Sunday 5 August 2012

ஜோதிடம் : எந்த நாளில் என்ன செய்யலாம் என்ன

நல்ல நாள் நல்ல நேரம்

நல்ல நாள் நல்ல நேரம்

1. ஒருவர் இறந்தபின் சுபகாரியங்கள் தவிர்க்கப்படவேண்டிய காலம்:-
தந்தை இறந்துவிட்டால்,ஒரு வருடத்திற்கும்; தாய் இறந்துவிட்டால், ஆறு மாதத்திற்கும்; மனைவி இறந்துவிட்டால்,மூன்று மாதங்களுக்கும் ; சகோதரன் இறந்துவிட்டால்ஒன்றரை மாதங்களுக்கும் பங்காளி இறந்துவிட்டால் ஒரு மாத காலமும் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்க்கவேண்டும். அப்படிச் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்தம் ஏற்பட்டால் விக்ன வினாயகரைப் பூஜித்து சாந்தி செய்துவிட்டு சுபகாரியங்களைச் செய்யலாம்.

2. இறந்தபின் தோஷம் செய்யும் நட்சத்திரங்களும் பரிகாரங்களும்:-
ஒருவருடைய உயிர் ரோகிணி, மிருகசிரீஷம், மகம், சித்திரை ஆகிய நட்சத்திரங்களில் பிரிந்தால், ஒருமாதம் வீட்டை மூடிவிடவேண்டும்.
கிருத்திகை, புனர்பூசம், விசாகம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் உயிர் பிரிந்தால், ஆறு மாத காலங்கள்வரை அந்த வீடு மூடப்படவேண்டும்.
அவிட்டம், சதயம், பூரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில், உயிர் பிரிந்தால், நான்கு மாதங்கள் வரையில் மூடிவைக்கவேண்டும்.

3. விவகாரம் நிறைந்த செயல்களை எப்போது துவங்கலாம்?
சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி, செவ்வாய், சனி, அசுவினி, பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், விசாகம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம்போன்ற நட்சத்திரங்களில் ஆரம்பிக்கலாம். சுலப நன்மைகள் பெறலாம். திருச்செந்தூர் முருகனை வேண்டுதல் செய்தாலும் நற்பலனைப் பெறலாம்.

4. அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்?
உபநயனம், விவாகம், சத்திரம் கட்டுதல் போன்றவை செய்யலாம். ஜாதகத்தில் 8ல் சூரியன் இருந்தால், அந்த ஜாதகர் தனிமையாக உயிர் பிரியும் தறுவாயில் இருப்போரின் பக்கத்தில் இருந்தால், உயிர் பிரிய காலதாமதமாகும். இப்படிப்பட்டோர், 800 கிராம், கோதுமையை தம் கையால் ஓடும் நீரில் தூவ வேண்டும். கஷ்டங்கள் விடை கொடுக்கும்.

5. ஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்?
சாந்தி முகூர்த்தம், தேன் நிலவு, யாகம், உபநயனம் பட்டாபிஷேகம், பூமி வாங்குதல், பள்ளிக்குப் பாடம் படிக்கச் செல்லல் போன்றவை செய்யலாம்.

6. ஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யக்கூடாது ?
சீமந்தம், வளைகாப்பு, கர்ப்பதானம், தீட்சை, புது மருந்து உட்கொள்ள ஆரம்பித்தல், பயணம், திருமணம், போன்றவை பிறந்த நட்சத்திரத்தில் செய்யக்கூடாது. திருமணமான நாள் முதல் நான்கு நாட்களுக்குள் அமாவாசை, பிதுர் திதிகள் போன்றவை வந்தால், மணப்பெண்ணுக்குப் பல இடையூறுகள் வருமாம். குழந்தை பெற கால அவகாசம் தேவைப்படுமாம். பணவரவு போன்றவையும் தக்க நேரத்தில் கிடைக்கப்பெறாதாம். வாழ்நாளில் கடைசிவரை இதே கதைதான் தொடருமாம்.

7. அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்யக்கூடாது?
விதை விதைத்தல், மரத்தை வேறோடு வெட்டிச் சாய்த்தல், வீடு கட்டல் , கிணறு தோண்டுதல், தீட்சை எடுத்தல், புதிதாகக் கிராமம் அமைத்தல், குளம் குட்டை, தோட்டம் உருவாக்குதல் கூடாது. புது வாகனம் வாங்குவதும் கூடாது..

8. திருமணத்திற்குப் பிறகு என்ன செய்யக்கூடாது.?
ஒரு குடும்பத்தில் திருமணம் நடந்த ஆறு மாதங்களுக்குள், அந்தக் குடும்பத்தார், காது குத்துதல், உபநயனம் செய்வித்தல் , தீர்த்த யாத்திரை செல்லுதல், புதுவீடு புகுதல் போன்றவற்றை செய்யாதிருப்பது நலம்.

9. அசையா சொத்துக்கள் எப்போது வாங்கலாம்?
அஸ்வினி, சித்திரை, ஸ்வாதி, திருவோணம், சதயம் ,ரேவதி ஆகிய ஆறு நட்சத்திரங்களும், ஞாயிற்றுக்கிழமையும் நன்று. அன்று அலுவலகங்கள் கிடையாதென்றாலும் அட்வான்ஸ் தரலாம்.

10. அசையா சொத்துக்களை வாங்குவதற்கான ( பணி ஆரம்பிப்பது ) மாத பலன்கள்:_
சித்திரை–சு வாழ்வு, நிம்மதி, மகிழ்ச்சி, குதூகலம்,.
வைகாசி– நிம்மதி இருக்காது; கலகம் ஏற்படும்.
ஆனி– புத்திரர்களுக்கு ஆகாது; உயிருக்கு பங்கம்
ஆடி– செல்வ விரயம்; பசு, கன்றுகளுக்கு தீங்கு.
ஆவணி– உறவினர்கள் உதவியை எதிர்பார்க்கலாம்
புரட்டாசி– பிணி, மனஸ்தாபம், வெறுப்புகள்
ஐப்பசி– தலைவன் மூத்த குடி மகனுக்கு சுக வாழ்வு.
கார்த்திகை– திருமகள் அருள் பெறலாம்.
மார்கழி– தேக்கமான , மன பாரமான வாழ்வு.
தை– நெருப்பால் சேதம்; தீய பலன்கள் தொடரும்.
மாசி– படிப்படியான முன்னேற்றத்தை உணர இயலும்.
பங்குனி– வறுமை, கடன், ஆசைகள் நிறைவேறாமை.

11. கிணறு எந்தத் திசையில் அமைக்கலாம்?
கிழக்கு–அதிகமான் யோகம்
வடகிழக்கு–புதிய வாய்ப்புகள்
மேற்கு–வளம் அதிகமாகும்.
வடமேற்கு– வம்ச அபிவிருத்தி தடை
வடக்கு–குற்றமில்லை
தென்மேற்கு–பிணி’ பீடை.
தெற்கு–நீரில் கண்டம்.
தென்கிழக்கு–புகழ் நாசம்

12 . கிணறு தோண்ட, அமைக்க, கரைகட்ட, உகந்த காலம் எது?
ஐப்பசி மாதம் பத்து நாட்கள் உத்தமம். உத்திராடம், உத்திரட்டாதி, கேட்டை, ரேவதி, சித்திரை, ரோகிணி, திருவோணம், அஸ்தம், மிருகசிரீஷம், பூராடம், ஆகிய நட்சத்திரங்களும், பஞ்சமி, சப்தமி, திருதியை, ஏகாதசி, திரயோதசி, பிரதமை, ஆகிய திதிகளும், கும்பம், மீனம், மகரம், ரிஷபம், கடகம், ஆகிய லக்கினங்களும், சிறந்தவை. சித்திரை மாதம் நடு பத்து நாட்கள் உத்தமம்.

No comments:

Post a Comment