Tuesday, 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 143


பாரப்பா பவுமனுக்கு நாலேழ்வெள்ளி
பகருகின்ற வெள்ளிக்கி ஐந்தேழ்லாபம்
சீரப்பா சேய்நிற்க சென்மந்தானும்
சிறப்பாக மேதினியில் நலமாய் வாழ்வன்
கூறப்பா குடிநாதன் கேந்திரகோணம்
கொற்றவனே வாகனமும் தொழிலுமுள்ளோன்
பாரப்பா பாக்கியமும் நிலமும்கிட்டும்
பகருவாய் திசைபுத்தியில் பலிக்குந்தானே


மற்றொரு கருத்தினையும் நீ மனங் கொண்டு கேட்பாயாக! பவுமனென்று பலராலும் புகழப்படும் செவ்வாய்க்கு 4,7 ஆகிய இடங்களில் சுக்கிரன் நிற்கவும், சுக்கிரனுக்கு 5,7,11 ஆகிய இடங்களில் சிறப்புடைய செவ்வாய் நிற்கவும் பிறந்த சாதகன் இந்தப் பூமியில் மிகவும் சிறப்போடு வாழ்பவனேயாவான். இலக்கினாதிபதி இச்சாதகனுக்கு கேந்திர திரகோணத்தில் அமையின் வாகன யோகமும் நற்றொழிற் சேர்க்கையும், எல்லா வகையான பாக்கியங்களும் நல்ல விளைச்சலைத் தரும் நிலமும் வாய்க்கும். இதனை தசாபுத்தி அறிந்து இதமாகக் கூறியருள்வாயாக என்று போகரது அருளாணையால் புகன்றேன் நான்.

No comments:

Post a Comment