும். இந்த நளதீர்த்தத்தை நளனுக்காக இறைவன் அருள் செய்தது வைகாசி மாதம். புனர்பூச நக்ஷத்திரம் ஆகும். அந்நாள் திருநள்ளாற்றில் மிக விசேஷமான வழிபாட்டு நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று திருநள்ளாற்றில் விசேஷ பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் பக்தர்கள் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சனிபகவானைத் தரிசித்து இன்புறுவர். பிதுர்க்களுக்குச் செய்ய வேண்டிய கர்மாக்களைச் செய்ய இயலாது போனவர்கள். அமாவாசைக்கு முதல் நாள் இரவு கோவிலில் தங்கி மறுநாள் தீர்த்தமாடி, தான தருமங்களைச் செய்து, சனிபகவானையும் தர்ப்பாணேஸ்வர ஈசனையும் வழிபட வேண்டும். அங்ஙனம் வழிபடுவோர் பித்ருகளுக்குச் செய்ய வேண்டிய கர்மா பண்ணாத தோஷம் நீங்கி புண்ணியத்தை அடைவர்.
பூர்வஜென்ம பாப வினைகள் விலக, மூன்று சனிக்கிழமைகள் தொடர்ந்து திருநள்ளாறு சனிபகவானை வழிபட்டு அன்னதானம் செய்தால் பாபவிமோசனம் பெற்று சனிபகவான் பேரருளையும் பெறுவர். மார்கழி மாதம் வரும் பவுர்ணமி தினத்தன்று சனி பகவானுக்கு வழிபாடு புரிந்து, எட்டு அந்தணர்க்கு அன்னதானம் செய்தால் மூன்று பரம்பரையாக தொடர்ந்து வரும் சாபங்கள் விலகும். தெண்டி குப்தன் என்ற அரசர் தான் செய்த பாப வினைகளுக்கு விமோசனம் தேடி திருநள்ளாறு வந்து, சனிபகவானை வழிபட்டு வந்தான். சனிபகவான் பேரருளால் சிவபெருமானே தெண்டிகுப்தன் செவிகளில் மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசிக்கும்படியான பெரும் பேறு பெற்றான்.
சனிபகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறும் தர்ப்பாரண்யேஸ்வரர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆதிமூர்த்தி சன்னதியைத் தரிசித்து முதல் பிரகாரத்திற்கு வரவேண்டும். அங்கு சோபன மண்டபம் அமைந்துள்ளது. சோபன மண்டபத்திற்கு வடக்கு முகமாகச் சென்றால் அம்மன் சன்னதியைக் காணலாம். அம்மன் திருநாமம் பிராணேஸ்வரி அம்மன் என்றும் யோக மார்த்த பூண்முனையாள் என்றும் திருநாமம் உண்டு. அம்மன் சன்னதிக்கு அருகில் சுவர்ண பிள்ளையார் சன்னதியைத் தரிசிக்கலாம். அம்மனையும், பிள்ளையாரையும் தரிசித்து அம்மன் சன்னதி முன்புறம் கிழக்கு பக்கம் சனிபகவான் சன்னதி தரிசிக்கலாம். இக்கோவிலில் சனிபகவானுக்கு மட்டும் தனி சன்னதி! மற்ற எட்டு கிரகங்களும் இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. இந்த ஆலயத்தில் கர்ப்பகிரஹத்தில் தெற்கு திசையில் விடங்கதியாகர் மண்டபமும், அர்த்த மண்டபமும், சபா மண்டபமும் அமைந்துள்ளது. இதை தவிர உட்பிரகாரத்தில் பரிவார தேவதைகளை தரிசிக்கலாம். மேற்கு புறம் சித்தர்களும், சப்தரிஷிகளும் வணங்கி வழிபட்ட சிவலிங்க திருமேனியைத் தரிசிக்கலாம். அங்கிருந்து தென்புறமாக வந்தால் சபாநாதர். பைரவர் இருக்கும் மண்டபத்தைக் காணலாம். வலது புறத்தில் லட்சுமியின் திருமேனியை தரிசிக்கலாம். அங்கிருந்து பிரதக்ஷிணமாக வரும் போது முருகப் பெருமான், அறுபத்து மூன்று நாயன்மார்கள், சண்டிகேசுவரரை தரிசிக்கலாம். கோபுர வாயிலுக்கு வெளியே அடையான் முக்தி மண்டபத்தைக் காணலாம். திருநள்ளாற்று நாயகனான சனிபகவானை வழிபடுவோர்க்கு, அப்பெருமான் அவர்களது ஜாதகத்திலுள்ள தோஷங்களை நிவர்த்தி செய்து சகல சௌபாக்கியங்களும் அருளுவார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின் போது, திருநள்ளாற்றுக்கு வந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, சனிபகவானை வழிபடுவோர்க்கு, ஜாதக ரீதியாக ஏதாவது பாதிப்பு இருந்தால் அது நிவர்த்தியாகும். சனிக்கிழமைதோறும் சனிபகவானுக்கு எள் முடிச்சு எண்ணை விளக்கு ஏற்றி ஒன்பதுக்குக் குறையாமல் வலம் வர வேண்டும். சனிபகவானுக்கு ப்ரீதி தரும் சனிதோத்திரங்களையும் மந்திரங்களையும் ஜபிக்க வேண்டும். ஆஞ்சநேயரை தரிசிப்போர்க்கு சனிபகவான் அருள் செய்வார். சனிபகவானுக்கு சங்கு புஷ்பம், நீலோத்தம பூ, துளசி, வன்னிபத்ரம், பில்வபத்ரம் இவற்றால் அர்ச்சனை செய்வது மிக்கச் சிறப்படையதாகும். இந்த வழிபாட்டால் நோய் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐசுவரியத்துடன் வாழ்வர். வைகாசி மாதம், உத்திரட்டாதி நக்ஷத்திரத்தில் தொடங்கி திருநள்ளாற்றில் பதினெட்டு நாட்கள் தொடர்ந்து நடக்கும் பிரம்மோத்ஸவத்தைத் தரிசிப்போர்க்கு சனிபகவான் அவர்களது வாழ்விலுள்ள சங்கடங்களைத் தீர்த்துச் சந்தோஷத்தை வர்ஷிப்பார். சிவபெருமானை வழிபடுவதும், ஆஞ்சநேயரை வழிபடுவதும், சனிபகவானுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். சனிபகவானை மலையாக நம்புவோர்க்கு மலையத்தன கெடுதல் வந்தாலும் அடியோடு மறைந்து போகும். சனிபகவான் அவரை நம்பிக்கையோடு வழிபடுவோர்க்கு நலம் தருபவர். நிலம் தருபவர். நிம்மதி தருபவர். வாழ்வில் என்றென்றும் சகல சவுபாக்கியங்களையும் அள்ளி தருபவர்.
திருநள்ளாறுக்கும் சனிக்கும் என்ன தொடர்பு
பூமத்திய ரேகையில் சூரியனுடைய கதிர்வீச்சு எப்படி அதிகமாகவும், அருகிலும் இருக்கிறதோ, அதேபோல் சனி கிரகத்தினுடைய நீள் வட்ட பாதையில் உச்சமான கதிர்வீச்சு திருநள்ளாறு தலத்தில் அதிகம் என்பது விஞ்ஞான உண்மை. இதனை ஞான திருஷ்டியில் உணர்ந்த முன்னோர் சனிபகவானுக்கு இத்தலத்தில் கோயில் அமைத்தார் கள். சனி கிரகம் தினமும் தன் கதிர்களை இப்பகுதியில் வாரி இறைக்கிறது. அதனால் ஒருநாள் இங்கு தங்கினால் சனிக்கிரகத்தின் கதிர்வீச்சுக்கள் நம் உடலில் பட்டு நமக்கு நன்மையான பலன்கள் நிச்சயம் கிடைக்கும். குறைந்தபட்சம் ஒரு இரவு மட்டுமாவது தங்கி காலையில் சனி பகவானை வழிபடுவது நல்ல பயன் தரும்.
சனிப்பெயர்ச்சிக்குப் பின் 45 நாள் வரலாம்
நவக்கிரகங்கள் ஒன்பதுக்குள் மிகவும் மெதுவாக சஞ்சாரம் செய்பவர் சனி. இதனால் அவரை மந்தன் என்பர். இந்த கிரகம் வான வீதியில் ஒரு பாகை தூரத்தை கடக்க சராசரி ஒரு மாத காலமாகிறது. வக்ரம், அதிசாரம் ஆகிய நிலைகளில் இந்தக் காலம் சற்று மாறுபடும். இது வானியல் கோள்கதிர்களின் முடிவாகும். இந்த முடிவின்படி சனிபகவான் ஒரு பாகையைக் கடக்க ஒரு மாத காலத்தையும் சனிப்பெயர்ச்சி காலமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகையால் சனிப்பெயர்ச்சி நாளை மையமாகக் கொண்டு 15 நாட்கள் முன்பாகவோ, 15 நாட்கள் பின்போ வந்து சனிபகவானை தரிசனம் செய்யலாம். இது பூரண பலன் தரும். சனிபகவானுடைய ரட்சாயந்திரத்தை 45 என்ற எண்ணை மனதில் கொண்டு அமைத்துள்ளனர். இதனால், சனிப்பெயர்ச்சி தினத்தில் இருந்து 45நாட்கள் முன்பு அல்லது பின்பு தரிசனம் செய்யலாம் என்றாகிறது.
சனிப்பெயர்ச்சி திருவிழா
நிகழும் ஸ்வஸ்திஸ்ரீ கர வருஷம், மார்கழி மாதம் 5-ந் தேதி (21-12-2011) புதன்கிழமை, கிருஷ்ணபக்ஷ ஏகாதசி, சுவாதி நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், காலை மணி 7.24 க்கு ஸ்ரீசனீஸ்வர பகவான் கன்னி ராசியை விட்டு துலா ராசிக்கு பிரவேசம் அடைவதை முன்னிட்டு விழுப்புரம் வட்டம், கோலியனூரில் மேற்குமுக ஸ்ரீவாலீஸ்வர சுவாமி திருக்கோயிலில், இராமாயணகாலத்தில் ஸ்ரீவாலியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஸ்ரீகூர்மாங்க சனீஸ்வரர் என்னும் திருநாமம் கொண்டு, பக்தர்களின் சங்கடங்களை உடன் நீக்கியருளி தீர்க்காயுளையும், பொன்னையும், பொருளையும், வெற்றியையும் வாரி வழங்கும், வள்ளல் பிரானாக, வன்னிமரத்தடியில், இந்தியாவில் எங்கும் இல்லா வகையில் ஸ்ரீ சங்கடஹர வினாயகர் உடனிருக்க, திருநள்ளாருக்கு நிகரான பிரசித்திபெற்ற திருத்தலமாக விளங்கும், சரித்திரபுகழ் பெற்ற, மிகப் பழமை வாய்ந்த திவ்ய÷க்ஷத்ரமாகிய கோவில்புரநல்லூர் என்னும் கோலியனூரில் தனியாக தெற்குநோக்கி எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகூர்மாங்க சனீஸ்வர பெருமானின் சனிப்பெயர்ச்சி விழாவின் பலன்கள்:
இந்த சனிப்பெயர்ச்சியினால் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு உத்திரம் 2-ம் பாதம்முதல், அஸ்தம், சித்திரை, ஸ்வாதி, விசாகம், அனுஷம், கேட்டை வரையிலான இராசிகாரர்களுக்கு ஏழரைச் சனியின் காலமாகவும், புனர்பூசம் 4 பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை, கடக ராசி காரர்களுக்கு, அர்த்தாஷ்டம சனியின் காலமாகவும், பூரட்டாதி 4 பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய மீனராசிக்கு அஷ்டம சனியின் காலமாக இருப்பதால் மேற்படி இராசிகாரர்கள் தங்கள் சக்திக்கு தக்கவாறு அர்ச்சனை, அபிஷேகம், சாந்தி ஹோமம், தானங்கள் (தானத்தில் சிறந்தது அன்னதானம்) போன்ற பரிகாரங்கள் செய்து நன்மை அடையலாம் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
ரிஷபம், மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய இராசிகாரர்களுக்கு மிக நன்மையும் ஏனைய ராசிகாரர்களுக்கு வழிபாட்டினால் நல்ல பலன்கள் உண்டாகும். எனவே இந்த இராசிகாரர்கள் ஸ்ரீ சனீஸ்வரபகவானை வழிபடுவது உத்தமம்.
இங்குள்ள சனீஸ்வர பகவானுக்கு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு மார்கழி மாதம் 4-ந் தேதி (20-12-2011) செவ்வாய்கிழமை மாலை 5-00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் அன்னதான பிரசாதமும் வழங்கப்பட இருக்கிறது,
சனிப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
சிவஸ்ரீ வி. சிவக்குமார்,
1/228, வாலீஸ்வரர் கோவில் தெரு, கோலியனூர் அஞ்சல்,
விழுப்புரம்-605 103.
தொடர்புக்கு : 97909 09733, 75982 31159.
பிற தலங்கள்: சனி பகவான் அருள்புரியும் திருத்தலங்கள் பல உள்ளன. அத்திருத்தலங்களுக்குச் சென்று சனிபகவானால் ஏற்படும் தோஷத்திலிருந்து விடுபடலாம்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோரிமேட்டிற்கு அருகிலுள்ள மொரட்டாண்டி என்னும் கிராமத்தில் 27அடி உயரத்தில் நின்றகோலத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரர் இவர்தான். இவர் பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்டவர். பீடத்துடன் சேர்த்து இவரது உயரம் முப்பத்து மூன்று அடியாகும். தங்க நிறத்தில் ஒளிரும் இந்த மகாசனீஸ்வரர் தன் வாகனமான காக்கையுடன் இல்லாமல் கழுகு வாகனத்துடன் திகழ்கிறார். ஆகமங்களில் இவரது வாகனம் கழுகு என்று கூறப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன் காட்சி தரும் இவர், மேல் வலதுகரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்லும் வைத்துள்ளார். கீழ் வலது, இடது கரங்கள் அபயம், வரதம் கொண்டு திகழ்கிறார். இவர் எழுந்தருளியுள்ள பீடத்தில் பன்னிரண்டு ராசிகளின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பங்களும் பறந்தோடிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. இயற்கைச் சூழலில் வெட்டவெளியில் நின்று கொண்டிருக்கும் இந்த சனீஸ்வரருக்கு முன், சுமார் 54அடி உயரமுள்ள மகாகணபதி அருள்பாலிக்கிறார். இந்த விநாயகரின் முதுகில் நாளை வா என்ற வாசகம் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருப்பது தனிச்சிறப்பு. இந்த மகாகணபதி பலவித அரிய மூலிகைச் சாற்றினைக் கொண்டு, விசேஷமாகப் பதப்படுத்தப்பட்ட களிமண்ணால் உருவாக்கப்பட்டவர். பெரிய திருவுருவிலிருக்கும் இந்த கணபதியை நவகிரக சாந்தி கணபதி என்றும் சொல்கிறார்கள். மகாகணபதியின் பின்புறத்தில் உள்ள சிறிய சந்நிதியில் திருமணக்கோலத் துடன் காட்சி தரும்- பஞ்சலோகத்தி னாலான மகாவல்லப கணபதியும், அவருடன் திருமணக்கோலத்தில் தேவசேனாதிபதியும் காட்சி தருகிறார்கள். இவர்களுக்கு அருகில் கோகிலாம்பிகை சமேத கல்யாணசுந்தரரும் காட்சி தருகிறார். மேலும் 16 அடி உயரத்தில் (கல் விக்ரகம்) நவகிரகங்கள் தங்களுக்குரிய வாகனங்களுடன் காட்சியளிக்கின்றன. அத்துடன் அந்தந்த கிரகத்திற்குரிய விருட்சங்களும் அருகில் உள்ளன. ஒவ்வொரு சிலையின் அடியிலும் சிவலிங்கம் உள்ளது. இத்திருத்தலத்தினை சூரியத் தோட்டம் என்று அழைக்கிறார்கள். இங்கு 27 நட்சத்திரத்திற்குரிய மரங்கள், 60 வருடத்திற்கான விருட்சங்கள், 12 ராசிகளுக்கான மரங்கள், ஒன்பது கிரகங்களுக்கான மரங்கள் என 108 மரங்கள் இங்குள்ளன. இங்குள்ள மரங்கள், செடிகள் அனைத்தும் நவகிரக தோஷத்தை நீக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த எழில்மிகுந்த தோட்டத்தின் நடுவில் சுமார் நாற்பது அடி நீளமுள்ள வாஸ்து பகவான் படுத்த நிலையில் அருள்புரிகிறார். இவரைத் தரிசித்தால் வாஸ்து தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். சனிப்பெயர்ச்சியின்போது இந்த மகாசனீஸ்வரரைத் தரிசிப்பது சிறப்பாகும்.
விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் சுமார் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கல்பட்டு என்ற கிராமம். இங்குள்ள சுயம்பிரகாச ஆசிரமத்தில், நின்ற நிலையில் சுமார் இருபது அடி உயரத்தில் அருள்புரியும் சனி பகவானை வழிபட சனியின் தாக்கம் விலகும்.
தேனி மாவட்டம் குச்சனூரில் சனி பகவான் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இத்தலத்தில்தான் சனீஸ்வரரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. சனியின் தாக்கம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் பால், பச்சரிசி, வெற்றிலைப் பாக்கு, பழம், தேங்காய், அவல், கறுப்பு எள், சர்க்கரை, உளுந்து, எள்ளுப் புண்ணாக்கு ஆகியவற்றைப் படைத்து, கறுப்பு வஸ்திரம் அணிவித்து, நல்லெண்ணெயில் விளக்கு ஏற்றி வழிபட்டால் ஏழரைச் சனியால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும் என்று ஜோதிடர் கள் சொல்வர். இவருக்குத் திருவுருவம் இல்லாமல், சற்று அகலமான லிங்கம்போல் காட்சி தருகிறார்.
திருவாரூர் திருத்துறைப்பூண்டி வட்டம் திருக்கொள்ளிக்காட்டில் அமைந்துள்ளது அக்னீஸ்வரர் ஆலயம். இங்குள்ள இறைவி மிருதுபாதநாயகி. இத்தல இறைவனை சனி பகவான் வீழ்ந்து வணங்கி பொங்குசனியாக மாறினார். இங்கு சனி பகவானுக்கு தனிசன்னதி உள்ளது. இறைவன், இறைவியை வழிபட்டபின், சனி பகவானை வழிபட சனி தோஷம் நீங்கும்.
திருவாரூரில் வன்மீகநாதர்-கமலாம்பிகை (தியாகராஜர்) ஆலயம் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சனிபகவான் சிவபெருமானை வழிபட்ட தாகச் சொல்லப்படுகிறது. மேலும், இத்தலத்தில் நவகிரகங்கள் ஒரே நேர்வரிசையில் நிற்பதைக் காணலாம். திருநள்ளாறில் சனி பகவானைத் தரிசிப்பவர்கள் தங்கள் முழு தோஷமும் நீங்க, திருவாரூரில் அருள்புரியும் ஈசனைத் தரிசனம் செய்ய வேண்டும் என்பதால், இத்தலம் தோஷ நிவர்த்தித் தலமாகப் போற்றப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெரிச்சியூர் கிராமத்தில் சிவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள சனி பகவான் தனிச்சன்னதியில் மேற்கு நோக்கி அருள்புரிகிறார். இவரை வழிபட சனியின் தோஷம் விலகும் என்பர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் முருகப் பெருமானை வழிபட்டபின், அங்கு கிழக்கு நோக்கி தனியாகக் காட்சி தரும் சனி பகவானை வழிபட்டால் சனியின் தோஷம் விலகும்.
திருச்சி உறையூரில் கூரை இல்லாத சன்னதியில் எழுந்தருளியிருக்கும் வெக்காளி அம்மனைத் தரிசித்தபின், அக்கோயிலுக்குள் கிழக்கு நோக்கி தனிச்சன்னதியில் அருள் புரியும் பொங்கு சனியை வழிபட்டால் சனியின் தோஷங்கள் நீங்கும். மற்ற கோயில்களில் உள்ள சனி பகவானை வழிபட்டால் அங்கு தரும் விபூதி போன்ற பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்து செல்ல மாட்டார்கள். ஆனால் இவர் பொங்கு சனி பகவான் என்பதால், இவரிடமிருந்து கொண்டு செல்லும் பிரசாதத்தை வீட்டிற்கு கொண்டு சென்றால் மங்களம் பொங்கும் என்பது நம்பிக்கை.
தஞ்சாவூர் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேப்பெருமாநல்லூர். இத்தலத்தில் வேதாந்தநாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இங்குள்ள சனிபகவான், ஈஸ்வரனையே பிடித்துவிட்டேன் என்ற அகந்தையுடன் நிற்கும் கோலத்தில், இடுப்பில் கை வைத்துக் கொண்டுள்ளார். இவர் சிவபெருமானால் இரண்டாகக் கிழிக்கப்பட்டு அதன்பிறகு மீண்டும் உயிர் பெற்றார். எனவே, இக்கோவிலில் அருள்புரியும் ஈசனையும் அம்பாளையும் வழிபட்டபின், சனி பகவானை வழிபட சனியின் தாக்கம் விலகும்.
தஞ்சாவூர் கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில் ராமநாதசுவாமி சமேத பர்வதவர்த்தினி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனிச் சன்னதியில் சனி பகவான் தன் இரு மனைவிகளான மந்தாதேவி, ஜேஷ்டா தேவி, மகன்கள் மாந்தி, குளிகன் மற்றும் தசரத மகாராஜாவுடன் எழுந்தருளியுள்ளார். ஒரு காலத்தில் தசரத சக்கரவர்த்தி தன் நோய் குணமடைய இந்த ஆலயம் வந்து, புண்ணிய தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை வழிபட்டு குணம் பெற்றார். இதனை மெய்ப்பிக்கும் வகையில் தசரதரின் சிலை இங்கே அமைந்துள்ளது. குடும்பத்துடன் அருள்புரியும் இந்த சனி பகவானை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
தஞ்சாவூர் கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவிலில் சனி பகவான் தன் இரு பத்தினிகளுடன் தனிச்சன்னதியில் வாகனமின்றி அருள்புரிகிறார். இவரை குடும்பத்துடன் வழிபட அனைவரின் தோஷங்களும் நீங்கும் என்பர்.
தஞ்சாவூர் குடந்தை மேலக்காவிரி ஆற்றின் தென்கரையில் ஜெய் ஆஞ்சனேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சனேயர், சனி பகவானை தன் காலில் போட்டு மிதித்த படி காட்சி தருகிறார். இந்த ஆஞ்சனேயரை சனிக்கிழமை விரதம் இருந்து நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால், ஆஞ்சனேயர் அருளுடன் சனியின் தாக்கமும் விலகும்.
தஞ்சாவூர் கும்பகோணம் மேலக்காவிரியில் அமைந்துள்ள ஹயக்ரீவர் திருக்கோயிலை சனிப்பிரீதி செய்யும் தலம் எனப் போற்றுகின்றனர். சனிப் பெயர்ச்சிக்காக பரிகாரம் செய்யவேண்டிய ராசிக்காரர்கள், இங்கு வந்து ஆஞ்சநேயரை வணங்கினால், சனி பகவானின் பிடியில் இருந்து தப்பலாம். தவிர, சனீஸ்வரரின் பேரருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்தக் கோயிலில் ஹயக்ரீவர் மற்றும் சரஸ்வதிதேவிக்கு உகந்த தலமாக இருந்தாலும், சனிக்கிழமைகளில் இங்குள்ள அனுமரையும் சனீஸ்வரரையும் பக்தர்கள் வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர். சனிப்பெயர்ச்சி ஹோமமும் இங்கு சிறப்புற நடைபெறுகிறது. வியாபாரம் செழிக்க, திருமணத் தடை நீங்க இங்கு வழிபடுகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்-திருவைகாவூர் செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது பட்டவர்த்தி எனும் ஊர். இங்கு தான்தோன்றிநாதர் ஆலயம் உள்ளது. இங்குள்ள அம்மன் பெயர் தையல்நாயகி. மகா சிவராத்திரிக்குப் பெயர்பெற்ற தலமாக போற்றப்படும் இத்தலம் எமபயம் போக்கும் தலமாகவும் அமைந்துள்ளது. இங்குள்ள தான்தோன்றி நாதரையும் தையல்நாயகி அம்பாளையும் மனதாரப் பிரார்த்தித்தால், மரண பயம் நீங்கும்; நீண்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழலாம் என்கின்றனர், பக்தர்கள். இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு.. இங்கு சனீஸ்வர பகவான், தனிச் சன்னதியில் இருந்தபடி, அழகுறத் தரிசனம் தருகிறார். சனிக்கிழமைகளில் இந்தத் தலத்துக்கு வந்து, சனீஸ்வரரைத் தொடர்ந்து தரிசித்து எள் தீபமேற்றி வழிபடுவதை, தஞ்சாவூர்-கும்பகோணம் மக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். சனிப்பெயர்ச்சி நடைபெறும் நாளில், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் திரளாக வந்து, சனீஸ்வரரைத் தரிசித்துச் செல்கின்றனர். சனீஸ்வரருக்கு உரிய கறுப்பு வஸ்திரத்தைச் சார்த்தி, எள் தீபமேற்றி, எள் சாத நைவேத்தியம் செய்து, சிறப்பு பூஜையில் பங்கேற்றால், சனி தோஷம் விலகும்; சங்கடங்கள் அகலும் என்பது ஐதீகம்!
தஞ்சாவூர் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலம் என்னும் கிராமத்தில் சோழீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் அடி காணமுடியாத பாதாள சனீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இவரை அமிர்தகலச சனீஸ்வரர் என்றும் அழைப்பர். சுயம்புமூர்த்தியாக பாதாளத்தில் இருந்து வந்தவர். இவரது பீடம் பழுது பட்டிருந்ததால், திருப்பணி செய்வதற்காக சனி பகவானின் விக்கிரகத்தை அகற்றுவதற்கு பீடத்தின் அடியில் பள்ளம் தோண்டினார்கள். சுமார் பதினைந்து அடி வரை தோண்டியும் பீடத்தின் அடிப் பகுதியைக் காண முடியாததால் அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டார்கள். அடி காணமுடியாத நிலையில் அப்படியே ஒழுங்குபடுத்தி சீர்செய்தார்கள். இரண்டு கரங்களுடன் பாதாள சனி பகவான் நின்ற நிலையில் கைகூப்பிய வண்ணம் காட்சி தருகிறார். கூப்பிய கைகளுக்குள் அமிர்த கலசம் உள்ளது. இவரை பொங்கு சனி என்றும் சொல்வர். சனி பகவானை வணங்கும்போது நேரிடையாக அவரைப் பார்க்காமல், சற்று பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லும். ஏனெனில், சனியின் பார்வை நேரிடையாக நம்மீது படுவது மேலும் துன்பத்தைக் கொடுக்கும் என்பர். ஆனால், இங்கு எழுந்தருளியுள்ள பாதாள சனீஸ்வரரை நேரிடையாக நின்று வழிபடலாம் என்கிறார்கள். கைகளில் அமிர்த கலசம் இருப்பதால் நமக்கு அமிர்தமான வாழ்வினை வழங்குவார் என்பது நம்பிக்கை.
மதுரை சோழவந்தானில் உள்ளது சனீஸ்வர பகவான் திருக்கோயில். இங்குள்ள மூலவர் சுயம்புவாகத் தோன்றியவர். விருச்சிக ராசிக்காரர்களின் பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது. சனிதிசை, ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனியால் பூமி, செல்வத்தை இழந்தவர்கள், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் இத்தலத்தில் பூஜை செய்தால் இழந்ததை அனைத்தும் பெறுவர் என்பது நம்பிக்கை.
நாகப்பட்டினம் வைதீசுவரன் கோயிலில் வைத்தியநாதரும், தையல்நாயகியும் அருள்பாலிக்கின்றனர். பொதுவாக நவக்கிரகங்கள் திசை மாறி இருக்கும். ஆனால் இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் சிவன் சன்னதிக்கு பின்புறம், ஒரே நேர்கோட்டில் நின்று வைத்தியநாதருக்கு அடங்கி, கிரக பலனை பக்தர்களுக்கு சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களை நீக்குவதாக நம்பிக்கை. மற்ற கோயில்களில் நவக்கிரக சன்னதி சிவன் சன்னதியின் முன்பக்கமாகவே அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மட்டுமே பின்பக்கம் உள்ளது. அங்காரகன்(செவ்வாய்) பகவான் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் தவக்கோல சனிபகவான் சன்னதி கொண்டுள்ளார். காக வாகனத்தில் அமர்ந்துள்ள இவரது வலக்கையில் தண்டம் இருக்க, இடக்கை வரத முத்திரை காட்டுகிறது.
கரந்தை சிதாநாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சனிபகவான் வில், அம்பு, திரிசூலம் ஆகியவற்றை ஏந்தியவராகக் காட்சியளிக்கிறார்.
நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் கோயிலில் எழுந்தருளியுள்ள 18அடி உயர சாளக்கிராம ஆஞ்சநேயரையும், கன்னியாகுமரி சுசீந்திரம் திருத்தலத்தில் அருள்புரியும் 18 உயர ஆஞ்சனேயரையும் வழிபட்டால் சனி பகவான் உங்கள் பாதையில் குறுக்கிடமாட்டார். ஏனெனில், விநாயகரை எப்படி சனி பகவானால் பிடிக்க முடியவில்லையோ அதேபோல் ஆஞ்சனேயரும் சனி பகவானால் பிடிக்க முடியாதவர். எனவே, ஆஞ்சனேய சுவாமியை வழிபட சனியின் தோஷம் விலகும்.
திருச்சி ஜங்ஷன் அருகிலுள்ள கல்லுக்குழி என்னுமிடத்தில் எழுந்தருளியுள்ள ஆஞ்சனேய சுவாமி மிகவும் கீர்த்தி பெற்றவர். மேலும், இக்கோயில் வளாகத்தில் சக்கரத்தாழ்வாரும், நரசிம்மமூர்த்தியும் அருள்புரிவதால், ஒரே சமயத்தில் இந்த மூர்த்தங்களை வழிபட சனியின் தோஷம் விலகும் என்பர்.
திருச்சியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது உத்தமர்கோவில். இங்கு அருள் புரியும் சப்தநாதர்களை (சப்தகுருக்கள்) ஒரே சமயத்தில் வழிபடுவதால் சனியின் தாக்கம் நீங்கும். மேலும் இக்கோவிலுக்கு அருகில் தென்பண்டரிபுரம் என்னும் திருத்தலம் (பிச்சாண்டார் கோவில்) உள்ளது. இங்கு ராதா, ருக்மிணி சமேத பாண்டுரங்கன் அருள்பாலிக் கிறார். மிகவும் பழமையான இக்கோவிலில் எழுந்தருளியுள்ள பாண்டுரங்கனுக்கு சனிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து, துளசி மாலை அணிவித்து ஆலிங்கனம் செய்து கொண்டால், சனியின் அனைத்துத் தோஷங்களும் நீங்கும் என்பர். ஆலிங்கனம் என்பது வழிபாடுகள் முடிந்தபின், மூலவரான பாண்டு ரங்கனைக் கட்டிப்பிடித்து தழுவிக் கொள்வது ஆகும். அப்போது பகவான் பாண்டுரங்கன் நம் துன்பங்களைத் தீர்த்து ஆசீர்வதிப்பதாக நம்பிக்கை. மேலும், நம்முடன் பகவான் நட்புடன் இருப்பதாக ஐதீகம். இங்கு பிரசாதமாகக் கொடுக்கப்படும் புக்கா பொடி என்னும் கருப்பு நிற குங்குமம் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப் படுகிறது. இதனை சனிக்கிழமை களில் நெற்றியில் இட்டுக்கொண்டால் சனி தூரமாகப் போய்விடுவார்.
பெரும்பாலான பெருமாள் கோயில்களில், சக்கரத்தாழ்வார் தனிச்சன்னதியில் அருள் பாலிப்பது வழக்கம். இவரை சனிக்கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும். மேலும், இவரது பின்புறத்தில் நரசிம்மர் எழுந்தருளியிருப்பார். ஒரே சமயத்தில் சக்கரத்தாழ்வாரையும் நரசிம்மரையும் வழிபடுவதால் சனி அருகே நெருங்க மாட்டார் என்பர். நரசிம்ம அவதாரத்தினைக் கண்டால் சனி பகவானுக்குப் பயம் என்ற கருத்து நிலவுகிறது.
மராட்டிய மாநிலம் சிங்கணபுரத்தில் சனி பகவான் வெட்ட வெளியில் உயர்ந்த மேடையில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். கரிய நிறத்தில் ஐந்தடி ஒன்பது அங்குல உயரமும், ஓரடி ஆறு அங்குல அகலமும் உடைய கல் பலகைதான் திருமேனி. இவரை ஆண்கள் மட்டுமே அருகில் சென்று வழிபட வேண்டும். அதுவும் சிவப்பு ஆடை அணிந்திருக்க வேண்டும். பெண்கள் இவரை அருகில் சென்று வழிபட அனுமதிப்பதில்லை. சிறிது தூரத்திலிருந்தே தரிசிக்கலாம். இந்த ஊரினை சனி பகவான் காவல் காக்கிறார் என்பது ஐதீகம். ஆண்கள் காவித்துண்டு, வேட்டி அணிந்து நீராடி, ஈரம் சொட்டச் சொட்ட நடந்து வந்து பீடத்தின் மீதேறி நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால், சனியால் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் குறைவதுடன் சனியின் ஆசியும் கிட்டும் என்பது நம்பிக்கை. இதனால் பதவி உயர்வு, திருமண பாக்கியம், மக்கட்செல்வம் கிட்டும் என்பர்.

No comments:

Post a Comment