Wednesday, 8 August 2012

உத்திரட்டாதி, ரேவதியில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?


உத்திரட்டாதியில் பிறந்தவர்கள், வாழ்க்கையின் இருவேறு துருவங்களையும் பால்யத்திலேயே பார்த்து விடுவதால் பக்குவம் பெற்றவர்களாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தை குருவும் சனியும் சேர்ந்து ஆட்சி செய்கின்றன. வாக்கு வன்மை உள்ளவர்களாக இவர்கள் விளங்குவார்கள். முதல் பாதத்தில் பிறந்தவர்களை சூரியன் ஆட்சி செய்கிறார். கறாராகப் பேசும் இவர்களை, நீக்கு போக்கு தெரியாதவர்கள் என சிறிய வயதிலேயே சொல்வார்கள். பிறந்தவுடனே நடைபெறும் சனி தசை சவாலாகவே இருக்கும். அதன்பிறகும் 17 வயது வரை சவாலாகத்தான் இருக்கும். வேலை மாற்றத்தால் தந்தையை அலைய வைக்கும். இதனால் பள்ளி மாறிப் படிக்க நேரும். படிப்பில் பெற்றோருக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டு, பத்தாம் வகுப்பில் சுமாரான மதிப்பெண் பெறுவார்கள். அறிவியல், ஆங்கிலம் இரண்டிலும் எப்போதும் நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள்.

18 வயதிலிருந்து வாழ்க்கை அப்படியே மாறும். 34 வயது வரை புதன் தசை நடைபெறும். சனி தசையின் கஷ்டங்கள் இதில் இருக்காது. யாரும் அவ்வளவு எளிதில் விரும்பாத துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்து ஜெயிப்பார்கள். ஆங்கில இலக்கியம், பொலிடிகல் சயின்ஸ், வரலாறு, சட்டம் போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுத்தால் பேராசிரியராகும் வாய்ப்புண்டு. எம்.பி.ஏவில் ஹெச்.ஆர், ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங், மருத்துவத்தில் கண், நரம்பு ஆகிய துறைகள் ஏற்றம் தரும். இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களை புதன் ஆள்கிறார். கல்வி இவர்களுக்கு இளமையிலேயே வருமானம் தரும். பள்ளிக் காலத்திலேயே டியூஷன் எடுத்து சம்பாதிப்பவரும் உண்டு. 13 வயது வரை சனி தசை இருக்கும்.

சிறிய வயதிலிருந்தே உறவினர்கள், குடும்பத்தினரிடமிருந்து வித்தியாசப்படுவார்கள். விஷய ஞானம் உள்ளவர்கள்தான் தன்னுடன் பழக முடியும் என்பதாக மற்றவர்களை நினைக்க வைப்பார்கள். ஆசிரியர் போர்டில் கணக்கை எழுதும்போதே விடையை நோட்டில் போட்டு விடுவார்கள். 14 வயதிலிருந்து 30 வரை புதன் தசை நடக்கும்போது படிப்பில் கவனம் தேவை. சிலருக்கு போதைப் பழக்கம், கூடா நட்பு என்று வரும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முதல் பாதம் அளவுக்குக் கஷ்டங்கள் இருக்காது. ஏனெனில் சனியும், புதனும் இணைந்து செயல்படும்போது ஒருவிதமான அனுசரிப்பு இருக்கும். இவர்களில் பலர் ஆடிட்டிங், அக்கவுன்ட்ஸ் துறைகளில் பிரகாசமடைகிறார்கள். பி.இ. கெமிக்கல், புள்ளியியல், எக்கனாமிக்ஸ் படிப்பிலும் நிபுணத்துவம் பெறலாம். மரைன் எஞ்சினியரிங், கேட்டரிங் டெக்னாலஜி படிப்பிற்கும் முயற்சிக்கலாம்.

மூன்றாம் பாதத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். கிட்டத்தட்ட 8 வயது வரை சனி தசை நடைபெறும். 3 வயது முதல் 5 வரை வீசிங், ஈஸ்னோபீலியா போன்ற தொந்தரவுகள் வந்து நீங்கும். விரும்பும் கோர்ஸிலேயே இவர்களைப் படிக்க வைப்பது நல்லது. 9 வயதிலிருந்து 25 வரை புதன் தசை நன்றாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகமிருந்தாலும், அலட்சியமும் கூடவே இருக்கும். சுக்கிரன் பாதத்திற்கு அதிபதியாக வருவதால் பெரிய இழப்புகளோ ஏமாற்றங்களோ இருக்காது. சம்பாதிக்க ஒன்று, ஆர்வத்திற்கென்று ஒன்று எனப் பிரித்து வைத்துப் படிப்பார்கள். இதை பள்ளியிறுதியிலேயே தெளிவாக முடிவெடுத்து விடுவார்கள். பி.இ. படித்து விட்டு அப்படியே கலைத்துறைக்கு தாவுவார்கள். ‘என்னால் அதுவும் முடியும், இதுவும் முடியும்’ என்பார்கள்.
ஃபேஷன் டெக்னாலஜி, கேட்டரிங் டெக்னாலஜி, விஸ்காம் போன்ற படிப்புகள் இவர்களுக்கு ஏற்றவை. தாவரவியல், விலங்கியல், ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங், ஆட்டோமொபைல் எஞ்சினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் என்று படித்தால் நல்லது. நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் வருவார்கள். சிறுவயதிலிருந்தே யாரையும் சார்ந்திருப்பது பிடிக்காது. படிப்பைவிட விளையாட்டிற்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். பதக்கங்களும் வெல்வார்கள். 4 வயது வரை சனி தசை நடைபெறும். 5 வயதிலிருந்து 21 வரை புதன் தசை நடைபெறுகிறபோது வம்பு தும்பெல்லாம் தேடிவரும். இதனால் படிப்பில் கவனம் செல்லாது. நட்பு வட்டத்தை கவனிக்க வேண்டும். கொஞ்சம் எமோஷனலாக இருப்பார்கள். கல்லூரியில் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு வளர்வார்கள்.

22 வயதிலிருந்து 28 வரை நடைபெறும் கேது தசையின்போதுதான் கொஞ்சம் விழிப்படைவார்கள். பள்ளியில் சாதாரணமாகப் படித்தாலும், கல்லூரி என்று வரும்போது கெமிஸ்ட்ரி, புவியியல், மண்ணியல், விலங்கியல் போன்ற படிப்புகள் சாதகமாக இருக்கும். எஞ்சினியரிங்கில் எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், ஐ.டி. என்று படித்தால் வெற்றி பெறுவார்கள். இவர்களில் பலர் ராணுவம் அல்லது காவல்துறை வேலைக்குச் செல்வார்கள். பைலட்டாக விரும்பினால், அதற்கான முயற்சியும் செய்யலாம். குருவும் சனியும் சேர்ந்திருப்பதால் நல்லது கெட்டதுகளில் உழன்று உழன்று புடமிட்ட தங்கமாக வாழ்க்கை மாறியிருக்கும். குருவோடு சனி சேர்ந்திருப்பதால் தேடித் திரிந்து ஆராய்ந்து அறிவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

மேலும், கல்வியைத் தரும் வாக்கிற்கு உரியவராக செவ்வாய் வருகிறார். எனவே முருகனை வழிபடுவது சிறப்பான பலன் தரும். அதிலும் திருவிடைக்கழி முருகனை வழிபட்டால் நிச்சயம் கல்விச் செல்வத்தை நிறைந்து அளிப்பார். சிதம்பரம் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் திருக்கடையூர் தலத்திலிருந்து தென்மேற்கில் 6 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் தலம். மயிலாடுதுறையிலிருந்து சங்கரன்பந்தல் வழியில் 4 கி.மீ தொலைவில் உள்ளது. இருபத்தேழு நட்சத்திரங்களிலேயே விளையாட்டுத்தனம் மிகுந்த நட்சத்திரம் ரேவதி. திட்டமிடும் கிரகமான புதனே ரேவதியை ஆட்சி செய்கிறது. முதல் பாதத்தை தனுசு குரு ஆட்சி செய்கிறார். ராசியாதிபதியாக மீன குருவும், நட்சத்திர அதிபதியாக புதனும் வருகிறார்கள். ஏறக்குறைய 14 வயது வரை புதன் தசை நடக்கும்.

புதன் நரம்புகளுக்கு உரியவனாக இருப்பதால், இந்த தசை நடக்கும்போது குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறு வந்து நீங்கும். பள்ளிப் பருவத்திலேயே கவிதை, கட்டுரை என்று எழுதுவார்கள். குழந்தையின் மழலைத்தனம் 14 வயது வரை இருக்கும். 15 வயதிலிருந்து 21 வரை கேது தசை நடைபெறும். இந்த வயதில் ரெசிடென்ஷியல் பள்ளியில் சேர்க்கலாம். படிக்கவில்லையெனில் கொஞ்சம் விட்டுப் பிடிக்க வேண்டும். நான்கு பேருக்கு முன் அவமானப்படுத்தக் கூடாது. ஐ.டி. துறை இவர்களுக்கு சிறப்பைத் தரும். சட்டம், பொலிடிகல் சயின்ஸ் போன்றவையும் எளிதாக வரும். மொழித்திறன் அதிகமாக இருப்பதால் வேலைக்கு சென்று கொண்டே பிரெஞ்சு, இத்தாலி மற்றும் ஆங்கில இலக்கியம் போன்றவற்றை பயின்றால் சமூக அங்கீகாரம் கிடைக்கும். மருத்துவத்தில் இ.என்.டி., மனநல மருத்துவர், வயிறு, நரம்பு சம்பந்தப்பட்ட துறைகளில் கவனம் செலுத்தினால் நிபுணராகலாம்.

இரண்டாம் பாதத்தின் அதிபதியாக மகரச் சனி வருகிறார். பள்ளிப் படிப்பை முடிப்பதில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். பத்து வயது வரை புதன் தசை நடைபெறும். 11 வயதிலிருந்து 17 வரை நடைபெறும் கேது தசையில் எதிலேயும் ஒரு தடங்கல் இருக்கும். படிப்பதில் நாட்டமில்லாது கவனச் சிதறல்கள் அதிகமாக இருக்கும். சொந்த ஜாதகத்தில் சனி நன்றாக இருந்தால் பெரியளவில் கல்வித் தடைகள் வராது. 18 வயதிலிருந்து 37 வரை சுக்கிர தசை நடைபெறும்போது தெளிவான வாழ்க்கை தொடரும். கேட்டரிங் டெக்னாலஜி, விஸ்காம், ஆட்டோமொபைல் துறையில் சாதிப்பார்கள். பி.காம்., பி.எஸ்சி. பிசிக்ஸ், தத்துவம் படித்தாலும் ஜெயிக்கலாம். ஏனெனில், அடுத்து 18 வயதிலிருந்து 37 வரை சுக்கிர தசை நடைபெறும்போது இவர்கள் சுமாராக படித்த படிப்பே மிகுந்த உதவியைத் தரும்.

மூன்றாம் பாதத்தை கும்பச் சனி ஆள்கிறார். ஆரவாரமில்லாது வேலைகளை முடிப்பார்கள். 7 வயது வரை புதன் தசை நடைபெறும். குழந்தைகளுக்குரிய துறுதுறுப்புடன் கூடிய முதிர்ச்சியும் கலந்திருக்கும். 8 வயதிலிருந்து 14 வரை கேது தசை நடைபெறும்போது படிப்பெல்லாம் சுமார்தான். அடுத்ததாக 15 வயதிலிருந்து 34 வரை சுக்கிர தசை வரும். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள். முதல் இரண்டு பாதங்களை விட சுக்கிர தசை கூடுதலாகவே நல்ல பலன்களைத் தரும். கல்லூரியில் என்ன படிக்க வேண்டும் என்பதை பத்தாம் வகுப்பிலேயே முடிவு செய்துகொண்டு படிப்பார்கள்.

எந்தத் துறையில் பணம் கொட்டுகிறதோ அதைத்தான் படிப்பார்கள். இவர்களில் பலர் வெளிநாடு சென்று படிப்பார்கள். ஆர்க்கிடெக்ட், கன்ஸ்ட்ரக்ஷன், இன்டீரியர் டெகரேஷன் என்று துறைகளைப் பிடித்து பரபரவென மேலேறலாம். மருத்துவத்தில் புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபடலாம். விஸ்காம், விலங்கியல், ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங் என்று படிக்கலாம். இவர்கள் அந்தந்த வருடத்தில் எந்த புதிய படிப்பு வந்தாலும் அதில் சேரத்தான் முயற்சிப்பார்கள். நான்காம் பாதத்தை மீன குருவோடு, நட்சத்திர அதிபதியான புதனும், ராசியாதிபதியான மீன குருவும் சேர்ந்து ஆட்சி செய்யும். மூன்று வயது வரை நடக்கும் புதன் தசையின்போது பாலாரிஷ்டம் என்று சொல்லப்படும் ஏதாவது நோய்கள் வந்து நீங்கியபடி இருக்கும்.

4 வயதிலிருந்து 10 வரை நடைபெறும் கேது தசையில் படிப்பை விடுத்து விளையாட்டில் ஆர்வம் காட்டுவார்கள். படிப்பிலும் பள்ளியின் முக்கிய மாணவராக இருப்பார்கள். மிகச் சிறிய வயதிலேயே -அதாவது 11 வயதிலிருந்து - சுக்கிர தசை தொடங்கி 30 வயது வரை இருப்பதால், பெற்றோரின் செல்வ நிலை உயரும். கல்லூரியில் எந்தத் துறையை தேர்ந்தெடுக்கிறார்களோ அதில் பிஎச்.டி. வரை முடித்து விட்டு அங்கேயே பேராசிரியராகும் வாய்ப்பு உண்டு. மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு இவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். ஆட்டோமொபைல் எஞ்சினியரிங், மெக்கானிக்கல் என்றும் சேரலாம். மருத்துவத்தில் முகச் சீரமைப்பு, வயிறு, உளவியல் சம்பந்தமான துறையில் எளிதாக வெற்றி பெறலாம். ஆனால், இந்தப் பாதத்தில் பிறந்த பெரும்பாலானோர் ஆசிரியர் பணியில் அமர்வார்கள். ரேவதி நட்சத்திரத்தின் அதிபதியாக புதன் வருகிறார். அதனால் பெருமாள் வழிபாடு மிகவும் நல்லது.

மேலும், ரேவதி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களையும் தனுசு குரு, மகரச் சனி, கும்பச் சனி, மீன குரு என்று ஆட்சி செய்கிறார்கள். குருவும், சனியும் சேர்ந்த ஆதிக்கமாக அமைகிறது. எனவே, விஸ்வரூபக் கோலத்தில் அருளும் பெருமாளை வழிபட்டால் மிகவும் நல்லது. அப்படிப்பட்ட தலமே திருக்கோவிலூர் ஆகும். இங்கு எம்பெருமான் உலகளந்த பெருமாளாக காட்சியளிக்கிறார். சிறிய வயதிலிருந்து - அதாவது வாமன வயதிலிருந்தே - இந்த ஆலயத்திற்கு சென்று வந்தால், அவனருளால் விஸ்வரூபம் எடுக்கலாம். இத்தலம் விழுப்புரத்திலிருந்து 38 கி.மீ. தூரத்தில் உள்ளது. திருவண்ணாமலையிலிருந்தும் செல்லலாம்.

No comments:

Post a Comment