Tuesday, 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 161


கூறேநீ உப்பரிகை மாடகூடம்
கொற்றவனே சயனசுகம் யோகமுள்ளோன்
வாரே நீவாகனமும் நிதியுமுண்டு
வையகத்தில் விதியுமுண்டு வேசிநேசன்
ஆரே நீஅசுபர்களும் சேர்ந்திருக்க
அப்பலன்கள் கெட்டாலும் அகமுமுண்டு
சீரே நீ ஈராறில் உச்சமானால்
சிவசிவா துன்பமொடு இன்பம்சொல்லை.


மேலும் ஒன்றையும் நீ கூறுவாயாக! அச்சென்மனுக்கு (மேற்குறித்த பாட்டின்படி பிறந்தோனுக்கு) உப்பரிகையும், மாடகூடமும் ஏற்படும். அவனுக்கு சயன சுகம் வாய்க்கும். நிறைந்த யோகம் உள்ளவன். வாகனயோகமும் கொண்ட இருநிதிக் கிழவன் அவன். இப்பூமியிலே நீண்ட ஆயுளுடன் வேசியரைக் கூடுவதில் விருப்புடையவனாக இருப்பான். இவர்களோடு அசுப கிரகங்கள் சேர்ந்திருப்பினும் மேற்குறித்த பலன்கள் கெட்டாலும் வீடுண்டு. இலக்கினத்ததிபன் 12-இல் உச்சமானால் சிவபரம் பொருளின் பேரருளால் துன்பமும் இன்பமும் விரவி வரும் என்பதையும் புலப்படுத்துவாயாக எனப்போகரது அருளாணையால் புலிப்பாணி புகன்றேன்.

No comments:

Post a Comment