Monday, 30 July 2012

குழந்தை கவிதைதிருமணம் ஆன தம்பதியரிடம், குழந்தைக்கான வருகை பதிவாகிவிட்டதா என்பதை அறிய, எதுவும் விசேஷம் உண்டா? என்று கேட்பது இன்றைய சமுதாயத்தில் தவிர்க்க முடியாததாகிவிட்டது.

இந்த சூழ்நிலையில், திருமணம் ஆன ஒரு வருடத்தில் தாய்மை அடைந்த தனது மனைவியின் வயிற்றில் உள்ள தனது குழந்தைக்கு ஒரு தந்தை எழுதிய கடிதம் இது...


என்
பத்தரைமாத்து தங்கமே...

என் உலகமான பூமியில்
நான் நலம்...
உன் உலகமான
என்னவள் கருவறையில் நீ நலமா?

இதுவரை
நான் ஆக இருந்தவன்
நானும், அவளும் ஆகி
இப்போது
நாம் ஆகப் போகிறோம்...

உன்
முகம் காணும் ஏக்கம்
எனக்கு மட்டுமல்ல;
என்னவளும் தினம் தினம் ஏங்குகிறாள்...

நாமெல்லாம்
நாம் ஆனப் பிறகு...
நாம் அனுபவிக்கும்
சில சந்தோஷங்கள்
நம்மை சந்தோஷப்படுத்துவதுடன்
உன்னையும் பக்குவப்படுத்தும்
என்ற நம்பிக்கையில்
கடிதத்தை தொடர்கிறேன்...

எனக்கும், உன் அம்மாவுக்கும்
திருமணமாகி மூன்று மாதமாகியிருக்கும்...
எதுவும் விசேஷம் உண்டா? என்று
வாயெடுக்காத சொந்தங்கள் இல்லை
எங்களுக்கும்
சந்தோஷமாக பதில் சொல்ல ஆசைதான்
ஆனால்...
உன் வருகைதான் சற்று தாமதமானது...

உன்னால்
நாங்கள் பெற்றோர் ஆகப்போகிறோம் என்ற
ஒற்றை சந்தோஷத்திற்காக
நானும், உன் அம்மாவும்
ஏங்கிய நாட்கள்
பல இரவுகளுக்கு மட்டுமே வெளிச்சம்!

நானாவது
உன் வருகைக்காக
காத்திருக்க தயாரானாலும்
உன்னை சுமப்பவள் - சுமந்தவள் தயாரில்லை...

உன்னை நினைத்து... நினைத்து...
அவள் சிந்திய
கண்ணீர் துளிகளின் கதை
என்னைவிட
நம் வீட்டு
தலையணைகளுக்கே நிறைய தெரியும்!

நாளும் கடந்தது
நல்ல நாளும் வந்தது...

உன் வருகைப்பதிவை உறுதிசெய்ய
ஆஸ்பத்திரிகளில்
கியூவில் நின்றதற்கு பலனும் கிடைத்தது!

எனக்கும், உன் அம்மாவுக்கும்
திருமணமாகி 10 மாதங்கள் இருக்கும்...
அந்த ஓர்நாள் விடியல்
மிகுந்த சந்தோஷத்தோடு மலர்ந்தது!

உன் வருகை பதிவாகிவிட்டது
என்று அறிந்தபோது...
எங்களை அறியாமல் சிந்திய
கண்ணீர்த் துளிகளும் இனித்தன!
ஓ...
இதுதான் ஆனந்தக் கண்ணீரோ..?


நீ
என்னைப்போன்று
பிறக்க வேண்டும் என்பது
உன் அம்மாவின் ஆசை மட்டுமல்ல;
என் பேராசையும்கூட!

அதற்காக...
மினி பழக்கடையாக மாறிய
நம் வீட்டு கபோர்ட்டையும்
வெளிநாட்டில் இருந்து வரவழைத்த
குங்குமப்பூவையும் நீயும் மறந்துவிடாதே...

பத்து மாதங்கள்
கருவறையில் குழந்தையை சுமப்பது
எவ்வளவு கஷ்டம் என்று
உன் அம்மாவைப் பார்த்துதான்
நானும் தெரிந்துகொண்டேன்...

அந்த பழங்கள் ஆகாது...
இந்த உணவுகள் ஆகாது...
என்ற கட்டுப்பாடுகளுக்கு இடையே
உன் அம்மா உட்கொண்ட
சிறு உணவில்
நீயும் வளரத் தொடங்கினாய்...

முதல் மூன்று மாதங்கள்
அவள் பட்ட கஷ்டத்திற்கு
அளவே இல்லை!
விழித்திருந்த பாதிநேரம்
மயக்கமாகியே திரிந்தாள்...
உண்ட உணவில் பாதிக்கும்மேல்
வாந்தியாய் வெளியே வந்ததுதான் மிச்சம்...
அந்த களைப்பில்
சற்றே மெலிந்தும் போனாள்
என்னவள் - உன் அருமைத்தாய்!

நான்கு மாதத்திற்கு பிறகுதான்
ஒரு உற்சாகம் பிறந்தது...
நன்றாக சாப்பிட்டதால்
நீயும்
மளமளவென்று வளர ஆரம்பித்தாய்...

ஆனால்
இரவில்தான் உனக்காய்
அவள் அனுபவித்தாள்
சில சோதனைகள்!

இடதுபுறம்தான்
ஒருக்களித்து படுக்க வேண்டும்
என்று டாக்டர் சொன்னதால்
அவள் தூக்கத்தை
தொலைத்த இரவுகள்
ஏராளம்... ஏராளம்...

அந்த தூக்கத்தில்
சற்றே புரள வேண்டும் என்றாலும்கூட
எழுந்து உட்கார்ந்து
அதன்பின்தான்
தூக்கத்தைத் தொடர்ந்தாள்...

அதேநேரம் -
அந்த சோதனைகளிலும்
சுகம் இருக்கத்தான் செய்தது...

எப்போதாவது
கிச்சுகிச்சு மூட்டும்
உன் செய்கைகளில்
என்னவள்
அந்த சோதனைகளை மறந்தாள்...
தாயென்ற பக்குவம் பெற்றாள்!

உனக்காய் - நமக்காய்
அவள் சுமந்த வேதனைகளை
நீயும் அறிய வேண்டும்
என்பதற்காகத்தான் இந்த நீண்ட கடிதம்...

உன் வருகைக்காக
ஆவலோடு காத்திருக்கிறோம்...

நீயும் வரவேண்டும்
ஒரு சாதனையாளனாய் நீ மாறும்
வரம் எங்களுக்குத் தர வேண்டும்!
- இப்படிக்கு உன் அன்புத் தந்தை

No comments:

Post a Comment