Wednesday, 15 August 2012

ஜோதிடம் உண்மையா, பொய்யா?

 


ஜோதிடம் என்பது உண்மைதானா, அதை நாம் முழுக்க முழுக்க நம்பலாமா இது எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்வி. ”ஜோதிடம் என்பதெல்லாம் சும்மா ஏமாற்றுவேலை. உழைக்காமலேயே மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கச் சிலர் செய்யும் சாகசங்கள் தான் ஜோதிடம்” – இது சிலரது கருத்து. “அதெல்லாமில்லை. ஜோதிடம் என்பது வேதகாலம் தொட்டு காலம் காலமாக இருந்து வரும் ஒரு ஆரூட முறை. அதைப் பார்த்து, அதன்படி நடப்பதில் தவறொன்றுமில்லை” இது சிலரது கூற்று.

சரி ஜோதிடம் என்றால் என்ன, அது உண்மைதானா, அது மனித வாழ்வுக்கு உண்மையிலேயே அவசியம்தானா, அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றியெல்லாம் இனி ஒவ்வொன்றாகக் காண்போம்.

ஜோதிடம் என்றால் என்ன?

வடமொழியில் ‘ஜ்யோதிஷம்’ என்று கூறப்படுவதே தமிழில் ஜோதிடம் என்று கூறப்படுகிறது. “அறிவைத் தரும் ஒளி” என்பது இதன் பொருளாகும். இதே பொருளிலேயே இது தமிழிலும் சோதி + இடம் = ‘சோதிடம்’ என அழைக்கப்படுகிறது. வேதத்தின் ஆறுபாகங்களில் ஜோதிடமும் ஒன்று. தமிழிலும் ‘சோதிடக்கலை’ ஆய கலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதில் மேல் நாட்டவர்கள் ‘சாயன முறை’ என்பதைப் பின்பற்றுகிறார்கள். நம் இந்திய நாட்டில் பின்பற்றப்படும் முறை ‘நிராயன முறை’ என்பதாகும். இந்த ஜோதிடத்தில் பல்வேறு உட் பிரிவுகளும் உள்ளன. பராசரர், ஜைமினி, வராகமிகிரர் என பல மகரிஷிகள் பல்வேறு முறைகளை வகுத்துத் தந்துள்ளனர். காலமாற்றத்திற்கேற்ப வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணிதம் என பல்வேறு முறைகளிலும் ஜாதகம் கணிக்கப்பட்டு பலன்கள் சொல்லப்பட்டு வருகின்றன. பல்வேறு அயனாம்ச முறைகளும் எபிமெரீஸ் போன்றவைகளைப் பயன்படுத்தியும் ஜாதகங்கள் துல்லியமாகக் கணிக்கப்பட்டு பலன்கள் கூறப்பட்டு வருகின்றன.



Astro Chart
பொதுவாக படித்தவர், பாமரர் என்றின்றி அனைவராலும் அணுகப்படும் கலையாக ஜோதிடக்கலை விளங்குகின்றது. சாதாரண மனிதர் முதல் நாட்டின் தலையாய மனிதர்கள் வரை அனைவருமே பெரும்பாலும் ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர். தங்கள் எதிர்காலம் பற்றி அறிவதற்காக நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஜோதிடத்தைப் பார்த்து பலன் அறிந்து கொண்டு வருகின்றனர்.

நம் நாட்டில் பல்வேறு விதமான ஜோதிட முறைகள் பயன்பாட்டில் உள்ளன. ஒருவர் பிறக்கும் போது அமைந்த கிரகநிலைகளின்படி, அவருக்கு, அவர்தம் எதிர்கால வாழ்க்கையினைப் பற்றிய பலாபலன்களைக் கூறுவது பொதுவாக நடைமுறையில் உள்ள ஜோதிட முறையாகும். மற்றும் கை ரேகை சோதிடம், எண் கணித சோதிடம், கிளி சோதிடம், பிரசன்ன சோதிடம், முகக்குறி பார்த்துப் பலன் சொல்லுதல், மூச்சு ஜோதிடம், பிரமிடு ஜோதிடம், கோடங்கி பார்த்தல் எனப் பல்வேறு முறைகள் புழக்கத்தில் உள்ளன.

ஜோதிடம் பற்றி கலைக்களஞ்சியம்

ஜோதிடம் பற்றி கலைக்களஞ்சியம் கூறுவது முக்கியமானது. அது, ஜோதிடம் என்பது வேதகால ஆரியர்களுக்கும் முற்பட்டகலை என்றும், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழங்கால மக்கள் அதனை அறிந்து வைத்து இருந்தனர் என்றும், மிகவும் பழமையான கலை என்றும் அது குறிப்பிடுகின்றது.

மேலும் ‘சோதிடம் என்பது கிரகங்களின் நிலையை வைத்தும், நட்சத்திரங்களின் நிலையைக் கொண்டும் மானிட, உலக விவகாரங்களைப் பற்றி, முன்கூட்டியே அறிய முடியும் என்ற நம்பிகையை ஆதாரமாக உடையது’ எனக் கூறுகின்றது.

‘சங்கிதை போன்ற நூல்கள் ஒரு தனி மனிதனுக்கு மட்டுமல்லாது, ஒரு நாட்டிற்கு, உலகிற்கு, அதன் கண் உள்ள மக்களுக்கு என அனைவருக்கும் பலன்கள் கூறும் தன்மை படைத்தனவாக உள்ளது என்றும் சான்றாகப் பராசரர் சங்கிதை, மத்திய சங்கிதை, கர்கர் சங்கிதை மற்றும் சாராவளி போன்ற நூல்களைக் குறிப்பிடலாம்’ என்றும் கலைக்களஞ்சியம் (தொகுதி ஐந்து, பக்: 260-263) குறிப்பிடுகின்றது.

மேற்கண்ட கருத்துக்கள் மூலம் ஜோதிடம் என்பது தொன்மையான ஒரு கலை என்றும், இந்தியா முழுக்க பயன்பாட்டில் இருந்த ஓர் பயிற்சி முறை ஆருடம் என்றும் நாம் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment