Tuesday 31 July 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 2 - சக்தி வழிபாடு






சத்தியே தயாபரியே ஞானரூபி
சாம்பவியே மனோன் மணியே கபாலிசூலி
முத்தியே வேதாந்தபரையே அம்மா
முக்குணமே முச்சுடரே மாயாவீரி
வெற்றியே மூவர்களுக் கருளாய்நின்ற
வேணிகையே சாமளையே பொன்னேமின்னே
சித்திடையே சோதிடமும் முன்னுரையா
சின்மயத்தின் கணேசனுட காப்பாம்பாரே.


சக்தி என்றும் கருனை வடிவானவள் என்றும், ஞான வடிவினள் என்றும், ஜம்புகேசுவரரின் மனத்திற்குகந்த சாம்பவியென்றும், மனத்திற்கு மகிழ்ச்சித்தரும் சிந்தாமணி போன்ற அன்னையென்றும், கபாலியென்றும், சூலியென்றும் மூவுலகோர்க்கும் முத்தியருளும் வேதமுதலாகியும் முடிவாகியும் அமைந்த தாயென்றும், பரையென்றும் பலவாறாய் அமைந்து [சத்துவ, ராஜஸ, தாமஸம் ஆகிய] முக்குண வடிவானவளும், அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய முச்சுடர் ஆனவளும், மாயை வடிவினளும், வீரமுடையவளும் பிரம்மன், அயன், அரன் ஆகிய முத்தேவர்களுக்கும் வெற்றியினை நல்கவல்ல அருள் வடிவினராய் முறையே சரஸ்வதி, இலக்குமி,பார்வதி என்று எவ்வுலகும் பரவும் பராசக்தியே உன்றன் மின்னல் போன்ற இடையினிலே மகிழ்வுடனே சின்மய முத்திரையோடு வீற்றிருந்து அருளும் கணேசனது அருளால் இந்நூலினைப் படைக்கிறேன். [அவர் என்றென்றும் என் துணையிருப்பார்.]

இனி உலகனைத்தும் பலவாறாய்ப் பரவும் பரையே சக்தித்தாயே உன் மைந்தன் கணேசருடைய அருள் நோக்கால் நான் படைக்கும் இந்நூலை அவர் பரிவுடன் காப்பார். [எ-று]

ஜோதிடம் பயில்பவரும், சொல்பவரும் அன்னை பராசக்தியின் அருளைப் பெற அவளை ஏதாவது ஒரு ரூபத்தில் வணங்கி வழிபட வேண்டும். அன்னையின் அருளைப் பெறாமல் ஜோதிடராக முடியாது என்று புலிப்பாணி விளக்குகிறார்.

No comments:

Post a Comment