Wednesday, 8 August 2012

பூசம், ஆயில்யத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?


அனுபவங்களை அதிகமாகக் கொடுத்து வாழ்க்கையை செப்பனிடும் சனி பகவானே பூசம் நட்சத்திரத்தை ஆள்கிறார். சனியை அதிபதியாகக் கொண்ட சக்தி வாய்ந்த நட்சத்திரம் இது. இது கடக ராசிக்குள் வரும் நட்சத்திரம். சந்திரனை அதிபதியாகக் கொண்ட ராசி இது. இப்படி சந்திரனும் சனியும் சேர்ந்து ஆள்வதால், சந்திரனுடைய கலா தத்துவமும், கற்பனையும், சனியின் கடின உழைப்பும், தைரியமும் ஒன்றாக இவர்களிடத்தில் வெளிப்படும்.

பூச நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்த குழந்தைகள் எப்படி என்று பார்ப்போம். ராசியாதிபதி சந்திரன், நட்சத்திரத்தை ஆளும் சனி, முதல் பாதத்தின் அதிபதி சூரியன் என மூவரும் சேர்ந்து இவர்களை ஆட்சி செய்கின்றனர். இவ்வாறு மூன்று முக்கிய கிரகங்கள் ஆள்வதால், சிறிய வயது முதலே வித்தியாசமாக இருப்பார்கள். ‘‘சின்னப் பையனா இருந்தாலும், அவன் சொல்றதுலயும் விஷயம் இருக்கு’’ என ஆச்சரியப்பட வைப்பார்கள். முதல் பாதத்தை சூரியன் ஆட்சி செய்வதால், சிறிய வயதிலேயே சிலருக்கு கண்ணாடி போட வேண்டியிருக்கும். கொஞ்சம் முன்கோபத்தோடு இருப்பார்கள். தன்னை விட வயதில் மூத்தவர்களோடு நட்பு கொள்வார்கள். ஏறக்குறைய 17 வயது வரை சனி தசை நடைபெறுகிறது.

கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், சனி தசை முடிகிற காலமாதலால் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். கல்லூரி வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும். யாருமே எளிதில் விரும்பாத துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்து வெற்றி பெறுவார்கள். ஆங்கில இலக்கியம், பொலிட்டிகல் சயின்ஸ், வரலாறு போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுத்தால் பேராசிரியராகும் வாய்ப்புண்டு. ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங், மருத்துவத்தில் கண், கால், நரம்பு அறுவை சிகிச்சை நிபுணராக வாய்ப்புண்டு. எம்.பி.ஏ. படிக்கும்போது ஹெச்.ஆர். துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தல் நல்லது.

இரண்டாம் பாதத்தை கன்னி புதன், சந்திரன், சனி என மூவரும் முறையே ஆட்சி செய்கின்றனர். பாதத்தின் அதிபதியாக புதன் வருவதால், சூட்சுமமான புத்தியோடு திகழ்வார்கள். விளையாட்டுகளில் மாநில அளவில் வெற்றி பெறும் வாய்ப்பும் உண்டு. இவர்கள் பேசினால், அதில் யோசிக்க பத்து விஷயங்கள் இருக்கும். கணிதத்தில் புலியாகப் பாய்வார்கள். கிட்டத்தட்ட 13 வயது வரை சனி தசை இருக்கும். வைட்டமின் சி குறைபாடு, சரும நோய் போன்றவை வந்து நீங்கும். ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பள்ளியில் படித்து, பின்னர் வேறு பள்ளிக்கு மாறும் சூழ்நிலை ஏற்படும். 14 வயதிலிருந்து 30 வயது வரை புதன் தசை நடைபெறுவதால், பாதத்தின் அதிபதியான புதனின் ஆசியோடு திட்டமிட்டு வெற்றி பெறுவார்கள். இவர்களில் பலரும் சி.ஏ., ஏ.சி.எஸ் எனப் படித்து பிரகாசமடைகிறார்கள். பி.இ. கெமிக்கல், புள்ளியியல் படிப்பில் நிபுணத்துவம் என்று சிறப்படைவார்கள். மெரைன் எஞ்சினியரிங் படிப்பிற்கும் முயற்சிக்கலாம்.

மூன்றாம் பாதத்தை சனி, சந்திரன், சுக்கிரன் என்று மூவரும் ஆள்கிறார்கள். மூன்றுமே நட்புக்கிரகங்கள். ஏறக்குறைய 8 வயது வரை சனி தசை இருக்கும். அதில் இரண்டு வருடங்கள் கொஞ்சம் படுத்தினாலே அதிகம். 9 வயதிலிருந்து 24 வரை புதன் தசை வரும்போது படிப்பைத் தாண்டி, கலை சம்பந்தமான போட்டிகள், விளையாட்டு என்று ஈடுபடுவார்கள். போட்டிகளிலும் பங்கேற்பார்கள். படிப்பிலும் குறை சொல்ல முடியாது. இவர்களில் பலரும் தங்களுக்குப் பிடித்தமான ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு, பிறகு தொழில் சார்ந்த கல்வியை கற்பார்கள். ஃபேஷன் டெக்னாலஜி, கேட்டரிங், விஸ்காம் போன்ற படிப்புகள் இவர்களுக்கு ஏற்றவை. அதில் பெரிதாக சாதிக்கலாம். ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங், ஆட்டோமொபைல் எஞ்சினியரிங், எலக்ட்ரானிக்ஸ் என்று படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு.

நான்காம் பாதத்தை செவ்வாய் ஆள்வதால், இளம் வயதிலேயே பேச்சு சாதுர்யம் இருக்கும். 4 வயது வரை சனி தசை இருக்கும். செவ்வாய் இங்கு பாதத்தின் அதிபதியாக வருவதால் ஏதேனும் சிறு அறுவை சிகிச்சை நடக்கலாம். 5 வயதிலிருந்தே புதன் தசை தொடங்கி 20 வரை நடைபெறும். இந்த நட்சத்திரத்தில் இந்த நான்காம் பாதத்தைச் சேர்ந்தவர்கள்தான் கொஞ்சம் சோதனைக்கு ஆளாவார்கள். கல்லூரிவரை ஏனோதானோ என்று படித்து முடிப்பார்கள். ஆனால், வாழ்க்கையில் ஜெயிப்பார்கள். பள்ளியில் படிக்கும்போது சுளீரென்ற கோபத்தால் நிறைய பேரை பகைத்துக் கொள்ள நேரிடும். 21 வயதிலிருந்து 27 வரை கேது தசை நடைபெறும்போதும் படிப்பு பற்றிய விஷயங்கள் சுமாராகத்தான் இருக்கும். பள்ளியில் சுமாராகப் படித்தாலும், கல்லூரி என்று வரும்போது கெமிஸ்ட்ரி, புவியியல், மண்ணியல், விலங்கியல் போன்ற படிப்புகளை எடுத்தால் நல்லது. பி.இ. எலெக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி. என்று படித்தால் வெற்றி பெறுவார்கள். பலர் ராணுவம் அல்லது காவல்துறை வேலைக்குச் செல்வார்கள்.

பூசம் நட்சத்திரம் கடக ராசிக்குள் இருக்கிறது. சந்திரன் இங்கு உச்சமாகிறார். மேலும், மனதிற்கு உரியவனும் சந்திரன்தான். ஆகவே எப்படிப் பார்த்தாலும் சந்திரன் பூஜித்து சக்தி பெற்ற கோயில்கள்தான் இவர்களுக்கு அதீத நன்மையைத் தரும். அப்படிப்பட்ட ஒரு தலம்தான் திருமாந்துறை ஆகும். தேய்ந்த சந்திரனை ஈசனின் அருளால் முழுமையாக ஒளிரச் செய்த தலம் இது. அதனாலேயே அட்சயநாதர் என்று இத்தல நாயகருக்குப் பெயர். சந்திரனுக்கு வந்த க்ஷயம் எனும் குஷ்டநோயைத் தீர்த்தவரும் இந்த அட்சயநாதரே. இவரை வணங்கி கல்வியில் சிறக்கலாம். கும்பகோணத்தை அடுத்த சூரியனார்கோவிலுக்கு 2 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தத் தலம்.

கடக ராசிக்குள் உடல் வலிமையும் மன உறுதியும் அதிகம் கொண்டவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். ஆயில்ய நட்சத்திரத்தை வித்யாகாரகனான புதன் ஆள்கிறார். சிறிய வயதிலிருந்தே இவர்கள் தனித்துத் தெரிய வேண்டுமென விரும்புவார்கள். அதனாலேயே பல சோதனைகளையும் எதிர்கொள்வார்கள். எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ளத் துடிப்பார்கள். வயதுக்கு மீறிய சிந்தனைகள் இருக்கும். இதனால் பல புறக்கணிப்புகளையும் எதிர்கொள்வார்கள். மதிப்பெண்ணுக்காக படிக்காமல், உலக விஷயங்களைத் தெரிந்து கொள்ள படிப்பார்கள். ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பலருக்கு வெளிநாடுகளில் சென்று படிக்கும் யோகம் கிட்டும்.

ஆயில்யம் முதல் பாதத்தை தனுசு குரு ஆள்கிறார். ஏறக்குறைய 15 வயது வரை புதன் தசை நடைபெறும். கடக ராசிக்கு புதன் பகைதான். அதனால் கொஞ்சம் வீசிங் தொல்லை வந்து நீங்கும். படிப்பில் கவனம் குறைந்து விளையாட ஓடுவார்கள். முதல் பாதத்தில் பிறந்த குழந்தைகளில் சிலர், வெகு நாட்கள் பேசாமல் இருந்து பேசுவார்கள்; அல்லது கிட்டத்தட்ட 12 வயது வரை கூச்ச சுபாவத்தோடு இருப்பார்கள். அடுத்து 16 வயதிலிருந்து 22 வரை கேது தசை நடக்கும். இது புதன் தசையைவிட நன்றாக இருக்கும். பத்தாம் வகுப்பு வரை சுமாராகப் படித்தவர்கள், பிளஸ் 2வில் நினைத்த மதிப்பெண்கள் பெறுவார்கள். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஐ.டி. துறை இவர்களுக்கு மிகுந்த சிறப்பைத் தரும். மேலும் சட்டம், பொலிட்டிகல் சயின்ஸ் போன்றவையும் எளிதாக வரும். மொழித்திறன் அதிகமாக இருப்பதால், வேலைக்குச் சென்று கொண்டே பிரெஞ்ச், ஜெர்மன் என்று பயின்றால் சிறப்பு கூடும்.

இரண்டாம் பாதத்தின் அதிபதியாக மகரச் சனி வருகிறார். புதனும், சந்திரனும் சேர்ந்து மகரச் சனியின் தோளில் கைபோட்டு அமர்க்களமாக செல்வார்கள். 12 வயது வரை படிப்பில் சுமாராகத்தான் இருப்பார்கள். அதற்குப் பிறகு 13 வயதிலிருந்து 19 வரை நடைபெறும் கேது தசையிலும் தடங்கல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் பிளஸ் 2 முடித்து திடீரென்று கல்லூரியில் சம்பந்தமேயில்லாத படிப்பிற்கு இடம் கிடைத்து ஜெயிப்பார்கள். கேட்டரிங் டெக்னாலஜி, விஸ்காம், ஆட்டோமொபைல் துறைகளில் சாதிப்பார்கள். இவர்கள் பி.காம்., பி.எஸ்சி. பிசிக்ஸ், தத்துவம் என்று படிக்கும்போது அதில் தனித்துவமிக்க நபராக விளங்குவார்கள். பைலட் ஆவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். 20 வயதிலிருந்து 39 வரை சுக்கிர தசை நடைபெறும்போது, இவர்கள் சுமாராக படித்த படிப்பே அதிகளவில் உதவிகரமாக இருக்கும். அதனால் அதற்கு முன்பே கஷ்டப்பட்டு படித்து விட்டால் நல்ல எதிர்காலம் கிடைக்கும். இவர்களில் பலர் டி.எஃப்.டி. படித்து திரைப்படத் துறையினுள் நுழைவார்கள்.

மூன்றாம் பாதத்தை கும்பச் சனி, புதனோடும் சந்திரனோடும் சேர்ந்து ஆட்சி செலுத்துகிறார். கொஞ்சம் சாத்வீகமான அமைப்பு இது. 7 வயது வரை புதன் தசை நடைபெறும். குழந்தைகளுக்குரிய துறுதுறுப்பும் முதிர்ச்சியும் சேர்ந்தே இருக்கும். திடீரென்று மூன்றாம் வகுப்பிலிருந்தே வேறு பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டியிருக்கும். 8 வயதிலிருந்து 14 வயது வரை கேது தசை நடைபெறும். ஒன்பதாம் வகுப்பு வரை சுமாராகப் படிப்பார்கள். 15 வயதிலிருந்து 34 வரை சுக்கிர தசை வரும். கல்லூரிக்கே காரில் செல்லும் வாய்ப்புகள் அதிகமுண்டு. திடீரென்று எல்லா சப்ஜெக்ட்டும் புரியத் தொடங்கும். அசாதாரணமாக படித்து விடுவார்கள். ஆர்க்கிடெக்ட், கன்ஸ்ட்ரக்ஷன், இன்டீரியர் டெக்கரேஷன் என்று துறைகளைப் பிடித்து பரபரவென முன்னேறலாம். கிட்டத்தட்ட இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கான எல்லா பலன்களும் இவர்களுக்கு பொருந்தும்.
நான்காம் பாதத்தை மீன குருவோடு, புதனும், சந்திரனும் ஆட்சி செலுத்துகிறார்கள். மூன்று வயது வரை ஏதாவது நோய்கள் வந்து நீங்கியபடி இருக்கும். 4 வயதிலிருந்து 10 வரை நடைபெறும் கேது தசையில், உள்ளரங்க விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவார்கள். 11 வயதிலிருந்து சுக்கிர தசை தொடங்கி 30 வயது வரை இருப்பதால் வீட்டில் என்ன சொல்கிறார்களோ, அதன்படி படிப்பார்கள். சமூகத்தில் எந்த துறையில், எந்த படிப்பிற்கு மதிப்பு இருக்கிறதோ, அதை சாதாரணமாகப் படிப்பார்கள். சட்டத் துறையில் நிபுணராகும் வாய்ப்புகள் அதிகமுண்டு. பொருளாதார மேதையாகும் யோகமும் உண்டு.

கல்லூரியில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதில் பிஎச்.டி. வரை முடித்து விட்டு அங்கேயே பேராசிரியராக பணியாற்றும் வாய்ப்புகள் உண்டு. பி.இ. ஆட்டோமொபைல் எஞ்சினியரிங், மெக்கானிகல் என்று சேரலாம். மருத்துவத் துறையில் வயிறு, உளவியல் சம்பந்தமான துறையில் எளிதாக வெற்றி பெறலாம்.

பூச நட்சத்திரத்திற்கு எப்படி சந்திரனோ, அதுபோல ஆயில்ய நட்சத்திரத்திற்கு சூரியன்தான் கல்வியைத் தீர்மானிக்கிறார். எனவே சூரிய பகவானின் சிறப்புக்குரிய தலங்களுக்குச் சென்று வணங்கினால், கல்வியில் உச்சம் பெறலாம். அப்படிப்பட்ட தலங்களில் ஒன்றுதான் சூரியனார்கோவில். இத்தலத்தில் மூலவராகவே சூரிய பகவான் அருள் பாலிக்கிறார். ஜாதகத்தில் சூரியனின் பலம் குன்றியோர்கள் நிச்சயம் இத்தலத்தை தரிசிக்க வேண்டும். கும்பகோணத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் இத்தலம்
உள்ளது.

No comments:

Post a Comment