இரவில் நிலவின் கதிர்கள்
என் மேல் விழும்போதெல்லாம் நினைவில்.......
உன் பஞ்சு விரல்கள்
என் நெஞ்சின் மீது வரைந்த கோடுகள்,
அந்நேரம்
நீ மோகத்தில் உளறிய வார்த்தைகள்,
முகத்தில் வந்து விழும் கூந்தலை
காதின் பின்னே தள்ளிவிடும்
உன் விரல்களின் லாவகம்!
நீயும் நானும் தவிர்ந்த
யாருமற்ற அந்த பரந்த புல்வெளி,
அந்த நிலவினை காட்டி நீ சொன்ன கதைகள்,
பள்ளி செல்லும் பாலகி போல்
உன் பேச்சின் குலையல்
உன் இதழ்கள்
என் பெயரை உச்சரிக்கும் போது
அந்த சுகம்
என் பெயர் கூட அழகாகவும்
இனிமையாகவும் இருந்தது
உன் இதழ்களின் அசைவுகள் தந்த சத்தத்தில்!
கடிகாரத்தின் ஓட்டத்தை நிறுத்தினாலும்
பூமியின் ஓட்டத்தை நிறுத்த முடியவில்லை
காற்று மேகத்தை மெதுவாக தள்ளிக்கொண்டு போக
உன் நினைவுகள்
என் காலத்தை தள்ளிக்கொண்டு போகின்றன
கார்மேகத்தில் இருந்து விழும் துளிகள் போல
விழி ஓரம் வழிந்த துளிகள்
நினைவுகளில் நீ இருப்பதால்......
No comments:
Post a Comment