Thursday, 20 September 2012

இறைவனையும் உங்களுடன் வைத்துக் கொண்டு போராடுங்கள்


சமயங்களில் நம்மில் பலருக்கும், சில கேள்விகள் எழலாம். எனக்கு தோன்றிய சில எண்ணங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். உங்களுக்கு அவற்றுள் சில உபயோகப்படலாம்.

சின்ன வயசுல இருந்தே , என்னோட நட்பு வட்டம் கொஞ்சம் வித்தியாசமானது. எல்லா சேட்டையும் செய்வோம். அதே நேரம், ஒரு குழுவா திரட்டி கோவில் குளம் சுத்தம் செய்யறது, மாதம் ஒருமுறை முதியோர் இல்லம் போய் அங்கு பஜன் பாடுறது, அவங்க கிட்ட ஆதரவா பேசுறது மாதிரி கொஞ்சம் நல்ல காரியமும் செய்வோம். வித்தியாசமா சிந்திக்கவும் செய்வோம். அந்த குழுவில் மூன்று நல்ல , நெருங்கிய நண்பர்கள் எனக்கு உண்டு - இருபது வருடங்களை கடந்தும் ஆழமாக வேர் விட்டு ஓடும் நட்பு அது. பேர் ராசியோ , என்னவோ - ஆரம்பத்தில இருந்தே நம்மளை குரு ஸ்தானத்துல வைச்சிட்டாங்க.


இன்று பார்க்க விருப்பவை , என் நட்பு வட்டாரத்தில் இருந்து என்னிடம் கேட்கப் பட்ட கேள்விகள். பகுத்தறிவு சிந்தனை தூண்டுவது போல இருந்தாலும், வெட்டிப் பேச்சாக இல்லாமல் , விஷய ஞானம் வேண்டி கேட்கப்பட்ட கேள்விகள் ஆதலால் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை , அவர்களுக்கு நான் பதில் கூறி இருக்கிறேன்.

நம் வாசகர்கள் பலருக்கும் இதைப் போன்ற சிந்தனைகள் எழுந்து இருக்கக் கூடும். நான் ஒரு கத்துக் குட்டி. உங்களில் சிலருக்கு இன்னும் தெளிவான சிந்தனைகள் எழலாம். இந்த கட்டுரை படிக்கும் ஒவ்வொருவரும், சிரமம் பார்க்காது - உங்கள் கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் , நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.நமது வாசகர்களுக்கும் பயன் கிடைக்கும். சரி, இனி சப்ஜெக்ட்க்கு வருவோம்..

கடவுள் நம்பிக்கை என்கிற எண்ணம், நம் மனதில் வித்திட்டது யார்? நம் தந்தை, தாய், முன்னோர்கள் என்று வைத்துக் கொண்டால், முதன் முதலில் அந்த எண்ணம் நம் முப்பாட்டனுக்கும் முப்பாட்டனுக்கு எப்படி வந்து இருக்க கூடும்?

காலம் காலமாக , விஷ்ணு இப்படித் தான் இருப்பார், சிவலிங்கம் இப்படித் தான் இருக்க வேண்டும், சிவபெருமான் இப்படித் தான் இருப்பார். முருகர், விநாயகர் , அம்மன் , சரஸ்வதி எல்லாம் இப்படி இருப்பார்கள் என்று - புராணங்கள் , வேதங்கள் கூறிய அடிப்படையில் நாம் அப்படியே படங்களிலும், கோவில் சிலைகளிலும் உள்ளவற்றை பார்க்கிறோம். நம்புகிறோம். இதை இப்படியே நாம் ஏற்றுக் கொள்ளவேண்டுமா?

இறைவன் எங்கும் இருப்பான் எனில் , அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் உள்ளவர்களுக்கு சிவனைப் பற்றி தெரிந்து இருக்க நியாயமில்லையே. அவர்கள் வேறு தெய்வத்தை அல்லவா வணங்குகிறார்கள். அப்படியானால் சிவன் அவர்களை கவனிப்பது இல்லையா? நாங்கள் வணங்கும் முனியாண்டியைப் பற்றி , எங்கள் பக்கத்து வீட்டுக் காரனுக்கு கூட தெரியாது...... யாரு அவரு? அவரை ஏன் நாங்க கும்பிடனும்? நம்ம மதத்தில மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்..?

கோவிலுக்கு போனா , ஏன் வலம் வர்றோம்..? நீ கிரிவலம் இத்தனை தடவை போறயே..? அது எதுக்கு..? சாமி மட்டும் கும்பிட்டு வந்தா போதாதா? ஏன், இங்கே இருந்தே கும்பிட்டுக் கிட்டா போதாதா?

நீ கடவுளை பார்த்து இருக்கிறாயா?

ஜோதிடம் - மேல் நாட்டில் பிறந்த யார் ஜாதகத்தை ஆராய்கிறார்கள்? அவர்களுக்கு யார் , இந்த பரிகாரத்தை செய் என்று அறிவுறுத்துகிறார்கள்? அவர்கள் நன்றாகத் தானே இருக்கிறார்கள்....

இது மாதிரி இன்னும் பல கேள்விகள் இருக்கு... இப்போதைக்கு இந்த கேள்விகளை மட்டும் பார்க்கலாம்...


இந்து மதத்தை யார் தோற்றுவித்தார்கள் என்றே நமக்கு இன்னும் தெரியாது. மார் தட்டிக் கொள்ளலாம். உலகின் பழமையான ஒரு மதம். அவ்வளவு புராதனம். பல பல ஆயிரம் வருடங்களாக , சில நம்பிக்கை - பரம்பரை பரம்பரையாக நமக்கு சொல்லப் பட்டு வந்து இருக்கிறது. அந்த நம்பிக்கையில் இன்னும் போகிறோம். புராணங்கள் வெறும் கதைகள் என்று நினைத்தால் அது கதை தான். ஆனால், அவை உண்மை என்று நினைத்தால்..... (அட.. சூப்பரா இருக்குமே ?


சொர்க்கம் , நரகம் என்று இருப்பது உண்மை என்று நம்மில் சிலர் சொல்லிக் கொண்டாலும், மனதளவில் நம்புவதே இல்லை. நம்பினால் , நாம் தவறு செய்யத் துணிய மாட்டோமே...


தேவர்கள் சொர்க்கத்தில் இருக்கின்றனர். தேவர்களும் தொழும் மும்மூர்த்திகள் இருக்கின்றனர். ரிஷிகள், சித்தர்கள் அவர்களை எல்லாம் , தரிசித்து இருப்பதாக புராணங்கள், செவி வழிச் செய்திகள் , காலம் காலமாக நமக்கு போதிக்கப் பட்டு வரும் நம்பிக்கைகள் கூறுகின்றன...


அவை எல்லாம் , உண்மையாக இருக்குமா? என்கிற கேள்வி , இந்த விஞ்ஞான உலகில் வருவது இயல்பு தான். நமக்கு இவை எல்லாம் , ஒரு பக்காவான டுபாக்கூர் மேட்டராத்தான் தெரியும். நாம் தான் இதை எல்லாம் நம்புவதே இல்லையே...


அடி மனதில், ஆழ் மனதில் நமக்கு இந்த எண்ணம் தான் வருகிறது. எதையும் நாம் அனுபவித்து உணர்ந்து கொண்டால் ஒழிய, நம் மனது நம்புவதே இல்லை.


சிகரெட் பிடிப்பதால் புற்று நோய் வரும். குடித்தால் - லிவர் , கிட்னி போயிடும் என்று படித்து படித்து கூறினாலும், அதை நாம் அவ்வளவு எளிதில் விட்டு விடுவதில்லை. (நம்புவதில்லையோ?)


எவ்வளவு பிரார்த்தனை பண்ணினாலும் நமக்கு கடவுள் கண் திறப்பது இல்லை என்று ஒரே ஒரு முறை தோன்றினாலும், உடனே கடவுளை நம்புவதை நிறுத்தி விடுகிறோம்..... இது நியாயமா?


நம் தமிழ் மொழி எவ்வளவு புராதனமானது என்று , இதுவரை உறுதியாக கூற முடியவில்லை. எத்தனை மகான்கள், புண்ணிய புருஷர்கள், சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் எத்தனையோ பேர் இறைவனை தரிசித்து, அந்த ஆவணங்கள் நமக்கு கிடைத்தும், இன்னும் இறைவன் இருக்கிறானா என்கிற ஊசல் ஆட்டத்தில் தான் நமது மனது இருக்கிறது.


பாம்பன் சுவாமிகளோ, ராமலிங்க அடிகளாரோ , ராமகிருஷ்ண பரமஹம்சரோ - முருக தரிசனம் பெற்றதோ, காளி தரிசனம் பெற்றதையோ பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.


புராணங்கள் வெறும் கட்டுக் கதைகள் அல்ல. நம் முன்னோர்களில் யாரோ ஒருவருக்கு, அந்த கால கட்டத்தில் பலருக்கு இறைவன் சிவனாகவோ, விஷ்ணுவாகவோ , முருகனாகவோ, விநாயகராகவோ - பல ரூபங்களில் காட்சி அளித்து இருக்க கூடும். அந்த நம்பிக்கை வாழையடி வாழையாக அந்த சந்ததிகளுக்கு தொடர்ந்து இருக்க கூடும்.


(இந்த கட்டுரையின் முடிவில் - கீழே ஒரு சுவாரஸ்யமான உண்மை தகவல் ஒன்றை இணைத்துள்ளேன்.... ஒரு முறை அதையும் படித்து விட்டு , மனதில் அசை போடுங்கள்.... என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்....)


எத்தனையோ வருடங்களாக , கோடிக் கணக்கில் மகான்களின் மந்திர அதிர்வுகளை உள்ளடக்கிய - ஆலயங்கள் நம் தமிழ் நாட்டிலும் , இந்தியாவிலும் எவ்வளவோ இருக்கின்றன. ஒவ்வொரு ஆலயமும், ஒவ்வொரு சூட்சுமத்தை உள்ளடக்கி , பலன்களை உள்ளடக்கியது. நமக்கு ஆனால், இன்னும் 50 :50 நம்பிக்கையும், ஒரு வித க்யூரியாசிட்டியும் தான் இருக்கிறது.நான் சொல்வது தீவிர நம்பிக்கை உள்ளவர்களாக காட்டிக் கொள்பவர்களுக்கே.


நம்மில் உள்ள ஒரே குறை என்ன தெரியுமா? பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முந்தைய புராதனமும், பெருமையும் இருப்பதால் - மிகுந்த மெத்தனமும், அஜாக்கிரதையுமாக இருந்து விடுகிறோம்....


சரி, வெளி நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் எப்படி? அவர்களுக்கு ஜோதிடம், ஜாதகம் - கடவுள் நம்பிக்கை எதுவும் இருப்பதாக தெரியவில்லையே...


அங்கும் பல வருடங்களுக்கு முன்பு , பல கலாச்சாரங்களுக்கு முன்பு - நம் வழிபாடு முறை போன்றே இருந்து இருக்க கூடும்... ஜப்பானிலும், இந்தோனேசியா விலும், இந்தோ சீனா பகுதிகளிலும் பல ஆயிரக்கணக்கான புராதன சிலைகள் நம் இந்து மத கடவுள்களின் உருவத்தை ஒத்து இருப்பதை நாம் கேள்விப் படுகிறோம்.


நமது மதம் பெரியதா, உலக முழுவதும் பரவி இருந்த ஒன்றா என்பது இங்கு கேள்வி இல்லை. நமக்கு தேவை இல்லாத விஷயம். ஏதோ ஒரு காரணத்தால், நான் எத்தியோப்பியாவில் பிறந்து இருந்தால், இஸ்லாமையோ அல்லது வேறு எதோ ஒரு மதத்தையோ தழுவி இருந்து இருப்பேன். இந்து மதம் என்ற ஒன்று இருப்பது கூட தெரிந்து இருக்காது.


உலகத்தில் பிறந்த எந்த ஒரு ஜீவனும், அவர்கள் வெளி நாட்டவராக இருந்தாலும், அவர்களும் கிரக பலன்களால் ஆட்படுவர் என்பது ஜோதிட விதி. யார் , யாருக்கு என்ன தலை எழுத்து என்பது பிறக்கும்போதே விதிக்கப் பட்டு விட்ட ஒன்று தான். நமது உடலில் உள்ள நவ சக்கரங்களின் மூலம் நவ கிரகங்களும் நம்மை இயக்கி - நம் பூர்வ புண்ணிய பலன்களை கிடைக்க செய்கின்றன என்பது ஜோதிட சாஸ்திரம்.


அதது அப்போதே அளக்கப்பட்டு விட்டது என்று இருக்கும்போது , வழிபாடும், பரிகாரமும் - இயற்கைக்கு முரணா என்று நினைக்கவும் தோன்றுகிறது. வழிபாடும் , பரிகாரங்களும் - நமக்கு பாதகமான நேரங்களில் தீய பலன்களால் நமக்கு பாதிப்பு குறைவாக ஏற்படவும், நல்ல நேரங்களில் நமக்கு கிடைக்க விருக்கும் நற்பலன்களை உரிய நேரத்தில் கிடைக்க செய்யவும் தான். நான் ஏற்கனவே பல கட்டுரைகளில் கூறியபடி - ஜாதகம் மூன்றில் ஒரு பங்கு, நம் சுய எண்ணம் செயல்கள் ஒரு பங்கு , வாழும் வீடு, சூழல் - ஒரு பங்கு - இவை மூன்றும் தான் ஒருவரின் வாழ்க்கையின் வெற்றி , தோல்வியை தீர்மானிக்கின்றன.


நம் பூர்வ புண்ணிய கர்மாக்கள் நம் பிறப்பை தீர்மானித்தாலும், நாம் இப்போது செய்யும் நற்செயல்கள் - நமக்கும், நம் சந்ததிக்கும் நல் வழி காட்டும்.
அயல் நாடுகளில் பிறப்பவர்களுக்கும் இது பொருந்தும். ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். கஷ்டப்பட்டு உழைச்சு , IIT , IIM னு நல்ல படிப்பு படிச்சு - கை நிறைய சம்பளம் வாங்கி , இல்லை நல்ல பிசினஸ் பண்ணி - நல்ல நிலைக்கு , சொத்து , தோட்டம் தொறவுனு - நீங்கபண்ற எல்லாமே - கிரகங்களாவது , கட்டமாவது.... உங்க சுய முயற்ச்சின்னு வைச்சுப்போமே, ஒரு பேச்சுக்கு...

அந்த மாதிரி ஒரு நல்ல படிப்பு, வசதி , நற்பண்பு உள்ள ஒருவருக்கு - ஒரு குழந்தை பிறக்குதுன்னு வைச்சுப்போம்..... இவர் அடிச்ச குட்டிக் கரணம் எதுவும் இல்லாம straight ஆ - அதுக்கு எல்லா வசதியும் கிடைக்குதா, அது பூர்வ ஜென்ம புண்ணியம்...

நம்மளை விடுங்க, நம்ம புள்ளைகளுக்கு - பூர்வ ஜென்ம புண்ணியம் நிறைய இருக்கணுமா? வேண்டாமா? நாமளும் நம்ம திறமைய வளர்க்கணும் இல்லையா? நல்ல செயல்கள் செய்ய, நல்ல சம்பாதிக்கணும் இல்லையா? நம்ம பசங்களுக்கு பெஸ்ட் எஜுகேசன் , வசதிகள் செஞ்சு கொடுக்கணும் இல்லையா? முயற்சி செய்வோம்... நம்ம கர்ம வினை இடம் கொடுத்தா, நம்ம புள்ளைய ஒழுங்கா வளர்த்தா... அவனுக்கே புள்ளையா , நாம கூட திரும்ப பொறக்கலாம்... நாமே திரும்ப , நம்ம வசதிகளை அனுபவிக்கலாம்... நம்மை குழந்தைகளாக வளர்த்த , நம் பெற்றோர்களை நாம் குறைந்த பட்சம் மதிக்கவாவது செய்வோம்... எந்த அளவுக்கு நம்மை அவர்கள் கவனித்து இருக்க கூடும்...


நெஞ்சைக் கீறும் இளைய ராஜாவின் இந்த பாடல் வரிகள் ஞாபகம் வருகின்றன...
பொன்னைப் போல ஆத்தா , என்னைப் பெத்துப் போட்டா...
என்னைப் பெத்தா ஆத்தா , கண்ணீரைத் தான் பார்த்தா.....!

ஒரு குழந்தையாய் நம் கடமையை , குடும்பத் தலைவனாய் நம் கடமையையும் செய்தால் போதும்... குடும்பம் என்கிற அமைப்பு கட்டுக் கோப்பாக இருக்கும்...

சரி, வெளிநாட்டுக் காரங்க - நம்ம அளவுக்கு கடவுள் என்னும் நம்பிக்கை இல்லாதவங்க, எல்லாரும் நன்றாகத் தானே இருக்கிறார்கள்...?

இது எனக்கு கொஞ்சம் நெருடலாகத் தான் இருக்கிறது.
நம்மில் பக்குவமடைந்த யாரையேனும் கேட்டுப் பாருங்கள். அவருக்கு எது முக்கியம்? மனசாட்சியுள்ள எவரும் சொல்வது, என் குழந்தைகள்... என் குடும்பம்... அவங்க நலனுக்கு அப்புறம் என் நலம். அதன் பிறகு சமூகம்.


மேலை நாடுகளில் அப்படியா? குடும்பம் என்கிற அமைப்பு சீர் குலைந்து இருக்கிறது.

நன்றாக இருப்பது என்றால்.... நினைத்த நேரத்தில் குடி, புகை, கறி, மீன்.... நினைத்த பெண்களோடு சுற்றுவது,நோ பாமிலி பாண்டிங் , கை நிறைய கிரெடிட் கார்ட் .... இது தான் அவர்கள் வாழ்க்கை. அவர்கள் அனைவரும் நம் தேசத்தின் குடும்ப அமைப்பை பார்த்து பொறாமைப் படுகிறார்கள். ஒரு சாதாரண குடும்பம் (என நம் பார்வையில் உள்ள) சேமிக்கும் திறனை பார்த்து வியந்து நிற்கிறார்கள். நமது கோவில்களையும், யோகா தியான முறைகளையும் பார்த்து , நாம் இங்கு பிறக்க வில்லையே என ஏங்குகிறார்கள்.


மிக கேவலமான சுகாதார வசதிகள் இருந்தும், நம் உடம்புக்கு ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தியைப் பார்த்து மிரள்கிறார்கள்.
இரண்டு விஷயங்களில் தான் நாம் பின் தங்கி இருக்கிறோம். ஒன்று சுத்தம், சுகாதாரம். இரண்டு - அரசியல் ஊழல். பெயருக்கு மட்டுமே ஜனநாயகம். சரி, அதை விடுங்கள்...


ஆனால் , நாம் அவர்களை பார்த்து அவர்கள் நன்றாக இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம். மியாமி பீச்ல பொண்ணுங்க எல்லாம் துணியே இல்லாம இருக்கிறதை, ஆட்டம் போடுறதை, பார்க்கிறதுக்கு நல்லாத் தான் இருக்கும். நம்ம தங்கச்சி, வீட்டுக்கார அம்மணி அந்த மாதிரி ஆட்டம் போட்டு , மத்தவங்க பார்த்தா - தாங்க முடியும்னு நினைக்கிறீங்க..?

அவர்கள் பெண்களுடன் சல்லாபிப்பது நமக்கு உள்ளூர அவர்கள் மேல் பொறாமைப் பட வைக்கிறது. சரி, நாமளும் பண்ணுவோம்... நாம நல்ல இருக்கிறதா ஆகிடுமா? வெளியில் ஆட்டம் போடுவதாக இருந்தாலும் நமக்கு வீட்டுல மனைவி, அம்மா, குழந்தைகளும் இருக்கணும்.. நாம அதிகாரம் பண்ணனும் இல்லை. அவங்க பாசம் நமக்கு வேணும் இல்லை? ஐயா.. சரி... ஆம்பளைக்கு ஒரு நியாயம், பொம்பளைக்கு ஒரு நியாயமானு வீட்டுக்கார அம்மணியும் நினைச்சுட்டா.. நினைக்கவே சகிக்கலை இல்லையா... இது தான் அங்கே நடக்குது... சர்வ சாதாரணமா .... மூணு , நாலு டிவோர்ஸ் .


Honey, See there.... How Sweet....!
My children and your children are playing with our children....


அர்த்தம் புரியுதா... " ஏ கண்ணு அங்கே பாரேன் .. உன் புள்ளைகளும், என் புள்ளைகளும் நம்ம புள்ளைகளோட விளையாடுராக...ஒரே மஜாவா கீது இல்லே? " அவரோட இப்போதைய மனைவி கூட பேசுறாரு..


உருகி உருகி அன்பு பொழிஞ்சு குடும்பம் நடத்திப் புட்டு - பிரிஞ்சுடுவோம்னு சொன்னா , நல்லாவா இருக்கு? கொஞ்சம் கொஞ்சமா நமக்கும் இந்த தொற்று வியாதி வந்து தொலைச்சு இருக்கு.

கடைசியா இளநீர், பதநீர், பனை நுங்கு எப்ப சாப்பிட்டு இருப்போம்? குடும்பத்தோட ஒரு ரெண்டு நாள் ஒரு பிக்னிக் - கடற்கரை, கன்னியாகுமரி , குற்றாலம் எப்போ போயிருப்போம்.. யோசிச்சுப் பாருங்க..! ஆனா, ஒரு நாள் கையில காசு கம்மி, சரக்கு அடிக்கலைன்னா... ரொம்பவே பீல் பண்ண ஆரம்பிக்கும் மனசு...! மறுநாள் எப்படியாவது காசு ரெடி பண்ணி, ஒரு கட்டிங் உள்ளே போனாத்தான் நிம்மதி அடையும்...


ஆனா, "இந்த மாசம் சீட்டுக்கு காசு கட்டவே என்ன பாடு பட்டோம்னு தெரியும்ல ... இந்த லீவுக்கு நாம எங்கேயும் போகப் போறது இல்லை.. சும்மா கிடங்கடா" ன்னு பசங்களுக்கு , ஊட்டு அம்மணிக்கு ஈசியா சமாதானம் சொல்ல மனசு உடனே தயாராகுது.. ...

சரி, நான் வுட்டா பேசிக்கிட்டேத் தான் போவேன்... மேட்டருக்கு வாரேன்..
உலகத்துல உள்ள எல்லாரையும் விட, நிம்மதியா - உயிர் பயம் இல்லாம , தலை தலைமுறையா , சோத்தோட பாசத்தையும் தின்னு வளர்ற நம்மளை விட --- வேற எல்லாப் பயலுகளும் ஏழைகள் தான்...பாவம் தான்...!

அடுத்து....


குரு, கோவிலுக்கு போனா சாமியை ஏன் சுத்திக் கும்பிடுறோம்னு என் நண்பர் கேட்டார். அப்போ எனக்கு உடனே தோணுனது இது தான்.


நீ இங்கே வாயேன், இப்படியே நில்லுன்னு , அவரை ஒரு சுத்து சுத்தினேன்.. அவனுக்கு சிரிப்பு அடக்க முடியலை.. என்னடா? எப்படி பீல் பண்றேன்னு கேட்டேன்.. இப்போ தெரியுதா.. நான் உன்னை சுத்துறப்போ , நீ வேற எல்லாத்தையும் விட்டுட்டு , எந்த நினைப்பும் இல்லாம , என்னை மட்டும் தானே பார்த்தே... அந்த மாதிரி, அந்த இறைவனோட கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சி, அவரை வலம் வருவது. அவர் நம்மளை பார்த்தாப் போதுமே, அடுத்து நாம பேசுறது எல்லாம் அவருக்கு கேட்கும். நமக்கும் சீக்கிரம் நல்லது நடக்கும்... இல்லையா?


நாம் இருக்கும் இடத்தில் இருந்து இறைவனை கும்பிடலாம், தவறில்லை. கோவிலுக்கு போகணுமா அவசியம்? அண்ணாமலை கிரிவலம் , குல தெய்வம் - ஆகியவை பற்றி நான் ஏற்கனவே நிறைய எழுதி இருக்கிறேன். பழைய கட்டுரைகளை ரெபர் செய்து கொண்டால் தன்யனாவேன். கட்டுரையும் ஏற்கனவே நீண்டுக் கிட்டே போகுது.. திரும்பவும் பிளேடு போடணுமா?


கதிர்களை ஈர்த்து , கும்பம் வழியாக கருவறை சேர்த்து , நீங்கள் மூலவரை வணங்கும்போது உங்கள் நாடி சக்கரங்களின் சுழற்சியை சரி செய்ய ஆலயங்கள் நம் முன்னோர்கள் அளித்த பெரிய வரப் பிரசாதம்..


உங்க வீட்டுக்கு பால்காரர் பால் கொண்டு வர்றாருன்னு வைச்சுப்போம். அவர் வர்ற நேரத்தில தான் வருவாரு. எனக்கு உடனே வேணும் கொஞ்சம் அவசரம் ... ஐயா, வீட்டுல திடீர்னு கொஞ்சம் விருந்தாளிக வந்துட்டாக, பால் காரர் கம்மியாத் தான் தருவாரு, வழக்கம்போல தான் எடுத்து வருவாரு... என்ன பண்றோம்..? உடனே ஓடுறோம்ல பால் பூத்துக்கு... இல்லை பால் பண்ணைக்கு...


அந்த மாதிரி , நமக்கு சில விஷயங்கள் சீக்கிரம் வேணும்னா, நாம கோவில்களுக்கு போய் தான் ஆகணும்.. உங்களோட மன பாரம் இறங்க , மன நிம்மதி கிடைக்க ஆலயங்கள் , நமக்கு கிடைத்து இருக்கும் அருட் கொடைகள்..


சரி, இன்னைக்கு இவ்வளோ போதும்... நிச்சயமா குட்டையை குழப்பி விட்டு இருப்பேன் என நம்புகிறேன். தெளிவான விளக்கங்கள் இல்லை எனினும் , உங்களை கொஞ்சம் சிந்திக்க வைத்து இருக்கும்.. நான் சொன்னா கேட்கவா போறீக.. நீங்களே யோசிச்சு உங்க மனசு என்ன சொல்லுதுன்னு கேட்டு பாருங்க... அது சொல்றதை , நீங்க நிச்சயம் நம்புவீங்க...! அப்புறம் கீழே ஒரு குட்டிக் கட்டுரை, படிச்சுப் பாருங்க...
அவசியம் மறக்காமல் , உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் இடுங்கள்....
போதும் முடிச்சுக்கலாம்... என்னது ... இன்னொரு கேள்வி இருக்கா? அட ஆமா இல்லை... ரொம்ப உஷாரா இருக்கிறீங்க....


நீ கடவுளை பார்த்து இருக்கிறாயா? அந்த கேள்வி தானே....!


'அன்பே சிவம்' கமல் மாதிரி சொல்லப் போறது இல்லை.. ரொம்ப கிரிஸ்டல் கிளியரா சொல்றேன் ...... YES . ஆனா, இது உங்களுக்கு தேவை இல்லாத ஒன்று.. நீங்களே தரிசிக்கும் வரை , நீங்கள் நம்ப வேண்டிய அவசியம் இல்லை... ஆனாலும், உண்மையான தேடல் ஒரு நாள் உங்களை பக்குவப் படுத்தும்...அதனால் தான் அப்பழுக்கற்ற நம்பிக்கையில் சொல்கிறேன்... உங்கள் அனைவரின் துக்கங்களும் கரைய, லட்சியங்கள் நிறைவேற , இறைவனையும் உங்களுடன் வைத்துக் கொண்டு போராடுங்கள்... அவனைப் பற்றிக் கொள்ளுங்கள்...


 

2 comments:

  1. Sir letters ella sariya puriyalla theriyavum ella konchum big size ella type pannugha

    ReplyDelete
  2. நீ கடவுளை பார்த்து இருக்கிறாயா?

    ...... YES .
    நீங்களே தரிசிக்கும் வரை , நீங்கள் நம்ப வேண்டிய அவசியம் இல்லை... ஆனாலும், உண்மையான தேடல் ஒரு நாள் உங்களை பக்குவப் படுத்தும்...

    ReplyDelete