Tuesday 31 July 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 26 - சிம்ம இலக்கின ஜாதகர்


பாரப்பா சிங்கத்தில் செனித்த பேர்க்கு
பவுமனுமே திரிகோண மேறிநிற்க
சீரப்பா செம்பொன்னும் செல்வம் பூமி
சிவ சிவா சிக்குமடா சென்மனுக்கு
வீரப்பா மற்றயிடந் தனிலேநிற்க
வெகுமோசம் வருகுமடா வினையால் துன்பம்
கூறப்பா போகருடா கடாக்ஷத்தாலே
கொற்றவனே புலிப்பாணி குறித்திட்டேனே.


சிம்மத்தில் பிறந்த அதாவது சிம்மலக்கின ஜாதகருக்கு செவ்வாய்க் கிரகமானது திரிகோண ஸ்தானத்தில் அமைந்தால் பெருஞ்சீர் வாய்க்கும்: செம்பொன் சேரும், செல்வமும் பூமியும் வாய்க்கும். இவையும் சிவபரம்பொருளின் பேரருளேயாகும். ஆனால் அத்திரிகோண ஸ்தானம் தவிர வேறிடத்தில் அமர்ந்திருப்பின், அவனால் மிகுந்த துன்பமும் செய்வினை முதலிய துன்பங்கள் ஏற்படுதலும் உண்டாகும். எனது சற்குருவாகிய போக மகாமுனிவரின் பேரருளால் கூறினேன். இக்குறிப்பினை அறிந்து ஜாதகனுக்குப் பலன் கூறுவாயாக. [எ-று]

இப்பாடலில் சிம்ம இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment