Sunday 5 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 76


கூறினேன் கலைமதியும் ஒன்றில் நிற்க
குருவெள்ளி தேர்ப்பாகன் ஆரேழெட்டில்
மாரினேன் மற்றோர்கள் மூன்றுபத்து
மைந்தனே லாபத்தி லமர நன்று
சீரினேன் செம்பொன்னும் கோடியுண்டு
சிவசிவா சீர்பெருகும் செல்வமுள்ளோன்
தேரினேன் காலாள்கள் மெத்தவுண்டு
திடமாகப் புலிப்பாணி தெரிவித்தேனே.


இன்னுமொன்று இலக்கினத்தில் பூர்ண கலையுள்ள சந்திரன் நிற்க, குரு, சுக்கிரன், புதன் ஆகியோர் முறையே 6,7,8, ஆகிய இடங்களில் நிற்க மற்றையோர் 3,10,11 ஆகிய இடங்களில் அமர்ந்திருப்பின் அச்சாதகன் நன்மையான பலன்களையே அடைகிறான். சிறந்த செம்பொன் கோடி கோடியாய் அவனுக்கு வாய்க்கும். சிவபரம் பொருளின் பேரருட் கருணையால் செல்வச்சீர் பெருகிப் காணும். மிகத் தனவந்தனான அவன் தேர்ப்படையுடன் காலாட்படையும் மெத்தவுடையன் என்று போகமா முனிவரின் அருளாணை பெற்ற புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment