ஜோதிட மோசடிகள்
ஜோதிடத்தின் பெயரால் செய்யப்படும் மோசடிகளுக்கும் அளவே இல்லை. அதிலும் குறிப்பாக பரிகாரம் என்று கூறிச் செய்யப்படும் மோசடிகள் வன்மையாகக் கண்டிக்கத் தகுந்ததாகும். ஹோமம், யாகம், யந்திரம், தாயத்து என்றெல்லாம் நம்ப வைக்கப்பட்டு பலர் இதில் லட்சக் கணக்கில் பணத்தை இழக்கின்றனர். கர்ம காண்டத்தில் அவற்றிற்குப் பங்குண்டு என்றாலும், அவை மக்களின் குறை போக்குவதற்குப் பதிலாக தனிநபர்கள், தாங்கள் வருமானம் ஈட்டுவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. அதுவும் பரிகாரம் செய்யும் நபர் பூஜைகளில், ஹோமங்களில் நேரடியாகக் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை, நாங்களே எல்லாம் செய்து விடுகிறோம் என்று பொய் கூறியும் பலர் ஏமாற்றுகின்றனர். அதிலும் ’அதிர்ஷ்டக் கல்’ என்ற பெயரில் செய்யப்படும் மோசடிகள் சொல்லி மாளாது.
எல்லாக் கற்களுக்கும் ஒருவித அதிர்வு உள்ளது. அந்த அதிர்வினால் ஏதோ ஒருவிதத்தில் நமது உடல், மனம் இயங்கும் தன்மையில் சிறு மாற்றமாவது ஏற்படும் என்பது உண்மைதான் என்றாலும் அதுவே முழுக்க முழுக்க உண்மையாகி விட முடியாது. ராசிக்கற்கள் என்பவை எல்லோருக்கும், எல்லாக் காலத்திலும் உகந்தவை அல்ல. சில வகைக்கற்களால் (நீலம், வைரம்) தோஷங்களும், விபரீத எண்ணங்களும், மன விகாரங்களும் கூட ஏற்படலாம். இவையெல்லாம் விரிவான ஆராய்ச்சிக்குரியவை.
ஆனால் போலி ஜோதிடர்களோ வாய் கூசாமல் இந்தக் கல்லைப் போடுங்கள், அந்தக் கல்லை மாற்றுங்கள் என்று ஆலோசனை கூறுகின்றனர். யந்திரத் தகடுகள் செய்வோர், ஆலயப் பூசாரிகள், ஹோம, யாக காண்டிராக்டர்கள், ஜெம் வியாபாரிகள் என்று பலரோடு வணிகத் தொடர்புகொண்டு ஒரு செழிப்பான வியாபாரமாக இதனைப் பலர் செய்து வருகின்றனர்.
கர்மாவும் பரிகாரங்களும்
ஜோதிடத்தில் பரிகாரங்கள் என்பவற்றிற்கு இடமுண்டு என்றாலும் எல்லோருக்கும் பரிகாரங்களால் நன்மை விளையாது என்பதை பலரும் புரிந்து கொள்வதே இல்லை. நம்மால் ஓரளவிற்குத் தான் கர்ம வினைகளின் செயலாற்றலைக் குறைக்க முடியும். முற்றிலுமாகக் கர்மாவை மாற்றி அமைக்க இயலாது. கர்மவினைகளை அனுபவித்துக் கழித்து அதனை 0 ஆக்குவதே சிறந்தது. அது மிகக் கடுமையானதாக இருந்தபோதும் கூட. ஆனால் எல்லோராலும் கர்மவினைகளை அப்படி அனுபவித்திட இயலுமா என்ற கேள்வி எழும் போது, அங்கே விதி என்பதும், விதியை மதியால் வெல்லலாம் என்ற கோட்பாடும் உதவிக்கு வருகிறது. விதியை மதியால் வெல்லலாம்தான் ஆனால் அதற்கும் விதி இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். அதாவது கர்ம வினைகளைக் குறைத்துக் கொள்ள, அல்லது மாற்ற ஜாதகத்தில் இடமிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது பலனளிக்காது. அதற்குத் தேவை குருவருள்.
ஜாதகத்தில் ’குரு’ என்று அழைக்கப்படும் பிரகஸ்பதி (ஆலயங்களில் தென் திசை நோக்கி, சின்முத்திரையில் அமந்திருக்கும் தக்ஷிணாமூர்த்திக்கும், பிரகஸ்பதி எனும் நவக்ரஹ குருவுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை) நல்ல இடத்தில் அமந்திருந்தால் தான் பரிகாரங்கள் பலிக்கும். அதாவது குரு, உச்சமோ, ஆட்சியோ, கேந்திரமோ, சுபர் வீடோ, பார்வையோ பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் பரிகாரங்கள் பூரண பலன் தரும். இல்லாவிட்டால் எல்லாம் அரைகுறையாகத் தான் இருக்கும். இது போன்ற பல விஷயங்கள் தெரியாததால் மக்கள் ஏமாறுகின்றனர். போலி ஜோதிடர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர்.
ஜாதக பலன்கள்
ராகு, கேது கிரகங்களும், செவ்வாய் தோஷம் போன்றதும் சில சாத்திரங்களில் கணக்காகக் கொள்ளப்படவில்லை. சிலர் ’மாந்தி’ நின்ற வீட்டையும் கணக்கில் சேர்த்து பலன்கள் கூறி வருகின்றனர். சிலர் அதைக் கணக்கில் சேர்ப்பதில்லை. மேலும் லக்னம், ராசி, கேந்திரம், திரிகோணம், பாவக் கட்டம், நவாம்சம், உச்சம், நீசம், நட்பு, பகை, வர்கோத்தமம், வேதை, அஷ்டகவர்க்கம், தசாபுத்தி என பல காரணிகளைக் கொண்டு தான் ஒரு ஜாதகத்தின் முழுமையான பலனை சரியாகக் கணிக்க முடியும். அது நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் விஷயம். ஆனால் பலரும் ஜாதகத்தின் பொதுவான கிரக அமைப்பைப் பார்த்தும், கிரகங்கள் நின்ற வீட்டின் அமைப்பை வைத்தும் பலன்கள் கூறுகின்றனர். அது பலசமயங்களில் தவறான முடிவினைத் தந்து விடுகிறது. அதனால் ஜாதகம், ஜோதிடம் எல்லாமே பொய் என்ற முன் முடிவுக்கு அதனைப் பார்ப்பவர்கள் வந்து விடுகின்றனர்.
உண்மையான ஜோதிடர்கள் யார்?
மக்கள் நலம் விரும்புபவர்கள், தாங்கள் அறிந்ததை மற்றவர்களுக்கு அளித்து அவர்கள் பயன் பெற உதவுபவர்கள், எல்லோரும் தீவினைகள் நீங்கி, நல்லவராக, சகோதரராக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்மையான ஜோதிடர்கள். தம்மை நாடி வந்திருப்பவர்களின் பிரச்சனை என்ன, அது ஏன் ஏற்பட்டது, அதற்கான கிரகநிலை மற்றும் சமூக, உளவியல் காரணங்கள் என்ன, அதை ஜாதகர் அதிக செலவுகளும், பிரச்சனைகளும் இல்லாமல் தாமே எவ்வாறு தீர்த்துக் கொள்ள முடியும் என்பது பற்றி சுயநல நோக்கமற்று அறிவுறுத்துவர்களே உண்மையான ஜோதிடர்கள். ஆனால் தற்காலத்தில் இதுபோன்ற உண்மையான ஜோதிடர்களைப் பார்ப்பது வெகு அபூர்வமானதாகி விட்டது. தேடிக் கண்டறியும் நிலையிலேயே அவர்கள் உள்ளனர்.
(தொடரும்)
No comments:
Post a Comment