குழந்தை செல்வம்
ஒவ்வொருவருடைய வாழ்க்கையை முழுமை பெற வைப்பதாகும். திருமணமான ஒவ்வொரு தம்பதியினரும்
அடுத்து எதிர்பார்ப்பது ஓரு குழந்தை செல்வத்தைத்தான். ஏழை முதல் பணக்காரர் வரை
தனக்கென ஒரு வாரிசு உருவாவதையே பெரிய பாக்கியமாகக் கருதுகிறார். அவரவர்
சக்திக்கேற்ப குழந்தையை நல்லபடி வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் ஒரு
குழந்தையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். யாருமே தங்களுக்கு
குழந்தை செல்வம் வேண்டாம் என்று மனதளவில் கூட நினைப்பதில்லை. ஆனால், இல்லை ஒரு
பிள்ளை என்று ஏங்குபவர்கள் நிறைய பேர் உண்டு.
ஜோதிட ரீதியாக நாம் ஆராய்கின்ற போது யாருக்கு
சிறப்பாக குழந்தை பாக்கியம் அமையும். குழந்தை பாக்கியமே இல்லாதவர் யார் என்பதை
கண்டுபிடித்து விடலாம். குறிப்பாக ஒருவரின் 5ம் பாவமானது பலமாக அமைந்திருந்தால்
குழந்தை பாக்கியத்தை பெற முடியும்.
ஜோதிட
ரீதியாக புத்திர பாக்கியம் சிறப்பாக அமைய பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான்
புத்திர காரகன் என்பதால் அவர் பலமாக அமையப் பெறுவது முக்கியமானதாகும். அதுபோல 5ம்
அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும்
சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 5ம்
பாவம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதை போலவே சந்திரனுக்கு 5ம் பாவமும் பலமாக அமைந்து
விட்டால் குழந்தை பாக்கியம் அமைய எந்தத் தடையும் இருக்காது. அதுபோலவே 5ம்
வீட்டையும், 5ம் வீட்டதிபதியையும் குரு பகவான் பார்வை செய்தால் குழந்தை செல்வம்
சிறப்பாக அமைந்து மகிழ்ச்சியை உண்டாக்கும். 5ம் வீட்டில் சுப கிரகம் இருப்பதும்,
சுபர் பார்வை பெறுவதும் சிறப்பானது என்பது போல 5ம் அதிபதி பாவியாக இருந்தாலும்
வலுப்பெற்று அமைந்து சுபர் பார்வை பெறுவது சிறப்பான புத்திர பாக்கியத்தை
ஏற்படுத்தும்.
ஆண் வாரிசு
நவ கோள்களில் ஆண் கிரகங்கள் என வர்ணிக்கப்படக்
கூடிய குரு, சூரியன்,செவ்வாய் வலுப்பெற்று 5ல் இருந்தாலும் 5ம் அதிபதியுடன்
இருந்தாலும் ஆண் கிரகங்களின் வீடு என வர்ணிக்கப்படக் கூடிய மேஷம், விருச்சிகம்,
சிம்மம், தனுசு, மீனம் ஆகிய பாவங்களில் 5ம் அதிபதி பலமாக அமைந்திருந்தாலும்
சிறப்பான ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும். மேற்கூறிய பாவங்களில் குரு
அமைந்திருந்தாலும் சிறப்பான ஆண் வாரிசு உண்டாகும்.
பெண் கிரகங்கள் என வர்ணிக்கப்படக் கூடிய
சுக்கிரன் சந்திரன் 5ல் வலுவாக அமைந்தாலும் 5ம் அதிபதியாக சுக்கிரன், சந்திரன்
சேர்க்கைப் பெற்றிருந்தாலும் சந்திரன் வீடான கடகத்தில் அமைந்திருந்தாலும் பெண்
குழந்தை யோகம் உண்டாகும். அதுபோல இரட்டை படை ராசிகளான ரிஷபம், கடகம், கன்னி,
விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவற்றில் 5ம் அதிபதி அமைந்திருந்தாலும் பெண் குழந்தை
யோகத்தைக் கொடுக்கும்.
சர்புத்ரபாக்யம்
சர்புத்திர பாக்கியம் யாருக்கு அமையும் என்று
பார்த்தால் 5ம் பாவத்தில் ஆண் கிரகங்களும் பெண் கிரகங்களும் இணைந்து
அமைந்திருந்தால் சர்புத்திர பாக்கியமான ஒரு ஆண் ஒரு பெண் குழந்தைகள் உண்டாகும். 5ம்
அதிபதி ஆண் கிரகமாக இருந்து பெண் கிரக சேர்க்கை பெற்றிருந்தாலும் பெண் கிரகமாக
இருந்து ஆண் கிரக சேர்க்கை பெற்றிருந்தாலும் சர்புத்திர பாக்கியம் அமையும்.
புத்திர ஸ்தானமான 5ல் அமைந்துள்ள
கிரகங்களின் தசா புக்தி
காலங்களிலும், 5ம் அதிபதி மற்றும் 5ம் அதிபதி
சாரம் பெற்ற தசா புக்தி காலங்களிலும், குரு மற்றும் குரு சாரம் பெற்றுள்ள தசா
புக்தி காலங்களிலும் குழந்தை பாக்கியம் உண்டாவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பெண்
கிரகங்களின் தசா புக்தி காலத்தில் பெண் குழந்தையும் ஆண் கிரகங்களின் தசா புக்தி
காலத்தில் ஆண் குழந்தை யோகமும் கொடுக்கும். சனி, ராகு, கேது, புதன் போன்ற கிரகங்கள்
5 ஆம் வீட்டில் அமைந்திருந்தாலும், 5ம் அதிபதியாக இருந்தாலும் 5ம் அதிபதி நீசம்
அஸ்தங்கம் பெற்றாலும் ராகு கேதுவின் சாரம் பெற்றிருந்தாலும் புத்திர பாக்கியம்
உண்டாவதில் தடை ஏற்படுகிறது. அதுபோல சந்திரனுக்கு 5ல் பாவிகள் இருப்பதும் 5ம்
அதிபதி பலவீனம் அடைவதும் புத்திர தோஷமாகும். 5ம் வீட்டிற்கு இருபுறமோ, குருவுக்கு
இருபுறமோ பாவ கிரகங்கள் அமையப் பெற்றாலும் புத்திர தோஷம் உண்டாகிறது.
அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 5ம்
அதிபதி 6, 8, 12ல் மறைந்திருந்தாலும் 5ம் அதிபதியையும், 5ம் வீட்டையும், குரு
பகவானையும், சனி பார்வை செய்தாலும் திருமணம் நடைபெறும் காலங்களில் சர்ப கிரகங்களின்
தசா புக்திகள் நடைபெற்றாலும், புத்திர பாக்கியம் அமைவதில் தாமதம் உண்டாகும்.
கருச்சிதைவு, கருத்தறிக்கத் தடை ஏற்படும்.
ஜெனன காலத்தில் 5ம் இடம் புதனின் வீடான மிதுனம்,
கன்னியாகவோ, சனி வீடான மகரம் கும்பமாகவோ இருந்து அதில் சனி மாந்தி அமையப் பெற்று,
புத்திர காரகன் குருவும் பலவீனமாக இருந்தால் தத்து புத்திர யோகம் அதாவது பிறருடைய
குழந்தையை தத்து எடுத்து வளர்க்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.
ஒருவர் ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான 5ம் இடம் சுப
கிரகங்களால் சூழப்பட்டு குரு பகவான் வலுவாக அமையப் பெற்றாலும், 5ம் அதிபதி கேந்திர
திரிகோணாதிபதிகளுடன் சேர்க்கை மற்றும் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் உடன் அமையும்
கிரகங்கள் நட்பு கிரகங்களாக இருந்தாலும் பெருமையையும், உயர்வையும் அடைய
முடியும்.
அதுவே 5ம் அதிபதி பகை பெற்றோ 6,
8, 12களில் மறைந்தோ, பாதக அமையப் பெற்றோ, ராகு சனி சாரம் பெற்றோ, பாதகாதிபதி சாரம்
பெற்றோ குரு பாதக ஸ்தானத்தில் அமையப் பெற்றோ இருந்தால் புத்திரர் அனுகூலம்
இருக்காது. தேவையற்ற பிரச்சனைகளையும் வீண் விரயங்களையும் எதிர்கொள்ள
நேரிடும்.
No comments:
Post a Comment