Tuesday, 31 July 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 26 - சிம்ம இலக்கின ஜாதகர்


பாரப்பா சிங்கத்தில் செனித்த பேர்க்கு
பவுமனுமே திரிகோண மேறிநிற்க
சீரப்பா செம்பொன்னும் செல்வம் பூமி
சிவ சிவா சிக்குமடா சென்மனுக்கு
வீரப்பா மற்றயிடந் தனிலேநிற்க
வெகுமோசம் வருகுமடா வினையால் துன்பம்
கூறப்பா போகருடா கடாக்ஷத்தாலே
கொற்றவனே புலிப்பாணி குறித்திட்டேனே.


சிம்மத்தில் பிறந்த அதாவது சிம்மலக்கின ஜாதகருக்கு செவ்வாய்க் கிரகமானது திரிகோண ஸ்தானத்தில் அமைந்தால் பெருஞ்சீர் வாய்க்கும்: செம்பொன் சேரும், செல்வமும் பூமியும் வாய்க்கும். இவையும் சிவபரம்பொருளின் பேரருளேயாகும். ஆனால் அத்திரிகோண ஸ்தானம் தவிர வேறிடத்தில் அமர்ந்திருப்பின், அவனால் மிகுந்த துன்பமும் செய்வினை முதலிய துன்பங்கள் ஏற்படுதலும் உண்டாகும். எனது சற்குருவாகிய போக மகாமுனிவரின் பேரருளால் கூறினேன். இக்குறிப்பினை அறிந்து ஜாதகனுக்குப் பலன் கூறுவாயாக. [எ-று]

இப்பாடலில் சிம்ம இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 25 - கடக இலக்கின ஜாதகர்


கூறப்பா கடகத்தில் செனித்த பேர்க்கு
கொடுமைபலன் தந்திடுவார் சுக்கிராச்சாரி
வாரப்பா வரம் பெற்ற இந்திரசித்து
வகைமடிப்பாய் மாண்டானே வெள்ளியாலே
சீரப்பா திரிகோணம் மறிந்துநிற்க
சிவ சிவா செம்பொன்னும் ரதங்களுண்டு
கூறப்பா மற்றவிடம் கூடாதப்பா
கொற்றவனே நிலைசமயம் கூற்ந்துபாரே


கடக லக்கினத்தில் ஜனித்த ஜாதகருக்கு, வெள்ளி என விளம்பும் சுக்கிராச்சாரியார்` மிகுதியான தீயபலன்களைத்தருவார். எவ்வாறெனில் யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்ற இராவணன் மகனாகிய இந்திரசித்தும் இக்சுக்ராசாரியினால் வகைதொகையாய் மாண்டதையும் அறிவாயன்றோ? ஆயினும் இச்சுக்கிரன் இவர்களுக்குத் திரிகோண ஸ்தானங்களில் நின்றால் சிவபரம்பொருளின் பேரருளினால் பெருந்தனம் வாய்க்கும். மற்றும் ரதம் முதலிய வாகன யோகமும் உண்டு. ஏனைய இடங்களில் இருப்பின் ஆகாது. இப்படிப்பட்ட ஜாதகரின் கிரக நிலை, திசாபுத்தி ஆகியனவற்றை நன்கு ஆராய்ந்தறிந்து பலன் கூறுவதே சிறப்புடையது. [எ-று]

இப்பாடலில் கடக இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 24 - ரிஷபம், மிதுன இலக்கின ஜாதகர்


சொல்லப்பா எருதோடு மிதுனத்தோர்க்கு

சுகமெத்த உண்டென்று சொல்லுவார்கள்.

அல்லப்பா அந்தணரும் கேந்திரமேற

அவர் செய்யுங்கொடுமையது மெத்தவுண்டு

தள்ளப்பா தரை பொருளும் தனமும்நாசம்

தார்வேந்தர் தோஷமுடன் அரிட்டம்செப்பு

குள்ளப்பா குருமதியுங் கோணமேற

கொற்றவனே குழவிக்கு நன்மைகூறே


அன்பனே! நான் கூறுவதை மிகவும் கவனமாகக் கேட்பாயாக! ரிஷபம், மிதுனம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுகம் மிகவும் என்றும் உண்டு எனக் கூறுவார். ஆயினும் அந்தணர் எனப்படும் குருபகவான் கேந்திரத்தில் [1,4,7,10 ஆகிய இடங்களில்] நின்றால் அவரால் ஏற்படும் கொடுமை மிகவும் அதிகம். எவ்வாறெனில், பூமி, பொருள், தனம் நாசமடையும். அது மட்டுமல்லாமல் அன்றலர்ந்த மலர்மாலை அணியும் அரசர்களின் துவேஷமும் ஏற்படும். நோய் முதலிய துன்பம்,உண்டென்று கூறுவாய் எனினும் குருபகவானும் சந்திரனும் 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானத்தில் இருப்பார் என்றால் ஜாதகனுக்கு நன்மை பெருகிப் பல்கும் எனவும் கூறுவாயாக. [எ-று]

இப்பாடலில் ரிஷபம், மிதுன இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.




புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 23 - மேஷ இலக்கின ஜாதகர்

கேளப்பா மேடத்தில் செனித்தபேர்க்கு


கெடுதிமெத்த செய்வனடா கதிரோன்பிள்ளை

ஆளப்பா அகம்பொருளும் நிலமும் ஈந்தால்


அவன் விதியுங்குறையுமடா அன்பாய்க்கேளு

கூறப்பா கோணத்தி லிருக்கநன்று


கொற்றவனே கேந்திரமும் கூடாதப்பா

தாளப்பா போகருட கடாக்ஷத்தாலே


தனவானாய்வாழ்ந்திருப்பன் திசையிற்சொல்லே


மேடத்தை இலக்கினமாகப் பெற்று ஜெனித்த ஜாதகருக்கு சூரிய பகவானின் பிள்ளையான சனிபகவான் மிகுந்த தொல்லை தருவான். அவ்வாறில்லாமல் அவன் வீடும், பொருளும், நிலபுலன்களும் தருவானேயானால் அச்சாதகன் ஆயுள்குறையும் என்பதையும் உணர்வாயாக. மேலும் அச்சனிபகவான் 1,5,9, ஆகிய கோணத்தில் இருந்தால் மிகுந்த நன்மை விளையும். அதற்கு மாறாகக் கேந்திரத்தில் அ·தாவது 1,4,7,10 ஆகிய இடங்களில் இருந்தால் கெடுபலனே விளையுமாதலால் அவ்வாறிருத்தல் ஆகாதப்பா, போக மகா முனிவரின் கருணையாலே மிகவும் லட்சுமிகடாட்சத்துடன் தனலாபம் பெற்று வாழ்வான். இதனை அவனது திசாபுத்திகளில் சொல்க. [எ-று]

இப்பாடலில் மேஷ இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 22


சோதியென்ற குருபதியும் வெள்ளிநீலன்
சொலிக்கின்ற கதிர்மதிசேய் கணக்கன்பாம்பு
ஆதியென்ற ராசிபனி ரெண்டுக்குள்ளே
அடக்கிவைத்தார் கோள்களையும் ஆயன்தானும்
வாதியென் ஞானியும் பலவாறாக
வையகத்தில் பூட்டிவைத்தார் வரிசையாக
சாதகமாய் சென்மனுக்கு சுட்டிக்காட்டி
சமர்த்தாகப் பலன் சொல்லும் குறியைக்கேளே.


சோதிவடிவான குருவும், சுக்கிரன்,நீலனும் சனியும் ஒளி வீசுகின்ற சூரியனும்,சந்திரனும், செவ்வாய்க் கிரகமும், இன்னும் புதபகவானும் பாம்பிரண்டும் ஆகிய இந்த நவகோள்களையும் ராசிமண்டலமான பன்னிரு ராசிகளுக்குள்ளே அடக்கி வைத்தார் பேரொளிப்பிழம்பான இறைவன்.இது குறித்து வாதிட்டுக் கணித்த ஞானியர் பூவுலகில் வரிசைப்படுத்தி கூறிவைத்துள்ளார்கள். எனவே [ஒருவன் தன் ஜென்மஜாதகம் குறித்துக் கேட்க வருவானேல்] அவனுக்குச் சாதகத்தைக் கூறும் சமர்த்தான முறையினைக் கூறுகிறேன். எனது குறிப்பினை நன்கு உணர்ந்து கூறும் வகையைக் கேட்பாய்.