மங்கையும் மண வாழ்க்கையும்
பெண்ணிற்கு செல்வி என்ற பட்டம் மறைந்து
திருமதியாக்குவது திருமண பந்தம் தான். ஒரு ஆணானவன் திருமணம் செய்து கொண்டால் தம்
சொந்தங்களுடனேயே வாழ்வான் ஆனால் பெண் என்பதால், தான் பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு
பெற்றோர் மற்றும் சொந்தங்களைப் பிரிந்து புதிதாக ஒரு பந்தத்துடன் இணைவதுதான்
திருமணம்.
அதன்பிறகு அவள் கணவனின் குடும்பத்தாரை பற்றி
புரிந்து கொண்டு,அவரவரின் குணநலன்களுக்கு ஏற்ப தன்னையும் மாற்றிக் கொண்டு, தன்னுடைய
இல்வாழ்க்கையைத் தொடங்குகிறாள். திருமண பந்தம் என்பது சிலருக்கு இளம் வயதிலேயே
நடக்கக்கூடிய யோகமும் சிலருக்கு மத்திய வயதிலும், சிலருக்கு தாமத திருமணமும், ஒரு
சிலருக்கு திருமணமே நடைபெறாமல் கன்னியாக வாழக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும்.
சிலருக்கு காதலித்தவரையே கைபிடிக்கும் யோகமும் உண்டாகும். காதல் என்பது வரும் போது
அங்கு ஜாதி மதத்திற்கு வேலையில்லை என்பதால், கலப்பு திருமணமும் கலந்து
விடுகிறது.
திருமண வாழ்க்கை
ஜோதிட ரீதியாக அவரவரின் ஜென்ம லக்னத்திற்கு 7ம்
பாவமானது களத்திர ஸ்தானமாகும். நவக்கிரகங்களின் சுக்கிரன் களத்திர காரகன்
என்றாலும், பெண்களுக்கு செவ்வாயையும் களத்திர காரகனாக கூறுவார்கள். ஒரு பெண்ணின்
ஜாதகத்தில் 7ம் வீடும், செவ்வாய் சுக்கிரனும் பலமாக அமைந்து கிரகச் சேர்க்கையின்றி
சுபபார்வையுடன் இருந்தால் மணவாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இளமைத் திருமணம்
ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டில் சுபக்கிரகம் என
வர்ணிக்கப்படக் கூடிய குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், புதன் அமையப் பெற்றோ,
7ம் வீட்டு அதிபதியாக இருந்தோ, 7ம் வீட்டையும், 7ம் அதிபதியும் குரு பகவான் பார்வை
செய்தோ அமையப் பெற்ற ஜாதகிக்கு திருமணம் என்பது இளமையிலேயே நடைபெறக்கூடிய யோகம்
உண்டாகும். 7ம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானத்தில் குரு பார்வையுடன் அமையப்
பெற்று, பருவ வயதில் பாவக்கிரகங்களின் தசாவோ, புக்தியோ நடக்காமல், சுபக்கிரகங்களின்
தசாபுக்தி நடைபெற்றால் இளம் வயதிலேயே திருமணம் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.
மத்திம வயதில் திருமணம்
ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டில் சூரியன்,
செவ்வாய் போன்ற பாவிகள் இருந்தாலும், 7ம் வீடு சனியின் வீடாக இருந்தாலும், சுபர்
பார்வை 7ம் வீட்டிற்கும், 7ம் அதிபதிக்கும் இருந்தால் மத்திம வயதில் திருமணம்
நடைபெறும்.
தாமத திருமணம்
பெண்ணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம்
வீட்டதிபதி 6,8,12 ல் மறைந்து இருந்தாலும், நவகிரகங்களில் மந்தன் என்றும்
தாமதகாரகன் என்றும் ஜோதிட ரீதியாக அழைக்கப்படும் சனி பகவான் தான் இருக்கும்
வீட்டிலிருந்து 3,7,10 ஆகிய பாவங்களை பார்வை செய்யும் திறன் கொண்டவர்.
சனிபகவான் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7ம்
வீட்டையும், 7ம் அதிபதியையோ, சுக்கிரனையோ பார்வை செய்தால் திருமணம் தாமதமாக
நடைபெறும். பொதுவாக, சனியானவர் 7ல் இருந்தாலும், குடும்ப ஸ்தானமான 2ல் இருந்தாலும்
திருமணம் அமைய தடை தாமதம் ஏற்படுகிறது. அது போல சர்ப கிரகங்களான ராகு, கேது 7ல்
இருந்தாலும் திருமணம் நடைபெற கால தாமதம் ஏற்படுகிறது. திருமண வயதில் சர்ப
கிரகங்களின் தசாவோ, புக்தியோ நடைபெற்றாலும் திருமணம் நடைபெற தாமதம்
ஏற்படும்.
No comments:
Post a Comment