Monday 27 August 2012

நவகிரகங்களின் தசா புக்திக்குரிய நவரத்தினங்கள்



ஓருவரின் ஜனன ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளைக் கொண்டு தான் அவர்களுடைய தலை எழுத்தானது நிர்ணயிக்கப்படுகிறது. 12 கட்டங்களும் 9 கிரகங்களுமா நம் வாழ்வை நிச்சயிக்கின்றன? என பலர் ஆச்சர்யப்படலாம். யாரையும் நம்ப வைப்பதோ, கட்டாயத்திற்குட்படுவதோ நோக்கமல்ல. ஆனால் ஒன்றை மட்டும்தெளிவாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பிறக்கும்போது எந்ததெந்த கிரகங்கள் என்னென்ன நிலையில் உள்ளதோ அவை இறக்கும் வரை அப்படியேதான் இருக்கும். பிறந்த நட்சத்திரத்துக்குரிய கிரகத்தின் திசையில் ஆரம்பித்து அடுத்தடுத்து என்னென்ன கிரகங்கள் வருமோ அந்தந்த திசைகள் வந்தே தீரும்.

உதாரணமாக ஒருவர் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்திருப்பாரேயானால் அவருக்கு முதலாவதாக வரக்கூடிய திசை சூரிய திசையாக இருக்கும். ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் கர்ப செல் நீக்கி இருப்பு என கணக்கிட்டு 3 வருடம் 2 மாதம் 27 நாட்கள் என கொடுத்திருப்பார்கள். அதாவது இவரின் சூரிய திசை 3 வருடங்கள் 2 மாதங்கள் 27 நாட்கள் மீதமிருப்பதாக கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து சந்திர திசை 10 வருடங்கள்,செவ்வாய் 7வருடங்கள், ராகு 18 வருடங்கள், குரு 16 வருடங்கள் என தொடர்ந்து சனி, புதன், கேது, சுக்கிரன் என திசைகள் நடைபெறும்.

ஜனன ஜாதகத்தில் கிரகங்கள் பலம் பெற்று அமைந்து அதன் திசை புக்தி காலங்களில் ஜாதகர் சுபிட்சமானப் பலனைப் பெறுவார். அதுவே கிரக நிலைகள் சாதகமின்றி அமைந்து விட்டால் அதற்குரிய கெடுபலன்களை அடைந்தே தீர வேண்டும். ஒரு கிரகத்திற்கு பலத்தை கொடுப்பதற்கோ, பலமிழக்க செய்வதற்கோ மனிதனாக பிறந்த நமக்கு எந்த சக்தியுமில்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

கெடுபலன்களை குறைப்பதற்காகவும் அதன் பிடியிலிருந்து தப்பித்து கொள்வதற்காகவும் தான் இப்படி நவரத்தின கற்களை அணிந்து கொண்டு இறைவழிபாடுகளை மேற்கொண்டு வருகிறோம். இது மட்டுமல்லாமல் நவகிரகங்களுக்குரிய பரிகாரங்களைச் செய்வதும் நல்லது. நவரத்தின கற்களை எந்த கிரகத்திற்காக அணிகிறோமோ அந்த ஒளிக்கதிரானது நம் மீது பட்டு அதனால் உண்டாகக்கூடிய கெடுபலன்கள் விலகி வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

No comments:

Post a Comment