குரு திசையின் பலன்கள் என்ன?
குரு பகவான் 64 கலைகளையும் அறிந்தவர். வேதங்கள், உபநிடதங்களில் தேர்ச்சி
பெற்றவர் என அவரது பெருமையை ஜோதிட நூல்கள் கூறுகின்றன. உலகில் உள்ள அனைவருக்கும்
நல்ல குரு (ஆசான்) அமைவது இல்லை. ஒரு சிலர் தனக்கு முதன் முதலில் கல்வி கற்பித்த
ஆசிரியரை வாழ்நாள் முழுவதும் புகழ்ந்து பேசுவார்கள். சிலர் கல்லூரியில் கற்பித்த
பேராசிரியரை மறக்க மாட்டார்கள்.
ஒரு மாணவனுக்கு படிக்கும் போது குரு தசை (16 ஆண்டுகள் நடக்கும்) வந்தால்
அவருக்கு நல்ல ஆசிரியர் கிடைப்பார். பிற மாணவர்களுக்கு கிடைக்காத தனி கவனம், அன்பு,
ஆதரவு சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் இருந்து குரு தசை நடக்கும் மாணவனுக்கு
கிடைக்கும்.
அதேபோல் குரு தசை நடக்கும் மாணவன் தேர்வில் எழுதும் பதிலும் அருமையாக
இருக்கும். சொந்த நடையில் பதில் தருவார். கேள்விக்கு 100% சரியான பதிலாகவும் அது
இருக்கும். கல்லூரிப் படிப்பின் போது குரு தசை நடந்தால் அந்த மாணவர் ஆராய்ச்சிப்
படிப்பை முடித்து பேராசிரியராகும் வாய்ப்பைப் பெறுவார்.
பொதுவாக 25 வயது முதல் 41 வயது வரையிலான காலத்தில் குரு தசை வந்தால்,
‘சற்புத்திர யோகம்’ கிடைக்கும். உலகில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு குழந்தை
பிறக்கிறது. ஆனால் அனைத்து குழந்தைகளுக்கும் பெற்றோர் மீது முழுமையான அன்பு
பிறப்பதில்லை. தந்தை மீதே சொத்துக்காக வழக்கு தொடரும் மகன்களும் இருக்கிறார்கள்.
அம்மாவுக்கு இறுதிக் காலத்தில் உணவளிப்பதில் கணக்குப் பார்க்கும் மகன்களும்
உள்ளனர்.
ஆனால் சற்புத்திர யோகம் உள்ளவருக்கு பிறக்கும் குழந்தைகள், பெற்றோர் மீது
மிகுந்த பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதற்கு காரணம் குரு திசை
(தாய்/தந்தைக்கு) நடக்கும் காலத்தில் அந்தக் குழந்தைகள் பிறந்திருப்பர்.
இதேபோல் 41 வயதிற்குப் பின்னர் ஒருவருக்கு குரு திசை வந்தால் அவருக்கு
ஆன்மிகத் தேடல் ஏற்படும். சமுதாயத்தின் நலனுக்காக பாடுபடுவார். பழமையான நூல்களை
மீண்டும் பதிப்பிக்க உதவிபுரிவார். மேற்கூறிய அனைத்து பலன்களும் கிடைக்க
சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
மேஷம், கடகம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய லக்னம்/ராசிகளில்
பிறந்தவர்களுக்கு குரு பகவான் மிகப்பெரிய ராஜயோகத்தை வழங்குவார். ரிஷபத்திற்கு
நல்லதும், கெட்டதுமாக பலன் வழங்குவார். மிதுனம், கன்னி ஆகிய 2 ராசிகளுக்கும் குரு
பகவான் முக்கிய கிரகமாக இருந்தாலும், பாதகாதிபதியாகவும் வருவதால் நல்லதையும்,
கெட்டதையும் கலந்து வழங்குபவராகத் திகழ்கிறார். துலாம் ராசிக்கும் 50% நற்பலன், 50%
கெடு பலனே குருவால் கிடைக்கும். மகரம், கும்ப ராசிகளுக்கு சமமான பலன் (பெரிய
பாதிப்பும் கிடையாது, லாபமும் கிடையாது) கிடைக்கும்.
பூசம் 1ஆம் பாதத்தில் குரு உச்சமடைகிறார். கடக ராசியில் 30 பாகைகள் உள்ளன.
அதில் 2.40 முதல் 5 பாகைக்குள் குரு உச்சமாகிறார். எனவே, அந்த குரு உச்சம் பெற்ற
நேரத்தில் பிறந்தவர்கள் மிகப்பெரிய ராஜயோகத்தை பெறுவார்கள். அதற்குப் பிந்தைய
காலத்தில் குருவின் உச்ச பலன் குறைந்து விடும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு உச்சமடைந்திருந்தால் அதற்கான பலன் முழுவதுமாகக்
கிடைக்காது. சம்பந்தப்பட்டவர் வேண்டுமானால் குரு உச்சமாக இருக்கிறது எனப்
பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அவர் அமைச்சருக்கு மிக நெருக்கமானவராக இருந்தாலும்
அதனால் ஒரு பலனும் கிடைக்காது.
சிலருக்கு குருவும், சந்திரனும் பரிவர்த்தனை பெற்றிருப்பார்கள் (சந்திரன்
மீனத்தில், குரு கடகத்தில்). இதுபோன்ற அமைப்பைப் பெற்றவர்களுக்கு குரு அல்லது
சந்திர தசை நடக்கும் போது மிகப்பெரிய ராஜயோகம் கிடைக்கும் என ஜாதக அலங்கார நூல்
கூறுகிறது. இவர்கள் நாடாளும் யோகத்தை அடைவார்கள் என்றும் அதில்
கூறப்பட்டுள்ளது.
நேர்மை, நியாயம், நீதிக்கு உரியவர் குருபகவான். ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான்
நல்ல நிலையில் இருந்து அவருக்கு குரு தசை நடந்தால் மிகப்பெரிய ராஜயோகத்தை அடையலாம்.
ஆனால் பிறந்த உடனேயே குரு தசை வந்தால் சிறிய தொந்தரவுகள் ஏற்படும்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய 3 நட்சத்திரக்காரர்களுக்கு பிறந்த உடனேயே
குரு தசை ஆரம்பமாகி விடும். அதுபோன்ற குழந்தைகளுக்கு சளித் தொந்தரவு, மஞ்சள் காமாலை
ஏற்பட வாய்ப்புண்டு.
ஒருவருக்கு 2வது தசையாக குரு திசை வந்தால் சிறப்பாக இருக்கும். இதேபோல் 3, 4,
5வது தசையாக வரும் போதும் நற்பலன்கள் அதிகம் கிடைக்கும். ஆனால் 6வது தசையாக குரு
திசை வந்தால் சில பாதிப்புகளை உருவாக்கும். பொருள் இழப்பு, அரசாங்கத்தால் சொத்து
பறிபோதல், வழக்குகளில் தோல்வியை ஏற்படக் கூடும்.
ஒருவருக்கு திருமணம் செய்வதற்கு முன்பாக அவருக்கு குரு பலன் இருக்கிறதா? என்று
தான் ஜோதிடர்களும், பெற்றோரும் பார்க்கின்றனர். ஏனென்றால் குருதான் அனைத்தையும்
சுமுகமாக தீர்க்கக் கூடியவர். குருவின் ஆதிக்கம் இருந்தால் அனைத்து தரப்பிலும்
வெற்றி கிடைக்கும். திருமணம் மூலம் நல்ல பலனை அவர்கள் பெறுவதற்காகவே குரு பலன்
இருக்கும் போது திருமணம் முடிக்கிறார்கள்.
குரு திசை நடக்கும் போது குரு பலன் இல்லாவிட்டாலும் திருமணம்
செய்யலாமா?
பதில்: சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்து,
யோகாகாதிபதி தசையாக, குரு தசை/புக்தி நடந்தால் குரு பலன் இல்லாமலேயே திருமணம், வீடு
கட்டுதல் உள்ளிட்ட சுபகாரியங்களை அவர் மேற்கொள்ளலாம்.
ஐயா, குரு திசை&சனி புத்தி நடக்கும் வேளையில் கணவன், மனைவி பிரிந்து வாழ நேரிடுமா
ReplyDelete