Tuesday 31 July 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 1 - கடவுள் வாழ்த்து

புலிப்பாணி ஜோதிடம் 300

புலிப்பாணி என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவர். இவர் பழனி மலையில் ஜீவ சமாதியான போகரின் சீடர். போகரின் தாகம் தீர்க்க புலியின் மீது அமர்ந்து நீரெடுத்து வந்ததால் (புலி + பாணி) இப்பெயர் பெற்றார். இவரால் வைத்தியம் 500, சாலம் 325, வைத்திய சூத்திரம் 200, பூசா விதி 50, சண்முக பூசை 30, சிமிழ் வித்தை 25, சூத்திர ஞானம் 12 மற்றும் சூத்திரம் 90 எனப் பல நூல்கள் எழுதப்பட்டு உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.

ஒரு மனிதன் பிறக்கும் போது வானில் உள்ள கிரக மண்டலங்களின் அமைப்பு மற்றும் கிரகங்களின் நிலை, நட்சத்திர அமைப்பு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் குண நலன்கள் மற்றும் வாழ்க்கைப் பாதையைக் கடக்கும் போது ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றினைத் துல்லியமாக தனது ஞான திருஷ்டியின் மூலம் தெரிந்து கணக்கீடாக கணிக்கும் வகையில் வகுத்தளித்துள்ளனர்.

இத்தகைய ஜோதிட சாஸ்திர நூல்களில் தனி சிறப்பாக சொல்லக் கூடியது புலிப்பாணி சித்தரின் ”புலிப்பாணி ஜோதிடம் 300” என்னும் நூலாகும். இதில் உள்ள 300 பாடல்களும் மனித வாழ்வில் சரியாக பொருந்தி வருகிறது. இதன் மூலமாக ஒருவருடைய வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்க போகும் செயல்கள் எல்லாம் துல்லியமாக அறிந்து கொள்ள இயலும்.

இந்த நூலைப் படிப்பதற்க்கு முன்பாக ஜோதிட விதிகள் சற்று தெரிந்திருந்தால் இதிலுள்ள பாடல்கள் தெளிவாக விளங்கும்.


ஆதியெனும் பராபரத்தின் கிருபைகாப்பு


அன்பான மனோன்மணியாள் பாதங்காப்பு
       சோதியெனும் பஞ்சகர்த்தாள் பாதங்காப்பு
சொற்பெரியகரிமுகனுங் கந்தன்காப்பு
                 நீதியெனு மூலகுரு முதலாயுள்ள
நிகழ்சித்தர்போகருட பாதங்காப்பு
                 வாதியெனும் பெரியோர்கள் பதங்காப்பாக
வழுத்துகிறேன் ஜோசியத்தின் வன்மைகேளே

ஆதியென்றும் பராபரை என்றும் அகிலமெல்லாம் போற்றும் அகிலாண்ட நாயகியாளின் திருவடிக்கமலங்கள் எனக்குக் காப்பாக அமையும். என்றென்றும் எவ்வெவர்க்கும் அன்பு வடிவாக இயங்கி ஆதரித்திடும் மனத்திற்குகந்த இன்பம் அருளும் மனோன்மணியான வடிவுடை நாயகியின் செந்தாள் மலர்க்கமலம் எனக்குக் காப்பாக அமையும். மற்றும் சோதிவடிவாக இலங்கி மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளின் நுகர்வாய் அமைந்த ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசையென்னும் ஐம்புல நுகர்வுகளுக்கு உரிமை கொண்ட தெய்வங்கள், எனக்குக் காப்பாக அமைவதுடன் ஓங்காரத்துட் பொருளைத் தன்னுருவிலேயே கொண்ட வேலமுகத்தானும் அவனது விருப்பினுக்குரிய அருட்பெருங் கடலான திருமுருகனும் எனக்கு [என்கவிக்கு] காப்பாக அமைவதுடன் நீதியினையே என்றும் பொருளாய்க் கொண்டு இலங்குகின்ற பிரகஸ்பதி முதலாக உள்ள சித்தர்களில் என் குருவாகிய போகரது திருவடிகளும் எனக்குக் காப்பாக அமைவதுடன் என்றென்றும் தங்கள் அருள் நோக்கால் ஆதி முதல் என்னை ஆதரிக்கும் சான்றோர் தமது திருவடிக்கமலங்களைச் சிரசில் சூடி நீதியான முறையில் சோதிடத்தின் வண்மையினை நான் உரைப்பேன். கேட்டுப் பயனடையுங்கள்.

(இனி வாழ்த்தாவது தான் எடுத்துக் கொண்ட முயற்சி இனிது முடிதற் பொருட்டு ஏற்புடைக் கடவுளையோ வழிபடு கடவுளையோ வாழ்த்துவதாம்) இது அகலவுரை.

No comments:

Post a Comment