Monday 27 August 2012

குரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்


நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனத்திற்கும் புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன் ஆவார்.

குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல, குரு நிற்கும் இடம் பாழ், பார்க்கும் இடம் கோடி புண்ணியம் ஆகும். குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்வார். பொதுவாக எவ்வளவு தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் தோஷம் விலகி விடும்.

கோட்சார ரீதியாக ஒரு ராசியில் 1 வருடம் தங்கும் குரு பகவான் ஜென்ம ராசிக்கு, 2, 5, 7, 11 ஆகிய பாவங்களில் சஞ்சரிக்கும் போது நற்பலனை வழங்குவார். குரு தனுசு மீனத்தில் ஆட்சியும், கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமும் பெறுவார். குருவிற்கு சூரியன், சந்திரன் செவ்வாய் நண்பர்கள், புதன் சுக்கிரன் பகைவர். சனி,ராகு, கேது சமம். பல்வேறு நற்பலனை வழங்கும் யோகங்கள் குரு கிரக சேர்க்கை போது உண்டாக்குவார்.

ஜென்மத்தில் குரு
 
குரு ஜென்ம லக்கினத்தில் இருந்தால் நல்ல உடல் அமைப்பு, நல்ல பழக்க வழக்கம், சிறப்பான பேச்சாற்றல், பரந்த மனப்பான்மை, நீண்ட ஆயுள், சிறப்பான நட்புக்கள், பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும். குரு பலம் இழந்து இருந்தாலும் பாவிகள் சேர்க்கை பெற்றாலும் உடல் நிலை பாதிப்பு, தேவையற்ற இடையூறு உண்டாகும்.

குரு 2ல் இருந்தால்
 
தன ஸ்தானமான 2ல் குரு சுபர் சேர்க்கையும் இருந்தால் தாராள தன வரவு, நல்ல பேச்சு ஆற்றல், வசதி, வாய்ப்பு, குடும்ப வாழ்வில் ஒற்றுமை,நல்ல கண் பார்வை உண்டாகும். குரு தனித்து இருந்தால் பொருளாதார ரீதியாக சில சங்கடம் உண்டாகும். குரு பாவிகள் சேர்க்கை பெற்றோ, பலம் இழந்தோ இருந்தால் பண கஷ்டம், குடும்ப வாழ்வில் பிரச்சனை உண்டாகும்.

குரு 3ல் இருந்தால்
 
குரு 3ல் இருந்தால் எடுக்கும் முயற்சியில் அனுகூலம், எதிலும் தனித்து செயல்படும் நிலை ஏற்றம் உயர்வு உண்டாகும். தனித்து குரு இருந்தால் இளைய சகோதர தோஷம் ஆகும். ஆண் கிரக சேர்க்கை உடன் இருந்தால் சேர்க்கை உடன் பிறப்பில் அனுகூலம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சகோதர தோஷம் ஏற்படும்.

குரு 4ல் இருந்தால்
 
கேந்திர ஸ்தானமான 4ல் குரு இருந்தால் வசதி வாய்ப்பு, செல்வம், செல்வாக்கு, அசையா சொத்து யோகம், நல்ல பழக்க வழக்கம், நல்ல கல்வி ஆற்றல், சுக வாழ்வு உண்டாகும். தனித்து இல்லாமல் கிரக சேர்க்கையுடன் இருப்பது மிகவும் நல்லது. தனித்து பலம் இழந்தால் சுக வாழ்வு பாதிப்பு, அசையா சொத்து அமைய தடை உண்டாகும்.

குரு 5ல் இருந்தால்
 
5ல் குரு இருந்தால் நல்ல அறிவாற்றல், பரந்த மனப்பான்மை, பொது காரியம், சமூக நல பணியில் ஈடுபாடு, சிறப்பான குடும்ப வாழ்வு, பெரியோர் ஆசி உண்டாகும். தனித்து இருந்தால் புத்திர தோஷம் ஆகும். சுப கிரக சேர்க்கையுடன் இருந்தால் சிறப்பான புத்திர பாக்கியம் வசதி வாய்ப்பு உண்டாகும்.

குரு 6ல் இருந்தால்
 
குரு 6ல் இருந்தால் எதிரிகளை வெல்லும் அமைப்பு, நல்ல ஆரோக்கியம், சிறப்பான குடும்ப வாழ்வு, பொருளாதார ரீதியாக அனுகூலம் உண்டாகும். குரு பலம் இழந்தால் வயிறு கோளாறு, பெரியவர்கள் சாபத்தால் வாழ்வில் மன குறை உண்டாகும்.
குரு 7ல் இருந்தால்
 
குரு ஜென்ம லக்கினத்திற்கு 7ல் இருந்தால் சுபர் சேர்க்கை மற்றும் சுபர் பார்வையுடன் இருந்தால் மன வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும். நல்ல அழகான மனைவி, சிறப்பான குடும்ப வாழ்வு, வசதியான பெண் மனைவியாக வரும் யோகம் உண்டாகும். 7ல் தனித்து இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் (கேந்திராதிபதி தோஷம்) தோஷத்தை உண்டாக்கும் பாவிகள் சேர்க்கை பெற்றால் மண வாழ்வில் பிரச்சனை உண்டாகும்.

8ல் இருந்தால்
 
குரு பகவான் 8ல் பலமாக இருந்தால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், திடீர் தன சேர்க்கை இருக்கும் இடத்தில் நல்ல பெயர் இறுதி நாட்கள் அமைதியாக இருக்கும் நிலை உண்டாகும். குரு பாவிகள் சேர்க்கை பெற்றோ, பலம் இழந்தோ இருந்தால் நோய், உடம்பு பாதிப்பு, சாபத்தால் மன அமைதி இல்லாத நிலை உண்டாகும்.

9ல் இருந்தால்
 
குரு பகவான் 9ல் இருந்தால் தாராள தன சேர்க்கை, பூர்வீகத்தால் அனுகூலம், பெற்றோர் மூலம் அனுகூலம், தந்தைக்கு நீண்ட ஆயுள், பொது பணி, தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நல்ல பழக்க வழக்கம், பெரியோர்கள் ஆசி உண்டாகும்.

10ல் இருந்தால்
 
குரு பகவான் 10ம் வீட்டில் இருந்தால் உயர் பதவிகளை வகிக்கும் அமைப்பு பண நடமாட்டம் கொடுக்கல் வாங்கல் தொடர்புள்ள தொழில், அல்லது துறைகளில் பணிபுரியும் அமைப்பு, நேர்மையான வழியில் செல்லும் நிலை, பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கிரக சேர்க்கையுடன் பலம் இழக்காமல் இருப்பது நல்லது. தனித்து இருந்தால் நிறைய தடைகள் உண்டு.

11ல் இருந்தால்
 
குரு 11ல் இருந்தால் தாராள தன வரவு, நல்ல அறிவாற்றல், வசதி வாய்ப்பு, உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் சமுதாயத்தில் பெயர் புகழ் கௌரவம் உண்டாகும். புத்திர வழியில் அனுகூலம், சிறப்பான குடும்ப வாழ்வு, திடீர் அதிர்ஷ்டம், ஸ்பெகுலேஷன் மூலம் ஏற்றம் ஏற்படும்.

குரு 12ல் இருந்தால்
 
குரு 12ல் இருந்தால் பண வரவில் இடையூறு, வீண் செலவுகள், சுப காரியங்களுக்கு செலவு செய்யும் நிலை உண்டாகும். குரு 6, 8க்கு அதிபதியாக இருந்து 12ல் இருந்தால் நற்பலனை உண்டாக்குவார். 12ல் குரு சுபர் பார்வை உடன் இருந்தால் நல்ல உறக்கம் நிம்மதியான இல்லற வாழ்வு, சுப செலவு, சிறப்பான கண் பார்வை உண்டாகும்.

1 comment:

  1. வணக்கம்
    எனக்கு சந்திர தசா நடகிறது
    கடகலக்னம்
    கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம்(3)
    1ல் சந்திரன் 2ல் சுக்ரன்
    3ல் சூரியன் + செவ்வாய் + புதன்
    6ல் குரு + ராகு
    11ல் சனி
    12 ல்கேது
    மிக மோசமான சூழ்நிலை
    உணவுக்கே கஷ்டபடுகின்ற நிலை
    உழைத்து பலன் இல்லை
    நல்ல நிலைக்கு வருவேனா
    02.10.1972 >1.30 காலை ஈரோடு
    குரு தட்சணைக்கு கூட வழி இல்லாதவனாக இருக்கிறேன்
    நீங்கள் தான் நல் வாக்கும் ஆசியும் தர வேண்டும் அய்யா

    ReplyDelete