Monday 9 July 2012

நீ கவலைகளை பரிசளிக்கிறாய்


 
நான் கவிதைகளை பரிசளிக்கிறேன்
நீ கவலைகளை பரிசளிக்கிறாய்


 
எதிர்பாராத நேரங்களில்
எதிர்ப்பட்டு விடுகிறது
உன் கோபமும்
என் கண்ணீரும்

 
என் முகம் மறைத்து
ஓடிவிடவே தோன்றுகிறது
நீ முகம் காட்டும் வேளைகளில்

 
என் கேள்விகளுக்கெல்லாம்
உன் மௌனங்கள்
சரியான பதிலில்லை என்றாலும்
தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன்

 
பொறுமை இழந்து போகிறது
என் மனம்
பெருமை இழந்து போன
நம் காதலால்

 
'என்றாவது என்னை
நீ புரிந்து கொள்வாய்'
உணர்ச்சிகள் மேலிட
நான் பேசுகையில்
உன் கண்கள் காட்டும்
வெறுமைகள்
எனக்கு புரியவேயில்லை

 
பருவமாற்றம் போலவே
மாற்றி மாற்றி உன்னை
வெறுத்ததிலும் விரும்பியதிலும்
வறண்ட வானிலையில்
நம் காதல் நிலா

 
உன்னுடைய எல்லைகளில் நீயும்
என்னுடைய இயலாமைகளில் நானும்
ஊடலும் கூடலுமாய்
விளையாடுகையில்
ஏனோ..
என் நினைவில் வருகிறது
சிறுவயதில் விளையாடிய
'அப்பா அம்மா விளையாட்டு'

No comments:

Post a Comment