Sunday 2 September 2012

பிள்ளைகளுக்கு காதல் திருமணம் நடைபெறுவதைத் தடுக்க பெற்றோர் முயற்சி செய்யலாமா?


வாசகர் கேள்வி: ஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது அவர்கள் காதலில் விழுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தீர்கள். தங்கள் பிள்ளைகள் காதலில் விழுவதைத் தவிர்க்க பெற்றோர் பரிகாரம் செய்யலாமா? அது பலனளிக்குமா?

பதில்: காதல் திருமணத்தை தவறாகப் பார்க்கும் மனப்பான்மையை பெற்றோர் முதலில் கைவிட வேண்டும். காதல் திருமணம் மட்டுமே நிலைக்கும் அமைப்பு சில ஜாதகங்களுக்கு உண்டு.

சமீபத்தில் என்னிடம் வந்த பெண் ஜாதகத்தில் (ரிஷப லக்னம், பூரட்டாதி 4ஆம் பாதம், மீன ராசி) லக்னத்தில் செவ்வாய் இருந்தது. 7ஆம் இடத்தில் சனி அமர்ந்திருந்தார். பழங்கால நூல்களில் 7இல் சனி இருந்து செவ்வாய் அதனைப் பார்த்தால், அந்த ஜாதகர் தன்னை விட தகுதி, குணம், ஒழுக்கம், அந்தஸ்தில் குறைந்தவரை திருமணம் செய்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

தகுதி குறைவானவர்கள் எனக் குறிப்பிட்டதை ஜாதியை வைத்து இனம் பிரிக்க முடியாது. ஏனென்றால் உயர்ந்த ஜாதியிலும் தகுதி குறைவானவர்கள் உண்டு.

ஜாதகத்தை கணித்து முடித்த பின்னர், உங்கள் ஜாதியிலேயே கொஞ்சம் ஒழுக்கம் குறைந்த பையன் வரனாக அமைவார் என்று அப்பெண்ணின் தாயிடம் கூறினேன்.

இதன் பின்னர் அந்தத் தாய் என்னிடம் சில குடும்ப விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதாவது, தனது மகள் தற்போது ஒழுக்கம் குறைந்த ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரைத் தவிர்த்து வேறு வரன் பார்க்கலாமா என்பதை என்னிடம் கேட்க வந்ததாகவும் கூறினார்.

ஜோதிடத்தைப் பொறுத்தவரை செவ்வாய், சனி ஆகியவை ஒன்றுக்கொன்று பகை கிரகங்களாகும். செவ்வாய் நெருப்புக்கு உரியது. சனி நீருக்கு உரியது. எனவே, இந்த கிரகங்கள் ஒன்றுக்கு ஒன்று பார்க்கும் அமைப்பு உள்ள ஜாதகர்களும், ஒரே வீட்டில் இருக்கப் பெற்ற ஜாதகர்களும், தங்கள் நிலை/தகுதிக்கு எதிரான முடிவுகளை எடுப்பர்.

எனவே, இவ்விவகாரத்தில் இந்தப் பெண் எடுத்த முடிவு சரியானதாக இருக்கும் என்றும், இந்த வரனைத் தவிர்த்து விட்டு, வேறு மாப்பிள்ளையை நீங்கள் பார்த்தாலும், இதுபோலவே தகுதி குறைவாக அமையும் என்றும் கூறினேன்.

பையனின் குடும்பம் நன்றாக இருப்பதாலும், அவருக்கு கெட்ட பழக்கங்கள் உள்ளது வெளிப்படையாக தெரிந்துள்ளதாலும் பெண்ணை மணம் முடித்துக் கொடுக்கலாம். காலப்போக்கில் இருவருக்கும் இடையே நல்லுறவு மலரும் என்று கூறினேன்.

ஒரு சிலருக்கு காதல் திருமணம் நடந்தாலும், அதில் மணமுறிவு ஏற்பட்டு, பின்னர் பெற்றோர் பார்த்த வரனைத் திருமணம் செய்து இறுதி வரை ஒன்றாக வாழ வேண்டிய நிலையும் ஜாதக ரீதியாக அமையும்.

இது ஒருபுறம் என்றால், பெற்றோர் நிச்சயித்த திருமணம் தோல்வியில் முடிந்ததால், தாமாகவே விரும்பிய வரனை 2வது திருமணம் செய்து சிறப்பாக வாழும் ஜாதக அமைப்பு உள்ளவர்களும் இருக்கின்றனர் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

எனவே, எந்த மாதிரியான கிரக அமைப்பு உள்ளது என்பதை துவக்கத்திலேயே ஆராய்ந்து, அதற்கு ஏற்றது போன்ற திருமணத்தை அமைத்து தருவதே பெற்றோரின் கடமையாக இருக்க வேண்டும்.

தனது பிள்ளைக்கு காதல் திருமணம்தான் நடக்கும் என்ற கிரக அமைப்பு காணப்பட்டால், அவர்களது காதலை எதிர்க்காமல், நல்ல வரனைத் தேர்வு செய்து திருமணம் நடத்தி வைப்பதே நல்ல பலனைத் தரும்.

No comments:

Post a Comment