Monday, 13 August 2012

பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள்

தமிழ் மாதப் பலன்கள்
பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள்
சூரியன் மீன ராசியில் சஞ்சரிப்பதை பங்குனி மாதம் என்று அழைக்கிறோம். மீன ராசியானது குருவுக்கு ஆட்சி வீடும், சுக்கிரனுக்கு உச்சவீடும், புதனுக்கு நீசவீடும் ஆகும். சூரியனுக்கும், செவ்வாய்க்கும் இது நட்பு வீடாகும். சந்திரனும் சனியும் இங்கு சமம். பஞ்ச தத்துவங்களில் இது நீரைக் குறிப்பிடும் ராசியாகும். இருதரப்பட்ட ராசி ஆகையால் உபயராசி என்று பெயர். பங்குனியில் பிறந்தவர்களின் தோற்ற அமைப்பு : உயரம் குறைந்தவர்கள். தலை பெரிதாகவும், நெற்றி உயர்ந்தும் காணப்படும். மற்ற அங்க அமைப்பு இவருக்குப் பொருத்தமற்றதாக அமையும். உருளையான சரீரம் உடையவர். உரோமங்கள் கீழ்நோக்கி வளரும். இரு நிறமுடையதாக இருக்கும். எடுப்பாகவும் காணப்படும். புருவங்கள் வட்டமாக அமைந்து இருக்கும். கண்கள் கெண்டை மீன் போன்ற சாயலை உடையது. கன்னங்கள் உப்பியிருக்கும். மீன்களைப் போன்று விரிந்த வாய்ப்புறமும், சரிந்த உதடுகளும் மேல் உதடு முன் சாய்ந்தும். நாசி மிருதுவாகவும், சரிந்தும் காணப்படும். மேனி பளப்பளப்பாகக் காணப்படும். பற்கள் வரிசையாக இருந்தபோதிலும் உறுதி வாய்ந்தவை அல்ல. கைகள் தொடுவதற்கு மிருதுவாகவும், விரல்கள் குட்டையாகவும், நுனிப்பாகம் கூர்மையாகவும் அமைந்திருக்கும். மெலிந்த குரலுடையவர். பேசும்போதே சிலர் கைகளை வீசி நடப்பர். கால்கள் குட்டையாகவும், தடித்தும் இருக்கும். நடக்கும்போது உடல் குலுங்கும். உடுக்கும் உடைகள் உயர்ந்த ரகமுடையவையெனினும் தளர்ந்தும் சற்றுத் திறந்தாற்போலும் காணப்படும். யாவரையும் எளிதில் வசியப்படுத்தும் முகத்தோற்றமுடையவர். கனிந்த பார்வையும், மலர்ந்த முகமும் புன்சிரிப்பும் எத்தருணத்திலும் இவருக்குப் பூஷணங்களாக விளங்கும். கவலைகள் நிறைந்திருப்பினும், கவ லையற்ற முகபாவ லட்சணங்களுடையவர். வெகு சீக்கிரத்தில் விருப்பு வெறுப்புகளை உணர்ச்சி வசப்படுத்திக்கொள்வர். வெகு சீக்கிரத்தில் மனத்தளர்ச்சியடைந்திடுவர்.

பங்குனியில் பிறந்தவர்களின் குணபாவங்கள்

தம்மிடத்தில் உள்ள ரகசியங்களை மறைப்பவரல்லர். தன்னம்பிக்கை உடையவராயினும் வளைந்து கொடுப்பர். எளியவரிடத்திலும், வாயில்லாப் பிராணிகளிடத்திலும் மிகுந்த இரக்க குணமுடையவர். நேர்மையானவர். குறுக்கு வழிகள் இவருக்குத் தெரியாது. பிறருக்கு விட்டுக் கொடுக்கும் பரந்த நோக்கமுடையவர். பயந்த சுபாவமுடையவர். பிறரைக் கண்டிக்கும் விவகாரங்களில் இவர் பின்வாங்குவர். துர்நடத்தையுடையவர்களும் ஒழுக்கங்கெட்டவர்களும் இவரை வெகு சீக்கிரத்தில் வசப்படுத்திக்கொள்வர். துர்ப்போதனைகளை இவர் துரிதமாய்க் கிரகித்துக் கொள்வர். அடிக்கடி தம்முடைய லட்சியங்களை மாற்றிக்கொள்ளும் தன்மையுடையவர். வெகு சீக்கிரத்தில் யாவரையும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக்கிக்கொள்வர். அதேபோல் வெகு சீக்கிரத்தில் பிறர் மீது தமக்குள்ள அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்வர். இவரை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்குவது மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்குவது போலாகும்.

எப்போதும் கற்பனையுலகில் கிடப்பர். வினோத லீலைகளிலும், கேளிக்கைகளிலும் தம்மை வசப்படுத்திக்கொள்வர். மன எழுச்சியை உண்டாக்கும் கதைகளை வாசிப்பதிலும், கிளர்ச்சியூட்டும் ஓவியங்களையும் கண்டுகளிப்பதில் பொழுதைப் போக்குவர். மதுவும், மாதுவும் இவருக்குப் பொழுதுபோக்குச் சாதனங்கள். ஒரு சிலர் சூதாட்டத்திலும் தம்மைப் பரவசப்படுத்திக்கொள்வர். இவரை மற்றவர் மீட்பது அசாத்தியமான காரியமாகும். தெளிவுடன் விளங்கும்போது இவர் ஆழ்ந்த கருத்துடையவராகவும், மிகவும் பொறுமைசாலிகளாகவும், தன்னடக்கமுடையவர்களாகவும் தயாளராகவும் திறமைசாலிகளாகவும் விளங்குவர். சோதிடர், மாந்திரீகம், காமசாஸ்திரம், தந்திரம், ஜாலவித்தை, செப்பிடுவித்தை போன்ற சாஸ்திரங்களில் ஆர்வமுடையவராகவும் ஏதாவதொரு கலையில் வல்லமையுடையவராகவும் விளங்குவர். தம்மை நாடி வந்தவர்களைப் போஷிப்பதில் இவருக்கு நிகர் வேறொருவரைக் காண்பது அரிது. தம்மைச் சார்ந்தவர்களை எல்லாவகையிலும் திருப்தியடையச் செய்திடுவர் மற்றவர் சுகத்தைத் தம் சுகமாகக் கருதும் உயர்ந்த பண்பு உடையவர்.

குறையும் - நிறையும்

இந்த மாதத்தில் தோன்றியவர்கள் தமக்குத்தாமே தீங்கு விளைவித்துக்கொள்ளும் பிரக்கிருதிகள் என்றால் மிகையாகாது. இவருக்கு விருப்பு, வெறுப்பு வெகுவாகப் பற்றிடும். பிறரை எளிதில் நம்புவர். அதேநேரம் சீக்கிரத்தில் நம்பிக்கையிழக்கவும் செய்வர். இவருடைய பழக்கவழக்கங்கள் வெகுசீக்கிரத்தில் மாற்றமடைந்துகொண்டே இருக்கும். பொறுப்பான விவகாரங்களில் பொறுப்பற்றவராகவும் வாழ்க்கைக்கு ஒவ்வாத விவகாரங்களில் மிகவும் அக்கறை கொண்டவராகவும் விளங்குவர். இவருக்கு ஏற்றபடி சுக சௌகரியங்கள் அமையாததால் எப்பொழுதும் குடியிருப்பு இடத்திற்கே வந்து சேருவர். மக்களிடத்தில் பாசமுடையவர். பிறர் ஏசுவதை தாங்கிக்கொள்ள மாட்டார். இவரை வெறுக்கும் உறவினர்களை விரோதிகளாகப் பாவித்து அவர்களுடன் தொடர்புகொள்ளும் உறவினர்களையும், நண்பர்களையும் விரோதித்துக்கொள்வர். தம்முடைய காரியங்களைச் சாதித்துக்கொள்வதற்கு எந்த நேரங்களிலும் நாடிடுவர்.

நோயும் தீரும்வகையும்

சாதாரணமாக மனோவியாதியை விட உடற்பிணிகள் இவரை அதிகம் வாட்டுவதில்லை. அஜீரணம், வயிற்றுக் கோளாறு போன்றவை அதிக கவலையினால் ஏற்படக்கூடிய சோர்வுகளாகும். இவர் பழக்கவழக்கங்களை மாற்றி அமைத்துக்கொண்டு ஒழுங்கு தவறாமலிருப்பின் எவ்வித நோயும் இவரை அண்டாது. அதிக கவலையாலும், மிரட்சியாலும், வறட்சியாலும் ஒரு சிலருக்குக் காசநோய் ஏற்படுவதுண்டு.

பெருந்தன்மை உடையவர்கள். பரந்த நோக்கம் உடையவர். ஆனால், ஸ்தோத்திரப் ப்ரியர். இவரைப் புகழ்ந்து பேசியவர்கள் எந்த நேரத்திலும் இவர்களிடமிருந்து சலுகைகளைப் பெற்றிடலாம். தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடக்கூடியவர். சதாநேரமும் இவர் ஏதாவதொரு புத்தகத்தைப் படித்துக் கொண்டே இருப்பர். பழிச்சொல் தாளாதவர். வாழ்க்கையில் ஏற்படும் சிறிய ஏமாற்றங்களையும் இவர் பெரிதாகக் கருதிடுவர். இதனால் கவலையும், அதிர்ச்சியும், மனக்கொதிப்பும் ஏற்படும். இரத்த அழுத்தமும், இரத்தக் கொதிப்பும் நேரிடுவதால் இவருக்கு ஒரு சில தருணங்களில் மயக்கம் போன்ற அயர்வுகள் தோன்றி மறையும். இந்த மயக்கம் இரத்தக் கொதிப்பினாலும் ஏற்படும். அதிகப் பித்தத்தினாலும் ஏற்படக்கூடியது. ஓய்வு நேரத்தை அதிகப்படுத்திக் கொள்வது நல்லது. பணவிவகாரங்களில் பிறருக்கு வாக்குறுதி அளிக்கலாகாது. பிறரையும் அதிகம் நம்பலாகாது. எலுமிச்சம்பழம், தேன் இவைகளை உணவு வகைகளில் சேர்த்துக்கொள்வது சிறந்த மருந்தாகும்.

வாழ்க்கைத் துணை

ஆடி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதங்களில் பிறந்தவர்கள் கூட்டாளியாகவோ, வாழ்க்கைத் துணையாகவோ அமைந்தால் ஒற்றுமையான, அமைதியான வாழ்க்கையும் ஏற்படும். வைகாசி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி ஆகிய மாதங்களில் தோன்றியவர்கள் அமைவாராயின் அமைதியற்ற வாழ்க்கையும் துயரமுள்ள நிலையும் உண்டாகும்.

தொழில்

பங்குனி மாதத்தில் தோன்றியவர்கள் கப்பல், படகு, தோணி, கட்டுமரம் போன்ற நீர்வாகனங்களில் பிரயாணம் செய்யும் வாய்ப்புடையவர். மாலுமிகளாகவும், கப்பல் படைவீரராகவும் மீன் பிடிக்கும் தொழிலில் வல்லவராகவும் விளங்குவர். சுற்றுப் பிரயாணத்தில் ஈடுபடுவதால் பிறதொழில் ஸ்தாபனங்களுக்குப் பிரதிநிதிகளாகச் செயலாற்றுவதில் இவர் சமர்த்தர். கதாசிரியராகவும், பிரசுரகர்த்தாவாகவும், புத்தக வியாபாரியாகவும், கணக்காய் வாளராகவும் திகழ்வர். ஆனால், அடிக்கடி தொழிற்றுறையில் மாற்றமும், திருப்பமும் உண்டாகும். நுணுக்கங்களைக் கூர்ந்து கவனிக்கும் எத்துறையிலும் இவர் திறமைசாலிகளாகையால் பொறுப்பான காரியங்களை இவரிடத்தில் பயமற்று ஒப்படைக்கலாம். ஆராய்ச்சி செய்வதில் தமக்கெனச் சிறந்த பாணியை இவர் கையாள்வர். புதிய கருத்துக்களை உலகுக்கு வெளியிடுவர். தத்துவ ஆராய்ச்சியிலும் ஆன்மீகத் துறையிலும் இவர் ஒப்பற்ற ஞானியாகவும் விளங்குவர்.

அதிர்ஷ்ட எண்:

இவருக்கு 3 அதிர்ஷ்ட எண் ஆகும்.

நலம் தரும் நிறம்

இவருக்கு மஞ்சள் அல்லது பொன்னிறம் நலந்தரும் நிறம்.

1 comment: