Friday, 3 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 40 - சூரியன் 3,6,10,11 ல் தரும் யோகம்


பாரப்பா மூன்றாறு பத்துஒன்று
பகருகின்ற பன்னொன்றில் வெய்யோன்நிற்கில்
சீரப்பா சீலனுட மனையில் தானும்
சிவசிவா தெய்வங்கள் காத்திருக்கும்
வாரப்பா வாகனமும் ஞானம்புத்தி
வளமான புத்திரர்கள் அரசர்நேசம்
கூறப்பா புரிவனடா சத்துருங்கன்
கொற்றவனே மூர்க்கனென்று கூறுவீரே.


இலக்கினத்திற்கு 3,6,10,11` ஆகிய இடங்களில் பதுமன் என்றும் இனன் என்றும் பரிதி என்றும் கூறப்படும் சூரியன் தேறி நின்றால் அச்சாதகனுடைய மனையில் சிவ பரம்பொருளின் பெருங்கருணையால் தெய்வங்கள் காத்து நிற்கும், அச்செல்வனுக்கு நல்ல வாகன யோகமும், நல்ஞானமும், விசேடமானா புத்தியும், வளமை தரும் புதல்வர்களும் அரசர்களுடைய ஆதரவும் அன்பும் ஏற்படும் என்றும், பகைவரை அழித்தொழிக்கும் வீரனாக அமைந்து மூர்க்கனாக விளங்குவான் என்றும் கூறுவாயாக.

இப்பாடலில் சூரியன் இலக்கினத்திலிருந்து 3,6,10,11 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 39 - பதினொன்றாம் இடத்தில் மாந்தி


தானென் பதினொன்றில் குளிகன் நிற்கத்
தரணிதனில் பேர் விளங்குந் தனமுமுள்ளோன்
யேனென்ற அயன்விதியும் அறிந்துசெப்பு
யென்மகனே வசியனடா ஜாலக்காரன்
வீணென்ற விரயனடா ரசவாதத்தால்
விளம்புகிறேன் வீடுமனை கொதுவை வைப்பான்
கோனென்ற போகருட கடாக்ஷத்தாலே
கொற்றவனே வியத்தில் நின்ற பலனைக்கூறே


இலக்கினத்திற்கு பதினொன்றாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகன் பூமியில் நல்ல புகழ் உடையவனேயாவான். சிறந்த தனலாபம் உடையவனே. இவனது ஆயுள் பலத்தை அறிந்து கிரக நிலைமை தெரிந்து நீ சொல்லுக. இவன் வசியன் [தேவதை வசியன்] ஜாலக்காரன். இனி பன்னிரண்டாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்தவன் வீண்விரயம் செய்பவன். ரசவாதம் தேர்ந்தவன். குடும்ப நாசம் செய்பவன். ன் குருவான போகருடைய அருளாணையாலே நான் கூறுவதை ஆராய்ந்தறிந்து நன்கு உணர்த்துக.

இப்பாடலில் பதினொன்றாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 38 - ஒன்பதாம் இடத்தில் மாந்தி




மூட்டுவாய் குளிகனுமோ பாக்கியத்தில்
முகவசியன் அழும்பனடா பிதுர் துரோகி
கூட்டுவாய் குவலயத்தில் தனமுள்ளோன்
குற்றமில்லை கருமத்தின் குறியைக் கேளு
நீட்டுவாய் நீணிலத்தில் கருமிதுரோகன்
நிலையறிந்து நீயறிவாய் அய்யம்வாங்கி
தீட்டுவாய் தின்பனடா விரலேஉச்சம்
சிறப்பாக செப்புவாய் திண்ணந்தானே.


இலக்கினத்திற்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் குளிகன் நிற்கப் பிறந்த ஜாதகன் முகவசியமுடையவன் என்றாலும் அழும்பனாய் பிதுர் துரோகியாய் விளங்குவான். எனினும் இப்பூமியின் கண் நிறை தனம் பெற்று மகிழ்வோனே யாவான். அதனால் குற்றமில்லை எனக் கூறுக. இனி பத்தாம் இடமான கர்ம ஸ்தானத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகன் கருமியாகவும், துரோகம் செய்பவனாகவும் இருப்பான். கிரக நிலையை நன்கு ஆய்ந்தறிந்து தீட்டு நிகழ்ந்த வீட்டில் உஞ்சை விருத்தி ஜீவனம் செய்பவனாக இருப்பன். கிரக பலம் அறிந்து சிறப்பாகவும் திண்ணமாகவும் பலன் கூறுக.

இப்பாடலில் ஒன்பதாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 37 - ஏழாம் இடத்தில் மாந்தி




குறித்திட்டேன் குளிகனுமோ ரேழில்நிற்கக்
கொற்றவனே குடும் பிக்குக் கண்டம்சொல்லு
சிரித்திட்டேன் சென்மனுக்கு விவாதத்தாலே
சிவசிவா செம்பொன்னும் நஷ்டமாகும்.
அரித்திட்டேன் அட்டமத்தில் குளிகன்நிற்க
அப்பனே அழும்பனடா ஜலத்தால் கண்டம்
முரித்திட்டேன் போகருட கடாக்ஷத்தாலே
முகரோக முண்டென்று மூட்டுவாயே.


மேலும் ஒரு கருத்தைக் குறித்துச் சொல்வேன் கேட்பாயாக! இலக்கினத்திற்கு ஏழாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகனுக்குக் கண்டம் நேரும். இவனுக்கு விவாதத்தாலே வெகுதன விரயம் சிவனருளாலே சித்திக்கும். அதே போல் எட்டாமிடத்தில் குளிகன் நிற்கப் பிறந்த ஜாதகன் மகா அழும்பன் என்பதோடு நீரால் கண்டம் ஏற்படும் என்பதையும், அறிவித்துக் கொள்ளலாம். என் குருவான போகருடைய கருணையாலே புலிப்பாணியாகிய நான் கூறும் இன்னொன்றையும் நீ அறிந்து கொள்க. இச்சாதகன் முகரோகன் என்பதையும் நீ உணர்த்துவாயாக.

இப்பாடலில் ஏழாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 36 - ஐந்தாம் இடத்தில் மாந்தி


கூறினேன் கிரிஅய்ந்தில் முடவன்பிள்ளை
குணமாக வாழ்வனடா சேய்க்குதோஷம்
தேரினேன் வீரனடா சத்துருபங்கன்
திடமாக வாழ்வனடா தனமுள்ளோன்
ஆரினேன் அயன் விதியுமெத்தவுண்டு
அப்பனே அடுத்தோரைக் காக்கும் வீரன்
கூறினேன் குளியனுமே ஆறில் நிற்க.
கொற்றவனே இப்பலனைக் கூறினேனே.


இலக்கனத்திற்கு ஐந்தாம் இடத்தில் சனியின் குமாரனான குளிகனானவன் நிற்கப்பிறந்தவன் குணவானாக வாழ்வான் எனினும் புத்திர தோடம் உடையவனேயாவான். மிகச் சிறந்த வீரனாக இவன் விளங்குவதோடு பகையை ஒழித்தழிக்கும் பாங்கறிந்தவன்; திடமாக வாழ்பவன். வெகுதன தான்ய சம்பத்துடைவன், மேலும் இக்குளிகன் ஆறாமிடத்தில் நிற்கப் பிறந்தவன் நிறைந்த ஆயுள் உள்ளோன். பரோபகாரி, இவனும் வீரனே என்பதனை நன்கு கிரக பலம் அறிந்து கூறுவாயாக.

இப்பாடலில் ஐந்தாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.