ஒரு ஜாதகம் மேன்மையடைய அவரது ஜாகத்தில் குருபகவான் சிறப்பாக இருக்க வேண்டும்.
அவரின் அருட்பார்வை பெற்றால் தான் கிரக தோஷங்கள் அகலும். குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருடமாகிறது. அதுவே குரு பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட குரு இன்று (17ம் தேதி) மாலை 5.18 மணிக்கு மேஷ ராசியில் இருந்து கார்த்திகை நட்சத்திரம் 2ம் பாதம் ரிஷப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார்.
குரு பெயர்ச்சியாகும் காலத்தில் இம்முறை சுக்ரன் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். குருவும், சுக்ரனும் முரண்பட்ட கிரகங்களாக கருதப்படுபவை என்பதால் சிலருக்கு தீவிர திருப்பங்கள் வெற்றிகள் வந்து சேரும்.
குரு பார்வைப்படப் போகும் கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு பணம், புகழ், தொழில் வளம் சிறக்கும்.
மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு குருவின் பார்வையில்லாததால் குரு பெயர்ச்சியன்று சிவாலயங்களுக்கு சென்று குருவை வழிபடலாம். குருவை வணங்கும் போது குருவின் பார்வை நம்மீது நேரடியாக பட்டால் குருபார்க்க கோடி நன்மை விளையும் என்பதால் குருவுக்கு நேராக நின்று வணங்க வேண்டும்.
குரு பகவானுக்கு உகந்த நாளாம் வியாழன்று விரதம் இருந்தால் எல்லா நலன்களும் கிட்டும். இதனைக் குரு வாரம் என்று கூறுவர்.
ஜாதகத்தில் குரு நீசமடைந்தவர்கள் இவ்விரதம் இருக்க வேண்டும். ஏழ்மையில் இருப்பவர்களும் திருமணமாகாதவர்களும், குடும்பத்தை பிரிந்து வாழ்பவர்களும், குழந்தை இல்லாதவர்களும் இவ்விரதம் இருக்கலாம். அவ்வாறு இருந்தால் அவர்களின் குறைகள் நீங்கும். வியாழக்கிழமை ஸ்ரீராகவேந்திரர் குருவாயூரப்பன், குருபகவான் போன்ற கடவுளை எண்ணி பூஜை செய்யலாம். அந்நாளில் புதனுக்குரிய பொன்னிற ஆடை அணிய வேண்டும். நவக்கிரகத்தை சுற்றி வந்து வியாழ பகவான் முன்னின்று,
மறைமிகு கலைநூல் வல்லோன்
வானவர்க்காசான் மந்திரி
நறை செரி கற்பகம் பொன்
நாட்டினுக்கு அதிபனாகி
நிறைதானம் சிவகை மண்ணின் வீடு
போகத்தை நல்கும்
இறைவன் குரு வியாயன்.
இருமலர்ப்பாதம் போற்றி
என்னும் தோத்திரம் கூறி வணங்க வேண்டும்.
புஷ்பராகக்கல்லை மோதிரமாக அணிவது நலம். குருவை வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குதூகலம் அதிகரிக்கும், செல்வ நிலை உயரும், செல்வாக்கு மேலோங்கும், திருமணம் கைகூடும், புத்திரபேறு வாய்க்கும், பூமியோகம் கிடைக்கும், வெற்றிப்படிக்கட்டுகளின் விளிம்பில் ஏறலாம்.
குறிப்பாக இதுவரை கசந்த காலங்கள் இனி வசந்தகாலங்களாக மாற்றும் ஆற்றல் குருவின் பார்வைக்கு மட்டுமே உண்டு. கஜகேசரி யோகம், குருசந்திர யோகம், குருமங்கல யோகம், ஹம்ச யோகம், சகட யோகம் என 5 விதமான யோகங்களை குரு அருட் பாலிப்பதால் குருவை வழிபடுங்கள். கோடி நன்மைகள் பெறுங்கள்.
No comments:
Post a Comment