Monday 13 August 2012

நாடி சோதிடம் பாகம் - 1

நாடி ஜோதிடம்
நாடி சோதிடம் பாகம் - 1
பொதுவாக, பிறந்த ஜாதகம் ஆனது, ஒருவர் இந்த மாதிரிப் பலனை அனுபவிக்கப் பிறந்தவர் எனக் காட்டும். எப்போது அனுபவிப்பார் என்பதை, பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரகத்தைக் கோச்சார கிரகம் எந்த வயதில் இணைகிறதோ அல்லது பார்வை தருகிறதோ, அப்பொழுது அனுபவிப்பார்.

பழைய முறைப்படி பாவகங்களை எடுத்து, பாவகாரகங்களை வைத்து, தசாபுத்தியை மையமாக வைத்துப் பலன் சொல்லப்படுகிறது. ஆனால் பிருகு நந்தி நாடி முறையில், பாவகாரகங்களை விடுத்து முற்றிலும் கிரக காரகங்களை வைத்துப் பலன் ஆராயப்படுகிறது. குறிப்பாக, ராசிக் கட்டத்தில் ஒரு கிரகமாகப்பட்டது, தனித்து எந்த வீட்டில் இருந்தாலும், அந்த கிரகமாகப்பட்டது எந்தவிதமான பலனையும் தருவது இல்லை. அதற்கு மாறாக, ஒரு கிரகமானது, வேறு ஒரு கிரகத்துடன் இணைந்து, ஒரு வீட்டில் இருந்தால், அந்த இணைவுக்குத் தக்கபடி நல்ல பலனையோ அல்லது கெட்ட பலனையோ தரும். இது நாடி விதி.

நாடிமுறை ஜோதிடத்தில் சுமார் 23 விதிகள் உள்ளன. இவற்றைத் தெரிந்துகொண்டால் நாடி முறையில் பலன் சொல்வது சுலபம்.

விதி 1:
ஒரே திசையில் இருக்கும் கிரகங்கள் இணைந்து செயலாற்றும் என்பதற்கு உள்ள அடிப்படைக் கருத்தை உணரவேண்டும். இதில் திரிகோண ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு ஒரே திசையான கிழக்குத் திசையையும், நெருப்புத் தத்துவத்தைக் குறிப்பதாகவும் கட்டத்தில் காட்டப்பட்டுள்ளது. அதேபோல், மற்ற திரிகோணங்களை அறிந்துகொள்ளவும்.

விதி 2:
ஒரு கிரகம் இருக்கும் ராசிக்கு நேர் எதிர்த் திசையில் உள்ள கிரகம் அந்தக் கிரகத்திற்குப் பாதிப்பைத் தரும். முதலில், காட்டப்பட்டுள்ள ராசியில் கிழக்குத் திசைக்கு நேர் எதிர்த்திசையாக மேற்குத் திசை காட்டப்பட்டுள்ளது. உதாரணமாக, மேஷம் கிழக்கு, அதற்கு நேரெதிர்த்திசை துலாம் மேற்கு. மேஷம் நெருப்பு, துலாம் காற்று. இரண்டுமே சர ராசிகள். ஆக, இது காட்டுத்தீயைக் குறிக்கும். நெருப்பு எரியக் காற்று தேவை. இங்கு இரண்டுமே சரமானதால் காட்டுத் தீ எனக் கொள்ளலாம். இது போல் மற்ற இரண்டு வீட்டுக்கும் நீங்களே முடிவு செய்யவும்.

அடுத்து, தெற்குத் திசைக்கு நிலம் என்றும் வடக்குத் திசைக்கு நீர் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இங்கு நிலம் செழிப்படைய நீர் தேவை. இது இரண்டும் ஸ்திர ராசிகள். ஆக, ஸ்திரத்தன்மையைக் காட்டும். இதுபோன்று மற்ற ராசிகளுக்கு நீங்களே முடிவு செய்யலாம்.

விதி 3:
பாரம்பரிய முறைப்படி சுவன், அசுவன் எனப் பிரிக்காமல் நட்பு, பகை எனப் பிரிக்கப்படுகின்றது. பாரம்பரிய முறை நட்பு, பகைக்கும் நாடி முறை நட்பு, பகைக்கும் சிறிது வித்தியாசம் இருக்கும். இது எதற்காக எடுக்கப்படுகிறது என்றால், ஒரு கிரகமாகப்பட்டது, இரு நண்பர்கள் மத்தியில் இருந்தால் நன்மையான பலனையும் இரு பகைக் கிரகங்களின் மத்தியில் இருந்தால் தீமையான பலனையும் அளிக்கும் என்பதைக் குறிக்கவே.

விதி 4:
கிரகங்கள் தமது ஆட்சி வீட்டிலோ, நட்பு வீட்டிலோ, உச்ச வீட்டிலோ நின்று, பலம் பெற்று இருந்தாலும், அந்தக் கிரகம் நின்ற வீட்டுக்கு 2ஆவது வீடு மற்றும் 12வது வீட்டில் அல்லது தான் நின்ற வீட்டிலோ முன், பின் பகைக் கிரகங்கள் நின்றுவிட்டால், அந்தக் கிரகம் தனது பலத்தை இழந்துவிடும். அப்போது அந்தக் காரகக்கிரகம் சுயபலத்துடன் இருந்தாலும் பகைக் கிரகங்களின் மத்தியில் இருப்பதால், நடுநிலைமையுடன் பலன் தரும். அதற்கு மாறாக, காரகக் கிரகம் சுயபலம் இல்லாமல், பகை நீச்சம் பெற்று இருந்து, இரு பகைக்கிரகங்களுக்கு மத்தியில் இருந்தால் கெடுதலான பலனையே தரும்.

விதி 5:
ஒரு காரகக் கிரகம் இருந்த வீட்டுக்கு இரண்டாம் வீட்டில் ஒரு பகைக்கிரகம் இருந்து, அது வக்கிரமடைந்து காரகக் கிரகத்தை நோக்கி நகர்ந்தால், பாதகமான பலனைத் தரும். ஒரு காரகக் கிரகம் இருந்த வீட்டிற்கு 12ஆம் வீட்டில் ஒரு பகைக் கிரகம் இருந்து, காரகக் கிரகம் வக்கிரமடைந்து இருந்தால் பாதகமான பலனையே தரும்.

விதி 6:
ஒரு காரகக் கிரகம் இருந்த வீட்டிற்கு 2ஆம் வீட்டில் ஒரு நட்புக் கிரகம் இருந்து, அது வக்கிரமடைந்து இருந்தால், அந்தக் காரக கிரகம் சுப பலனையே தரும். ஒரு காரகக் கிரகம் இருந்த வீட்டிற்கு 12ஆம் வீட்டில் ஒரு நட்புக் கிரகம் இருந்து, காரகக் கிரகம் வக்கிரமடைந்து இருந்தால், அந்தக் காரகக் கிரகம் சுப பலனையே தரும்.

விதி 7:
ஒரு காரகக் கிரகம் இருக்கும் வீட்டிற்கு 7ஆம் வீட்டில் உள்ள கிரகமே, அந்தக் காரகக் கிரகத்தை அதிகம் பாதிக்கும். அடுத்து 12ஆம் வீடு மற்றும் 2ஆம் வீட்டில் உள்ள கிரகங்கள் பாதிப்பை உண்டாக்கும். (இங்கு பாதிப்பு என்பது நன்மை அல்லது தீமையைக் குறிக்கும்.) ஒரு கிரகம் நின்ற வீட்டிற்கு 7ஆம் வீட்டில் உள்ள கிரகம் 100 சதவிகிதப் பலனையும், ஒரு கிரகம் நின்ற வீட்டிற்கு 1, 5, 9ஆம் வீட்டில் உள்ள கிரகம் 75 சதவிகித பலனையும், ஒரு கிரகம் நின்ற வீட்டிற்கு 3, 11ஆம் வீட்டில் உள்ள கிரகம் 50 சதவிகித பலனையும், ஒரு கிரகம் நின்ற வீட்டிற்கு 2, 12ஆம் வீட்டில் உள்ள கிரகம் 50 சதவிகித பலனையும் அது நட்புக் கிரகமானால் நல்ல பலனையும், பகைக்கிரகமானால் தீய பலனையும் தரச் செய்வார்கள்.

குறிப்பு:
பிறந்த ஜாதகத்தில் ஒரு கிரகம் இருக்கும் ராசிக்கு, கோச்சார கிரகம் வரும் சமயம், மேலே உள்ள விகிதாசாரப்படியே பலன் தரச் செய்வார்கள்.

விதி 8:
ஒரு கிரகம் ஸ்தான பலம் பெற்று இருந்தாலும், அந்தக் கிரகம் நின்ற வீட்டிற்கு 1,5,9,3,7,11,2,12 ஆகிய இடங்களில் வேறு கிரகங்கள் இல்லாவிட்டால், அந்தக் கிரகம் தனது முழுப் பலனைத் தர இயலாமல் குறைந்த பலனே தரும்.

விதி 9:
ஒரு கிரகம் நீச்சம் பெற்று இருந்தாலும், அதற்கு 2,12,7,5 ஆகிய இடங்களில் நட்புக் கிரகங்கள் இருக்குமேயானால், அந்த நீச்சம் பெற்ற கிரகம் ஓரளவேனும் நன்மையான பலனையே தரும்.

No comments:

Post a Comment