Monday 30 July 2012

கர்ஜித்த வீரத்துறவி!



அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1893 செப்டம்பர் 11-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்தியாவின் சார்பில் சுவாமி விவேகானந்தர் கலந்துகொண்டு பேசினார். அந்த மாநாட்டின் மூலம் இந்து மதத்திற்கு புதிய எழுச்சியை கொடுத்தார் அவர்.

உலக வரலாற்று ஏட்டில் முக்கிய இடம் பிடித்த அந்த மாநாட்டில் விவேகானந்தர் ஆற்றிய 6 உரைகளில் இருந்து சில துளிகள் இங்கே உங்கள் பார்வைக்கும்...


மாநாட்டின் முதல் நாளான செப்டம்பர் 11-ந் தேதி பகவத்கீதையில் இருந்து ஒருசில வரிகளை மேற்கோள் காட்டி பேசினார் விவேகானந்தர்.

"யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயற்சி செய்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன" என்பவைதான் அந்த வரிகள்.

மாநாட்டில் இரண்டாம் முறையாக செப்டம்பர் 15-ம் தேதி கிணற்றுத்தவளை கதையை அமெரிக்க மக்களுக்கு விளக்கிக் கூறினார்.

மாநாட்டில் மூன்றாம் முறையாக செப்டம்பர் 19-ம் தேதி மிக நீண்ட உரை நிகழ்த்தினார். அந்த உரையின் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள உருவ வழிபாடுகள் பற்றி குறிப்பிட்டார்.

"இந்தியாவில் உருவ வழிபாடு என்பது பயங்கரமான ஒன்று அல்ல. விலை மகளிரை உருவாக்கும் இடமும் அல்ல. உயர்ந்த ஆன்மிக உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கு, பக்குவப்படாதவர்களின் முயற்சிதான் இந்த உருவ வழிபாடு. இந்துக்களிடம் தவறுகள் உண்டு; சிலவேளைகளில் அதற்கு விதிவிலக்குகளும் உண்டு. ஆனால், ஒன்றை கவனியுங்கள்; அவர்கள் தங்கள் உடல்களை வருத்திக்கொள்வார்களேத் தவிர, அடுத்தவனின் கழுத்தை அறுக்க மாட்டார்கள். இந்துமத வெறியன் தன்னை தீயில் கொளுத்திக் கொள்வானேத் தவிர பிறரை அல்ல. சூனியக்காரிகள் கொளுத்தப்பட்டதற்கு எப்படி கிறிஸ்தவ மதம் பொறுப்பில்லையோ, அதேபோன்று இதற்கு இந்து மதம் பொறுப்பல்ல" என்றார்.

செப்டம்பர் 20-ம் தேதி நான்காவது உரையின்போது சில விமர்சனங்களை செய்த விவேகானந்தர், ஒரு அன்பான வேண்டுகோளையும் அன்றைய கிறிஸ்தவர்களுக்கு விடுத்தார்.

"இந்தியா முழுவதும் சர்ச்சுகளை கட்டுகிறீர்கள். கீழ்த்திசை நாடுகளின் அவசரத்தேவை மதம் அல்ல. தேவையான மதம் அவர்களிடம் உள்ளது. இந்தியாவில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தொண்டை வற்றக் கூக்குரலிடுவது உணவுக்காகத்தான். அவர்கள் உணவு கேட்கிறார்கள், நாம் கற்களைக் கொடுக்கிறோம்" என்றார்.

செப்டம்பர் 26-ம் தேதி ஐந்தாவது உரையின்போது புத்த மதம் பற்றி பேசி-னார் சுவாமி. அவர் மேடையில் பேச வருவதற்கு முன்பு, "இந்தியாவின் சுவாமி விவேகானந்தர் புத்த மதம் பற்றி விமர்சனம் செய்வார்" என்று அறிவித்தார்கள்.
அதுபற்றி குறிப்பிட்டு சுவாமி பேசும்போது,

"நான் பவுத்தன் அல்ல என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனாலும் நான் ஒரு பவுத்தன். சீனாவும், ஜப்பானும், இலங்கையும் அந்த மகானின் உபதேசங்களை பின்பற்றுகின்றன. இந்தியாவோ அவரை கடவுளின் அவதாரம் என்று போற்றி வணங்குகிறது. நான் பவுத்த மதத்தை விமர்சிக்கப் போவதாக சற்று முன் கூறினார்கள். அதன் பொருளை நீங்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். கடவுளின் அவதாரம் என்றுகூறி நான் வழிபடுபவரை நானே விமர்சிப்பது என்பது என்னால் நினைத்-துக்கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால், புத்த பெருமானை அவரது சீடர்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் எங்-கள் கருத்து. இந்து மதத்திற்கும், இந்நாளில் பவுத்த மதம் என்று கூறப்படுகிறதே அதற்கும் இடையே உள்ள உறவு, யூத மதத்திற்கும், கிறிஸ்தவ மததத்திற்கும் உள்ள உறவுதான்" என்றார்.


செப்டம்பர் 27-ம் தேதி நிறைவுரையாற்றும்போது, உலக சமய மாநாடு எதை எடுத்துக்காட்டுகிறது என்பது பற்றி ஆவேசமாக பேசினார்.

"புனிதம், தூய்மை, கருணை - இவை உலகின் எந்தவொரு பிரிவின் தனிச்சொத்தும் அல்ல என்பதையும், மிகச்சிறந்த ஒவ்வொரு சமயப் பிரிவும் பண்புள்ள ஆண்களையும், பெண்களையும் தோற்றுவித்து இருக்கிறது என்பதையும் இந்த மாநாடு நிரூபித்துள்ளது. இந்த சாட்சியங்களுக்கு முன்பு, தம் மதம் மட்டும்தான் தனித்து வாழும், மற்ற மதங்கள் அழிந்துவிடும் என்று யாராவது கனவு காண்பார்கள் என்றால், அவர்கள் குறித்து நான் ஒன்றை என் இதய ஆழத்தில் இருந்து சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்; இனி, ஒவ்வொரு மதத்தின் கொடியிலும், "உதவி செய்", "சண்டை போடாதே", "ஒன்றுபடுத்து", "அழிக்காதே", "சமரசமும் சாந்தமும் வேண்டும்", "வேறுபாடு வேண்டாம்" என்று எழுதப்படும் என்று அவர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்று கர்ஜித்தார் விவேகானந்தர்.

No comments:

Post a Comment