Tuesday, 31 July 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 29 - விருச்சிக இலக்கின ஜாதகர்




தெரிவித்தேன் தேளினில்லம் சென்மந்தோன்ற
செழுமதியும் கோணத்தில் சேரநன்று
அறிவித்தேன் அகம்பொருளும் அடிமைசெம்பொன்
அப்பனே கிடைக்குமடா அவனிவாழ்வன்
அறிவித்தேன் கேந்திரமும் கூடாதப்பா
மறையவனே கொடும்பலனை குறித்துச்சொல்லும்
தெரிவித்தேன் போகருட கடாக்ஷத்தாலே
தேர்ந்து நீபுலிப்பாணி நூலைப்பாரே


தேள்சின்னம் கொண்டவிருச்சிக இலக்கினத்தில் பிறந்தோனுக்கு நன்மை செய்யத்தக்க சந்திர பகவான் திரிகோணத்தில் அமைவது நற்பலன்களை வாரி வழங்கும். இதனை உனக்கு நன்கு அறிவுறுத்துகிறேன். நல்ல வீடு அமைதலும் தனலாபம் பல்கிப் பெருகுதலும், அடிமைகள் வாய்த்தலும் சீரிய பொன்னாபரண சேர்க்கையும் அவனுக்குக் கிடைத்து இந்த பூமியில் வெகு புகழுடன் வாழ்வான். ஆனால் 1,4,7,10 ஆகிய கேந்திரஸ்தானத்தில் அவன் வீற்றிருப்பின் இதற்கு நேர்மாறான பலன்களை நீ கூறவும். இதையும் என் குருவான போகரது கடாட்சத்தாலேயே நான் குறித்துச் சொல்கிறேன். நன்றாக ஆய்ந்தறிந்து என் நூலின் சிறப்பினை உணர்ந்து கொள்க. [எ-று]

இப்பாடலில் விருச்சிக இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment