Saturday, 25 August 2012

வக்ர கிரகம் வாழ்வு தருமா



நவகிரகங்கள் சில நேரங்களில் பின்னோக்கிச் செல்கின்றன. அதில் குறிப்பாக சூரியன், சந்திரன் வக்ரம் பெறுவதில்லை. ராகு, கேது எப்பொழுதுமே பின்னோக்கிதான் செல்வார்கள். குரு, செவ்வாய், சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்கள் வக்ரம் பெறுகின்றன. அதில் குறிப்பாக சூரியனை ஒட்டியே செல்லும் கிரகமான புதன் சுக்கிரன் ஒரு குறிப்பிட்ட தூரத்தை விட அதிகமாகச் சென்று விட்டால் வக்ரம் பெற்று சூரியனை நெருங்கும்போது வக்ர நிவர்த்தி அடைகின்றது. அது போல சூரியனுக்கு 9ம் வீட்டில் குரு செவ்வாய் சனி வருகின்ற போது வக்ரம் பெற்று, சூரியன் குரு செவ்வாய் சனிக்கு 9ம் வீட்டிற்கு வருகின்ற போது வக்ர நிவர்த்தியடைகிறது
.
குறிப்பாக ஒரு கிரகம் வக்ரம் பெற்றால் என்ன பலனை உண்டாக்குகிறது என ஆராய்கின்ற போது பல்வேறு உண்மைகள் வெளிப்படுகின்றன. குறிப்பாக உச்சம் பெற்ற கிரகம் வக்ரம் பெற்றால் நீச பலனை தருகிறது. அதுபோல நீசம் பெற்ற கிரகம் வக்ரம் பெற்றால் நீச பலனுக்கு பதில் நற்பலனை ஏற்படுத்துகிறது. சரி, மற்ற ஸ்தானங்களில் இருக்கும்போது என்ன பலா பலன்களை ஏற்படுத்துகிறது என்று பார்க்கின்ற போது சொந்த வீட்டில் ஆட்சி பெற்ற கிரகம் வக்ரம் பெற்றால் ஒரு கிரகம் பலஹீனமடைந்தால் என்ன பலனை தருமோ, அதாவது நீசம் பெற்றால் என்ன பலனை தருமோ அதுபோல பலனை வழங்குகிறது.
 
ஆட்சி உச்ச ஸ்தானத்தை தவிர மற்ற ஸ்தானங்களில் வக்ரம் பெறுகின்ற கிரகங்கள் பலமாக இருந்தால்என்ன பலனை தருமோ அதுபோல நற்பலனை உண்டாக்கும். அதுவும் நட்பு வீட்டில் அமையப் பெற்ற கிரகம் வக்ரம் பெற்றிருந்தால் அக்கிரகம் ஆட்சி பெற்றால் என்ன பலனை தரும்.
 
அதற்கு சமமான நற்பலனை உண்டாக்கும். பொதுவாக கிரகங்கள் பரிவர்த்தனை பெற்று அமையப் பெற்றால் அக்கிரகங்கள் சொந்த வீட்டில் அமையப் பெற்றால் என்ன பலனை தருமோ அதுபோல பலனைத் தரும். உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் மேஷத்தில் குருவும், தனுசில் செவ்வாயும் அமையப் பெற்றால் குரு செவ்வாய் பரிவர்த்தனை ஆகும். அப்படி அமையப் பெற்றால் மேஷத்தில் செவ்வாயும் தனுசில் குருவும் ஆட்சி பெற்றால் என்ன பலனை தருமோ அப்படிப்பட்ட பலனை தான் உண்டாக்கும்.
 
இதனை இப்பொழுது ஏன் சொல்கிறேன் என்றால் என் அனுபவத்தில் பார்க்கின்ற போது பரிவர்த்தனை பெற்ற கிரகம் வக்ரம் பெற்றால் நற்பலனை தருவதில்லை. குறிப்பாக என்னிடம் ஜாதகப் பலன் பார்க்க வந்த ஒருவருக்கு விருச்சிக லக்னம், லக்னத்தில் குரு வக்ர கதியில் 2ம் வீட்டில் செவ்வாய் 5ம் அதிபதி குரு வக்ரம் பெற்ற காரணத்தால் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் கடுமையான புத்திர தோஷம் என்று கூறினேன். ஜாதகம் பார்க்க வந்த நபர் தனக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது என்றும் இதுவரை குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை என்று வேதனையுடன் ஒப்புக் கொண்டார்.
 
துலா லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு 5ல் சனி அமைந்திருக்கிறது. அந்த ஜாதகத்தை பார்த்தவுடன் 5ல் அமையப் பெற்ற சனி வக்ரம் பெற்றிருப்பதால் புத்திர தோஷம் என்று கூறினேன். அந்த ஜாதகரும் திருமணமாகி 15 ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் உண்டாகவில்லை எனவருத்தத்துடன் கூறினார்.
 
என்னிடம் ஜாதகம் பார்க்க வந்த ஒருவரின் பெண்ணுடைய ஜாதகம் கீழ்வருமாறு :
 
மேற்கூறியுள்ள பெண்ணிற்கு 3, 8க்கு அதிபதிகளான புதன், சனி பரிவர்த்தனை பெற்று உள்ளனர். பரிவர்த்தனை பெற்ற சனி வக்ரம் பெற்றிருந்தாலும் ராகு திசையில் சனி புக்தி நடைபெறுவதாலும் ஜாதகிக்கு முதலில் அமையும் திருமணம் நல்ல படியாக இருக்காது என்று கூறினேன். அந்த ஜாதகியின் பெற்றோர்கள் 2007ம் ஆண்டு பிப்ரவரியில் சொந்த அத்தை மகனையே திருமணம் செய்ததாகவும் திருமணம் நடைபெற்ற ஒரு மாதத்திலேயே பிரிந்து விட்டதாகவும் மன வருத்தத்துடன் கூறினர். அதுபோல ஒரு வசதி படைத்த இடத்திலிருந்து ஒரு அம்மையார் தனது பெண்ணின் ஜாதகத்தை கொண்டு வந்து என்னிடம் காட்டினார்.
 
கடக லக்னத்தில் பிறந்த பெண்ணிற்கு 7ம் அதிபதி சனி பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் சனி பகவான் வக்ரம் பெற்றிருந்தாலும் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது ராகு திசையில் சுக்கிர புத்தி நடைபெற்றதாலும் அப்பெண்ணிற்கு கடுமையான களத்திர தோஷம் உள்ளது. தற்போது திருமணம் செய்தால் மண வாழ்வில் பிரச்சனை ஏற்படும். இது இருதார தோஷம் கொண்ட ஜாதகம் என்று கூறினேன். அதுமட்டுமின்றி மண வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்கக் கூடிய ஜாதக அமைப்பு என்பதினால் முடிந்த வரை தாமதமாகவே திருமணம் செய்யுங்கள் என்றும் அல்லது ராகு திசை முடிந்த பிறகு திருமணம் செய்யுங்கள் என்றும் கூறினேன். அதிலும் 7ம் அதிபதி சனியே பலவீனமாக இருப்பதால் முதலில் அமையும் வாழ்க்கை நன்றாக இருக்காது என்று கூறினேன். அதுபோலவே நான் கூறிய ஜாதகப் பலன்களை கேட்டுவிட்டு அந்த அம்மையார் தன் மகளுக்கு கடந்த (2007 ஏப்ரல்) திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றதாகவும், திருமணமான ஓரிரு நாட்களிலேயே அந்த மாப்பிள்ளை ஆண்மையற்றவர் என்று தெரிய வந்ததாகவும் அதன் பிறகு நீதிமன்றத்திற்கு சென்று திருமணமே செல்லாது
 
என்று தீர்ப்பு பெற்றதாகவும் வருத்தத்துடன் கூறினார்.

No comments:

Post a Comment