Saturday, 25 August 2012

கிரகச் சேர்க்கையால் சர்ப்ப கிரகங்கள் சீறுமா



நவ கிரகங்களில் சர்ப கிரகம் என வர்ணிக்கப்படக் கூடிய ராகு கேது மனித வாழ்வில் பல்வேறு விநோதங்களை உண்டாக்குகின்றது. குறிப்பாக இவ்விரு கிரகங்களுக்கும் சொந்த வீடுகள் இல்லை என்றாலும், இருக்கின்ற வீட்டையே சொந்த வீடாகக் கொண்டு பலாபலன்களை வழங்குவார்கள். அது மட்டுமின்றி ராகு, கேது இருக்கின்ற வீட்டதிபதிகள் பலமாக இருந்தால் சாதகம் மிகுந்த பலன்கள் உண்டாகும். அது மட்டுமின்றி ராகு கேது மற்ற கிரகங்களுடன் இணைந்திருக்கும்போது கூட பல்வேறு விநோதமான பலன்களை உண்டாக்குகிறார்கள். இதனைப் பற்றி தெளிவாகப் பார்ப்போம்.
 
ராகு சூரியன் சேர்க்கை பெற்றால் தந்தைக்கு தோஷம், தந்தை வழி உறவினர்களிடம் பகை, எந்தபாவத்தில் இருக்கிறார்களோ அந்த பாவத்தை பாதிக்கும் அமைப்பு உண்டாகும். அதுவும் 8ல் அமையப் பெற்றால் இருதய கோளாறு கண்களில் பாதிப்பு, எலும்புருக்கி நோய், உஷ்ண நோய்கள் உண்டாகும்.
 
ராகு சந்திரன் சேர்க்கை பெற்றால் மனக் குழப்பம், முன்கோபம், முரண்பட்ட பழக்க வழக்கங்கள், தாய்க்கு உடம்பு பாதிப்பு உண்டாகும்.

ராகு செவ்வாய் சேர்க்கை பெற்று ஒரு ஆண் ஜாதகத்தில் முரட்டுத் தனம், பிடிவாத குணம், விளையாட்டுத் தனம் எதிலும் வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படும் நிலை உண்டாகும். பலமிழந்திருந்தால் கடன் தொல்லை, விபத்து, தாழ்வு மனப்பான்மை, தற்கொலை மனப்பான்மை எல்லாம் உண்டாகும். பெண்களுக்கு செவ்வாய் ராகு சேர்க்கை பெற்றால் விதவை, முறை தவறும் சூழ்நிலை உண்டாகும்.
 
ராகு, புதன் சேர்க்கை பெற்றால் எதிலும் ஒரு முடிவெடுக்காத நிலை, மற்றவர்களை ஏமாற்றும் எண்ணம், தவறான செயல்கள், அவமானம், உண்டாகும். சிலர் நம்பிக்கை துரோகம் செய்யும் நபராகவும், மற்றவர்களை காட்டிக் கொடுக்கும் நபராகவும்
இருப்பார்.
 
ராகு குரு சேர்க்கைப் பெற்றால் திடீர் ராஜயோகம் பல்வேறு வகையில் ஏற்றங்கள் உண்டாகும் என்றாலும் தெய்வீக விஷயங்களில் நாட்டம் இருக்காது. பெரியோர்களை மதிக்க மாட்டார்கள். புத்திரர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.
 
ராகு சுக்கிரன் சேர்க்கைப் பெற்றால் களத்திர தோஷமாகும். வசதி வாய்ப்புகள் சுக வாழ்வு ஏற்படும். பாதிக்கப்பட்டிருந்தால் ரகசிய நோய்கள் சில தவறான பழக்க வழக்கங்கள், மண வாழ்வில் பாதிப்பு உண்டாகும்.
ராகு, சனி சேர்க்கை பெற்றால் வாழ்க்கை என்பது, போராட்டகரமானதாக இருக்கும். முதுமையான தோற்றம், உடல்நிலை பாதிப்பு, தாமத திருமணம், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நிலை முரட்டுத்தனமான குணம் உண்டாகும்.
 
கேது பகவான் சூரியன் சேர்க்கைப் பெற்று அமையப் பெற்றால் உஷ்ண நோய்கள், தந்தைக்கு கண்டம், தந்தை வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.
 
கேது, சந்திரன் சேர்க்கை பெற்றால் மன குழப்பம், தாய்க்கு பாதிப்பு, நிலையற்ற மனநிலை, மன நிலை பாதிப், போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும் என்றாலும் 5, 9 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்றால் தெய்வீக செயல்களில் ஈடுபடக் கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.
 
கேது, செவ்வாய் சேர்க்கைப் பெற்றால் உடம்பு பாதிப்பு, தவறான பழக்க வழக்கங்கள், உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு, உண்டாகும்.
கேது புதன் சேர்க்கைப் பெற்றால் நல்ல அறிவாற்றல் தத்துவ ஞானியாக விளங்கும் அமைப்பு உண்டாகும்.

கேது குரு சேர்க்கைப் பெற்றால் ஆன்மீக தெய்வ விஷயங்கள் ஈடுபாடு அதனால் மன அமைதி உண்டாகும்.
கேது சுக்கிரன் சேர்க்கைப் பெற்றால் மண வாழ்வில் பிரச்சனை, கண்களில் பாதிப்பு, தாமத புத்திர பாக்கியம் ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை உண்டாகும்.

No comments:

Post a Comment