Tuesday, 31 July 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 21 - பன்னிரண்டாம் பாவம்


பத்தின்மேல் இரண்டாகும் பெயரைக்கேளு
பரதேச வுத்தியோகம் பணத்தின்சோர்வு
சத்தான பலியோக சயனம் தியாகம்
தர்மமொடு கர்மபலன் சவுக்கியமாக
வித்தான பலபுண்ணிய விவாதமோடு
விளைந்திடுமே தொழிலான பலதானங்கள்
கத்தாதே போகருட கருணையாலே
கரைந்திட்டேன் புலிப்பாணி கருத்தைத்தானே.


பன்னிரண்டாம் பாவகத்தின் பலன்களாவன: பிறதேச செளக்கியம், உத்தியோகம், பணத்தால் ஏற்படும் சோர்வு பலயோகங்கள் வாய்த்தலும் சயன சுகம், தியாகம், தர்மம் ஆகியவற்றோடு கர்மபலனும் மற்றும் சுகமடைதலும், பல புண்ணிய சம்பந்தமும் விவாதத்தில் வல்லமையும் ஏற்படக் கூடிய தொழில்களும் பற்பல தானங்களும் வாய்த்தலை உணர்ந்து கூறினால் நன்மை பயக்கும் எனக் குருவருள் கொண்டு புலிப்பாணி கூறினேன். [எ-று]

இப்பாடலில் பன்னிரண்டாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 20 - பதினோராம் பாவம்


பத்தின்மேலொன்றாகும் பலனைநன்றாய்
பகருகிறேன் பயிர் வளப்பம் பரிநல்வேழம்
வித்தைமிகு லாபங்கல் லறிவுசேர்க்கை
மிகுமனதிற்றூக்கமொடு சிவிகைசேரும்
உத்தரியஞ் செறிந்தபசும் பொன்னையொத்த
உயர்மனைவி யோகமது முதலாயுள்ள
மெத்தவே நீயறிந்து விளம்புவாயேல்
வேதமா யுன்வார்த்தை விரும்புவாரே


பதினோராம் இடத்தின் பலன்களாவன: விவசாய அபிவிருத்தி ஏற்படுதலும், பரியொடு யானை முதலியன வாய்த்தலும் (வாகனங்கள் அமைதலும்) நல்ல வித்தைகள் வாய்த்தலும், மிகுந்த இலாபங்கள் வாய்த்தலும், நல்ல அறிவுடையோர் தொடர்பு வாய்த்தலும், மனத்தில் ஊக்கமும் சிவிகை சேர்தலும், உத்தரியம் மகரகண்டிகை வாய்த்தலும், நன்மனைவி யோகமும் இது போன்ற நன்மையானவை யெல்லாம் நன்கு ஆராய்ந்து குறித்துக்கூற உன்றன் வார்த்தைகளை வேதமாய், எண்ணிக் கொண்டாடுவார்கள். [எ-று]

இப்பாடலில் பதினோராம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 19 - பத்தாம் பாவம்


பத்தாகு மிடத்தினது பலனைக்கேளு
பட்டணங்கள் தாபித்தல் பலங்களோடு
வித்தான பலபுண்ணியந் தேசாபிமானம்
வீறான அரசனொடு கருமம் ஞானம்
சித்தமதி லிரக்கமிகு தெய்வபக்தி
சேருகின் றசவுரியமுங் கொப்பமூணும்
நத்துகின்ற பூசையோடு மனைவிசேர்க்கை
நலமாக விப்பலனை நவிலுவாயே.


பத்தாம் பாவகத்தின் பலன்களாவன: பட்டினங்கள் ஸ்தாபித்தலும், நல்லூழோடு பல புண்ணியம் செய்தலும் தேசாபிமானமும், அரசரோடு இணக்கமுறுதலும் நற்கருமம் ஞானம் முதலிய வாய்த்தலும், மனத்தில் இரக்க உணவு இழையோடுதலும் மிகுந்த தெய்வ பக்தியும் சிறந்த செளகரியமும் கருப்பம் வாய்த்தலும் நல்ல உணவு வாய்த்தலும் வெகுவான பூசைகளைச் செய்வதோடு துணைவி சேர்க்கையும் நலமாகக் குறித்தறிந்து கூறுவாய். [எ-று]

இப்பாடலில் பத்தாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 18 - ஒன்பதாம் பாவம்



ஒன்பதாம்பல னாகுமுபதேச
மின்பகூப மிகும் பணிகூபமும்
வன்வதான பரியும் வளப்பமும்
தன்மதானந் தனங்களுஞ்சாற்றுவர்


ஒன்பதாம் பாவகத்தால் ஏற்படும் பலன்களாவன: ஞானோபதேசம் பெறுதலும் இன்பம் வாய்த்தலும் நீர் வளப்பெருக்கும் ஆடையாபரணச் சேர்க்கையும் இன்னும், வாகனம், பரி முதலானவையும், மிகுந்த தனலாபம் தன்னலம் கருதாத தானதர்மங்கள் வாய்த்தலும் வெகு தனம் வாய்த்தலும் நேரும். [எ-று]

இப்பாடலில் ஒன்பதாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 17 - எட்டாம் பாவம்


அஷ்டமயோக மரும்பிணி சண்டையும்
நஷ்டங்கிலேசம் பகைநன்மரணமும்
துஷ்டடம்பமும் துன்றுமலையேறி
கஷ்டப்பட்டு கலங்கி விழுதலே


அஷ்டம பாவகத்தால் அரிய நோய்களைப் பற்றியும், விளையும் சண்டைகளையும், நஷ்டங்களையும் மனம்பேதலித்தலையும், பகைமையையும், மரணசம்பவத்தையும், துஷ்டத்தனத்தையும், வீண்டம்பத்தையும், மலைமீதுஏறிமிகுந்த துன்பமுற்றுக்கலங்கி விழுதலையும் அறியலாம்.

இப்பாடலில் எட்டாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.