Saturday 25 August 2012

கடக ராசியும் வாழ்க்கை அமைப்பும்



கடகம் (புனர்பூசம், 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கடக ராசியின் அதிபதி மாதக்கோள் என வர்ணிக்கப்படக் கூடிய சந்திர பகவானாவார். இது இரண்டாவது சர ராசியாகும். பஞ்ச பூதங்களில் நீர் தத்துவத்தை குறிக்கும் கடக ராசி ஒரு பெண் ராசியாகும். புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களை கடக ராசிகாரர்கள் என்கிறார்கள். இந்த ராசிக்கு ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும்.

உடலமைப்பு,

கடக ராசிக்காரர்களுக்கு மேலோரிடத்தில் மரியாதையும், சாந்தமும், சகிப்பு தன்மையும், கடவுள் பக்தியும் அதிகம் இருக்கும். நடுத்தர உயரம் கொண்ட இவர்கள் சிறு வயதில் ஒல்லியாக இருந்தாலும் வயது ஏற ஏற உடல் பெருத்து உருண்டு திரண்ட அங்க அமைப்புகளுடன் குண்டாக காணப்படுவார்கள். இவர்களுக்கு கூர்மையான மூக்கும், உயர்ந்த நாசியும், அழகான உதடுகளும், அழகான வில் போன்ற புருவங்களும் அமைந்திருக்கும். பேச்சில் உறுதியிருந்தாலும் மெல்லிய குரலில் தான்பேசுவார்கள். பார்வையில் ஓர் அழகிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் அறிவாற்றலும் பெற்றிருப்பர்.
குண அமைப்பு,

கடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். எல்லோரிடத்திலும் சகஜமாக பழகி எதையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் இவர்கள் துணிந்தபின் துயரம் இல்லை என்ற சொல்லிற்கேற்ப நண்டுபிடி போட்டு செய்து முடிப்பார்கள். இரக்க குணமும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படுவார்கள். ஜலாராசிகள் என்பதால் கற்பனை திறன் அதிகமிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் உண்டு. இவர்களிடம் பழகுவது கடினம் என்றாலும் பழகியபின் பிரிய முடியாது. தன்னை நம்பியவர்களுக்கு எல்லாவித உதவியும் செய்வார்கள். இதனால் அடிக்கடி ஏமாந்து போவதும் உண்டு. பிடிவாத குணம் கொண்டவர்கள். என்னதான் தியாக மனப்பான்மை இருந்தாலும் வாக்களித்தவர்களையும் சொன்னதை செய்ய மறந்தவர்களையும் விடாமல் தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள். கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனம் உள்ளவர்கள் என்பதால் இவர்களால் பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது. பிறர் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்காமல் தங்களுடைய கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால் பலரின் வெறுப்பிற்கு ஆளாகி விடுவார்கள்.

மண வாழ்க்கை,

இவர்களுக்கு வாய்க்கக்கூடிய வாழ்க்கைத் துணை சலிப்பில்லாமல் உழைக்ககக்கூடியவராக இருப்பார். எவ்வளவுதான் உழைத்தாலும் கடக ராசிகாரர்கள் ஏதாவது குறைகூறிக் கொண்டும், தங்களுடைய அதிகாரத்தை செலுத்திக் கொண்டும் இருப்பார்கள். சில நேரங்களில் கொஞ்சிப் பேசுகிறார்களே என நினைத்தால் அடுத்த கணமே திட்டு வாங்க வேண்டியிருக்கும். ஆரம்ப கால வாழ்க்கை வசதி குறைந்து இருந்தாலும் இல்வாழ்க்கை அமைந்தது முதல் உற்சாகத்திற்கு பஞ்சம் இருக்காது. சுகமும், துக்கமும் மாறி மாறி வந்தாலும் அதிகம் பொருட்படுத்தாமல் வாழ்வார்கள். தன் வாழ்நாளில் ஆடம்பர வசதியுடன் சுகபோக வாழ்க்கையை வாழ்வார். குடும்பத்தின் மீது அக்கறையுடன் இருப்பார்.
பொருளாதார நிலை,

கடக ராசியில் பிறந்தவர்கள் சுகவாசிகளாக வாழ்வதையே விரும்புவார்கள். எந்த விதத்திலும் பணத்தை சம்பாதிக்கக் கூடிய திறமைப் பெற்றவர்கள். கையில் பணம் இல்லாமல் இவர்களால் இருக்க முடியாது. இவர் கடனாக கொடுக்கும் பணம் எதுவும் திரும்ப வராது என்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. பணத்தால் நெருங்கிய பழகுபவர்களிடம் கூட பிரச்சினைகள் உண்டாகும். ஆடம்பர செலவிற்கேற்ப பண வரவுகள் இருந்தாலும் சேமிப்பு என்பது இருக்காது. சிறு வயதிலிருந்தே சுயமாக வீடு, மனை, வாசல், வண்டி, வாகனங்கள் யாவும் சிறப்பாக அமைந்து சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். கடக ராசிகாரர்களுக்கு கடன் வாங்குவதென்பது பிடிக்காத ஓர் விஷயமாகும். பெற்றோர் ஏற்படுத்தி விட்டு சென்ற கடனாக இருந்தாலும் தன்னுடைய சொத்துக்களை விற்றாவது அனைத்தையும் தன் வாழ்நாட்களிலேயே அடைத்து விடுவார். சுபகாரியங்களுக்காக அடிக்கடி செலவு செய்வதும், பொது நல காரியங்களுக்கா செலவு செய்வதும் இவர்களுக்கு வாடிக்கையான ஒன்றாகும்.
புத்திரபாக்கியம்,

கடக ராசி பெண் குழந்தை யோகமே உண்டு. அப்படியே இருந்தாலும் பிள்ளைகளுக்கும் இவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஒரு சிலர் ஆண் வாரிசுக்காக தத்தெடுத்து வளர்ப்பதும் உண்டு.

தொழில்

எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிபெறச் கூடிய கடக ராசிக்காரர்கள் அடிக்கடி தூர தேசங்களுக்கு சென்று பொருளீட்டக்கூடிய வாய்ப்பினைப் பெறுவார்கள். கலை நடிப்பு, ஆராய்ச்சித் துறைகளிலும், உணவுப் பொருட்கள் செய்யும் சமையல் கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். கலைநுட்பமும், வாக்கு சாதுர்யமும், சங்கீதமும் இவர்களிடத்தில் அதிகம் குடி கொண்டிருக்கும். ஓவியம் தீட்டுதல், போலீஸ், இராணுவம் போன்றவற்றிலும் ஒரு சிலருக்கு அரசு வழியில் உயர் பதவிகளை வகிக்கும் யோகமும் உண்டாகும். இவர்கள் லாட்டரி ரேஸ் போட்டி, பந்தயம் போன்றவற்றில் ஈடுபட்டால் வீண் விரயங்களை சந்திப்பார்கள்.

உணவு வகைகள்,

கடக ராசிகாரர்கள் தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பால், முட்டை, முட்டை கோஸ், கீரை வகைகள், பரங்கிக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்டம் அளிப்பை

எண் - 1,2,3,9,10,11,12,18
நிறம் - வெள்ளை, சிவப்பு
கிழமை - திங்கள், வியாழன்
கல் - முத்து
திசை - வடகிழக்கு
தெய்வம் - வெங்கடாசலபதி

11 comments: