Wednesday, 8 August 2012

கேட்டை, மூலத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?


கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையுமே அணு அணுவாகத் திட்டமிடுவார்கள். புத்திக்குரிய கிரகமான புதனை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரம் இது. இவர்களின் ராசியாதிபதி, செயல்படுத்தும் கிரகமான செவ்வாய் என்பதால், தந்திரத்தோடு செயலாற்றுவார்கள். எந்த ஆசிரியர், எப்படி எழுதினால் மதிப்பெண் போடுவார் என்பதை பள்ளி வயதிலேயே தெரிந்து வைத்திருப்பார்கள். கௌரவமான மதிப்பெண்களை பெற்றுத் தப்பித்துக் கொள்வார்கள்.

கேட்டையின் முதல் பாதத்தை தனுசு குரு ஆட்சி செய்கிறார். ராசியாதி பதியாக செவ்வாயும், நட்சத்திர அதிபதியாக புதனும், முதல் பாதத்தை ஆட்சி செய்பவராக குருவும் வருகிறார்கள். இந்த மூவரும்தான் வாழ்வினை நடத்திச் செல்வார்கள். 14 வயது வரை புதன் தசை நடக்கும். புதன் நரம்புகளுக்கு உரியவனாக இருப்பதால், இந்த தசையில் அவ்வப்போது நரம்புக் கோளாறு வந்து நீங்கும். கணக்கு எப்போதும் இவர்களுக்கு ஆமணக்குதான். கிட்டத்தட்ட எட்டாம் வகுப்பு வரை கணக்குப் பாடத்தில் திணறுவார்கள். சொந்த ஜாதகத்தில் புதன் நன்றாக இருந்தால், கணக்கில் புலியாக வலம் வருவார்கள். இவர்களில் சிலர் தாய்மாமன் வளர்ப்பில் சில காலம் இருப்பார்கள். 15 வயதிலிருந்து 21 வரை கேது தசை நடைபெறும். முக்கிய காலகட்டமான பிளஸ் 2 வரையும், அதற்குப் பிறகு கல்லூரி முடிய இந்த தசை நடப்பதால் கஷ்டப்பட்டுத்தான் படிக்க வேண்டி வரும். ஆசைப்பட்டதை படிக்க முடியாமல் கிடைத்ததைப் படித்து கேது தசை முடியும்போது மிகச் சிறந்த நிறுவனத்தில் வேலைக்கு அமர்ந்து விடுவார்கள். 22 வயதிலிருந்து 41 வரை சுக்கிர தசை நடைபெறும்போது பட்டியலிட்டு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஐ.டி. துறை இவர்களுக்கு மிகுந்த சிறப்பு தரும். மேலும் சட்டம், பொலிட்டிகல் சயின்ஸ் போன்றவையும் எளிதாக வரும். மொழித்திறன் அதிகமாக இருப்பதால் பகுதிநேரமாக பிரெஞ்சு, இத்தாலி என பயின்றால் சமூக அங்கீகாரம் கிடைக்கும். மருத்துவத்தில் இ.என்.டி., மனநல மருத்துவர், வயிறு, நரம்பு தொடர்பான துறைகளில் கவனம் செலுத்தினால் நிபுணராகலாம்.

இரண்டாம் பாதத்தின் அதிபதி மகரச் சனி. புதனும், சனியும் சேர்ந்து அமர்க்களமாக ஆள்வார்கள். பத்து வயது வரை புதன் தசை நடைபெறும். ஒவ்வாமை, வீசிங் போன்ற தொந்தரவுகள் இருக்கும். 11 வயதிலிருந்து 17 வரை நடைபெறும் கேது தசையில், எதிலுயும் ஒரு தடை இருக்கும். பள்ளி மாற்றி படிக்க வைப்பார்கள். இதனால் கொஞ்சம் படிப்பில் மந்தம் ஏற்படும். சனிக்கு கேது கொஞ்சம் பகையாக இருப்பதால், கவனச் சிதறல் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில்தான் பலருக்கு தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். பள்ளியிறுதி வரை ஏனோதானோ என்றிருந்தாலும், கல்லூரி சென்றதும் கலக்க ஆரம்பிப்பார்கள். 18 வயதிலிருந்து 37 வரை சுக்கிர தசை நடைபெறும்போது வாழ்க்கை ரம்மியமாக இருக்கும். கேட்டரிங் டெக்னாலஜி, விஸ்காம், ஆட்டோமொபைல் துறைகளில் சாதிக்கலாம். இவர்கள் பி.காம்., பி.எஸ்சி. பிசிக்ஸ், தத்துவம் என்று படிக்கும்போது அதில் தனித்துவமிக்க நபராக விளங்குவார்கள். பள்ளியிறுதி படிக்கும்போதே பைலட் ஆவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். சீக்கிரமே வரும் சுக்கிர தசையில், இவர்கள் சுமாராக படித்த படிப்பே மிகுந்த உதவியைத் தரும். சிலர் டி.எஃப்.டி. படித்து திரைத் துறையில் நுழைவார்கள்.


மூன்றாம் பாதத்தை கும்பச் சனி ஆள்கிறார். இவர்கள் கொஞ்சம் சாத்வீகமாகத்தான் இருப்பார்கள். ஏறக் குறைய 7 வயது வரை புதன் தசை நடைபெறும். 8 வயதிலிருந்து 14 வரை கேது தசை நடைபெறும்போது யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள். பத்தாம் வகுப்பில் கொஞ்சம் பொறுப்புணர்வு வந்து படிக்கத் தொடங்குவார்கள். அடுத்ததாக 15 வயதிலிருந்து 34 வரை சுக்கிர தசை வரும். தோற்றப் பொலிவு கூடும். பத்தாம் வகுப்பில் சுமாராகப் படித்தாலும் அடுத்தடுத்த வகுப்புகளில் மிக நன்றாகப் படிப்பார்கள். கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு கிட்டத்தட்ட மத்திம வயதிற்குள்ளேயே சுக்கிர தசை வருவதால் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். நிறைய பணம், நண்பர்கள் சேர்க்கை கிடைக்கும். ஆர்க்கிடெக்ட், கன்ஸ்ட்ரக்ஷன், இன்டீரியர் டெக்கரேஷன் என்று துறைகளைப் பிடித்து பரபரவென மேலேறலாம். இவர்கள் மருத்துவத்தில் புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபடலாம். விஸ்காம், விலங்கியல், ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங் என்றும் படிக்கலாம்.

நான்காம் பாதத்தை மீன குருவோடு, புதனும், செவ்வாயும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்கள். மூன்று வயது வரை நடக்கும் புதன் தசையில் பாலாரிஷ்டம் என்று சொல்லப்படும் ஏதாவது நோய்கள் வந்து நீங்கியபடி இருக்கும். 4 வயதிலிருந்து 10 வரை நடைபெறும் கேது தசையில், இவர்களை விளையாட்டுப் பக்கமும் கொஞ்சம் விட்டால் பின்னால் தேசிய அளவில் சாதனை புரிவார்கள். சிறிய வயதிலேயே, அதாவது 11 வயதிலிருந்து சுக்கிர தசை தொடங்கி 30 வரை இருப்பதால் கலைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். இந்த சுக்கிர தசை பெற்றோருக்கு அதிக பணவரவைத் தரும். 25, 27, 29 வயதில் பணத்தை தண்ணீராக செலவழிப்பார்கள். இவர்கள் கல்லூரியில் எந்த துறையை தேர்ந்தெடுக்கிறார்களோ அதில் பிஎச்.டி. செய்து பேராசிரியராகும் வாய்ப்புகள் உண்டு. பி.இ. சீட் கிடைத்தால் ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் என்று சேரலாம். மருத்துவத் துறையில் முக சீரமைப்பு, வயிறு, உளவியல் சம்பந்தமான துறையில் ஜெயிப்பார்கள். இந்தப் பாதத்தில் பிறந்த பலர் ஆசிரியப் பணியில் அமர்வார்கள்.

கேட்டை நட்சத்திரக்காரர்கள் காஞ்சிபுரம் அருகேயுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புட்குழி எனும் தலத்தில் அருள்பாலிக்கும் விஜயராகவரை வணங்குவது நலம். இவர்களுக்கு வாக்கின் அதிபதியாகவும், கல்விக்குரியவராகவும் கோதண்ட குரு வருவதால், வெற்றி பெற்ற கோலத்தில் அருளும் விஜயராகவரை தரிசிப்பது நன்மை தரும். இத்தலம் காஞ்சிபுரம் வேலூர் பாதையில் அமைந்துள்ளது.


தனுசு ராசியில் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் கேதுவின் ஆதிக்கம் இருக்கும். பள்ளிப் பருவத்திலேயே சூட்சுமமான விஷயங்களை அறிந்துகொள்ளத் துடிப்பார்கள். மதிப்பெண்களுக்காக படிக்காமல் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதற்காகவே நிறைய படிப்பார்கள். முதல் பாதத்தின் அதிபதியாக செவ்வாயும், ராசியாதிபதியாக குருவும், நட்சத்திர தலைவராக கேதுவும் இருக்கிறார்கள். இரு ராஜ கிரகங்கள் ஒன்றாக இருப்பதால், வகுப்பறையில் புத்திசாலி மாணவனோடு மட்டுமே பழகுவார்கள். 6 வயது வரை கேது தசை நடைபெறும். கொஞ்சம் உடம்பு படுத்தி எடுக்கும். அதன்பின் 26 வயது வரை சுக்கிர தசை நடைபெறும். கலைகளுக்கு நாயகன் சுக்கிரன் என்பதால் ஆடல், பாடல், இசை என்று ஏதேனும் ஒன்றில் தனித்திறமை பெறுவார்கள். எஞ்சினியரிங்கில் எலெக்ட்ரிகல், கெமிக்கல் எடுத்தால் நல்லது. மண் சம்பந்தப்பட்ட படிப்பும், அறிவியலில் விலங்கியல் துறையும் இவர்களுக்கு ஏற்றது. பி.காம். படிப்பதை விட பி.பி.ஏ. படிப்பது நல்லது. எம்.பி.ஏ.வில் பைனான்ஸ், ஹெச்.ஆர். என்று போவது நல்லது. மருத்துவத்தில் டென்டல் சர்ஜன், ஆர்த்தோ, மனநலம் போன்ற துறைகளைத் தேர்ந்தெடுக்கும்போது கிரகங்களின் அலைவரிசை எளிதாக வெற்றி பெறச் செய்யும்.

இரண்டாம் பாதத்தின் அதிபதி சுக்கிரன். பொதுவாகவே கேது சொந்த ஜாதகத்தில் நன்றாக இருந்தால், பிறக்கும்போது நடைபெறும் கேது தசையில் எந்த பிரச்னையும் இருக்காது. 4 வயது வரை ஜாதகத்தில் கேதுவின் நிலைப்படி உடல்நிலை அமையும். ஆனால் பொதுவாக ஒவ்வாமை வந்து நீங்கும். 5 வயதிலிருந்து 24 வரை சுக்கிர தசை நடைபெறும். முதல் பாதத்திற்கு சொல்லும்படியான பெரிய நன்மைகள் செய்யாத சுக்கிரன், இங்கே வாரி வழங்குவார். சிறுவயதிலே நல்ல பள்ளி, வீட்டுச் சூழல் என்று ரம்மியமாக வாழ்க்கை நகரும். பொதுவாகவே சுக்கிர தசை எல்லோரையும் கவரும் கலைகளைத்தான் அதிகம் கொடுக்கும். ஆனாலும், கல்லூரி வரை மரியாதையான மதிப்பெண்களை எடுத்து விடுவார்கள். தாவரவியல், பயோடெக்னாலஜி போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். பொறியியல் என்றால் ஆர்க்கிடெக்ட், சிவில் நன்று. பி.காம். படிக்கலாம். எகனாமிக்ஸ் சரி வராது. ஏரோநாட்டிகல் கிடைத்தால் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். மருத்துவத்தில் பிளாஸ்டிக் சர்ஜனாக வரும் வாய்ப்பு அதிகம்.

மூன்றாம் பாதத்தை புதன் ஆள்வதால் சூட்சும புத்தி அதிகமிருக்கும். 2 வருடங்கள் கேது தசையில் உடல் உபாதைகள் படுத்தும். ஆனால், பயப்பட வேண்டாம். 3 வயதிலிருந்து 22 வரை சுக்கிர தசை நடைபெறும்போது புத்தியில் பிரகாசம் கூடும். வாழ்க்கை பற்றிய தேடல் 15 வயதிலேயே தொடங்கும். பொதுவாகவே மூல நட்சத்திரக்காரர்களுக்கு கல்லூரி வரை படிப்பில் எந்த பிரச்னையும் இருக்காது. ராசிக்குரிய அதிபதியாக குரு வருவதால் சட்டம், பொலிட்டிகல் சயின்ஸ், இயற்பியல், தத்துவம், சமயம் போன்ற துறைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. வானவியல் தொடர்பான பட்டமும் வெற்றி தரும். வரலாறு இவர்களுக்கு இனிக்கும். இந்த பாதத்தில் பிறந்த பலர் ஆங்கில இலக்கியம் படிப்பார்கள். புள்ளியியல், ஏ.சி.எஸ். போன்ற படிப்புகளில் ஈடுபாடு காட்டினால் நிச்சயம் வெற்றி உறுதி. பொறியியலில் சிவில், எலெக்ட்ரானிக்ஸ் நல்லது. மருத்துவத்தில் மூளை, சிறுநீரகம் சார்ந்த துறைகள் எனில் நிபுணராகும் வாய்ப்பு உண்டு.

நான்காம் பாதத்திற்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். பிறக்கும்போதே கேது தசை சில மாதங்கள் இருக்கலாம். அதிகபட்சமாக இரண்டு வருடங்கள் வரை நடக்கலாம். பிறகு 20 வயது வரை சுக்கிர தசை நடைபெறும்போது செல்வ வளத்தோடு சுகபோகமாக வாழ்வார்கள். கவிதைகளை எழுதிக் குவித்து இலக்கிய ஈடுபாடு காட்டுவார்கள். அறிவியலில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். இவர்களில் நிறைய பேர் சயின்டிஸ்ட் ஆவார்கள். முக்கியமாக அஸ்ட்ரானமி போன்ற படிப்பெனில் சாதனையாளராகத்தான் வலம் வருவார்கள். 21 வயதிலிருந்து 26 வரையிலும் நடக்கும் சூரிய தசை வாழ்க்கையை சட்டென்று மேலேற்றும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பொறியியலில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், ஆர்க்கிடெக்ட், ஆட்டோமொபைல் படிக்கலாம். விஸ்காம் படித்தால் எளிதாக ஜெயிக்கலாம். சி.ஏ. நல்ல எதிர்காலம் தரும். மருத்துவத்துறை எனில் இ.என்.டி, மயக்கவியல் போன்ற துறைகளில் வல்லவர் ஆகலாம்.

மூல நட்சத்திரக்காரர்களின் வாக்குக்கு அதாவது கல்விக்கு அதிபதியாக மகரச் சனி வருவதால் பள்ளிகொண்ட கோலத்தில் அருளும் ஈசனை வணங்குவது நன்மை பயக்கும். சாதாரணமாக பெருமாளைத்தான் பள்ளிகொண்ட கோலத்தில் தரிசித்திருப்போம். ஆனால், ஆலகால விஷத்தை உண்டு சற்றே மயங்கிக் கிடக்கும் ஈசனை சுருட்டப்பள்ளி கோயிலில் தரிசிக்கலாம். சென்னையை அடுத்து, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டைக்கு அருகே உள்ளது சுருட்டப்பள்ளி.

No comments:

Post a Comment